புதன், 24 ஜூலை, 2024

முதல்வர் ஸ்டாலின் : அரசைப் பொதுவாக நடத்துங்கள்; பழிவாங்கல் வேண்டாம்” - பிரதமருக்கு முதல்வர் அறிவுறுத்தல்

 hindutamil.in :  சென்னை: "அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டுப் போவீர்கள் என அறிவுறுத்தக் கடமைப்பட்டுள்ளேன்." என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “மத்திய நிதிநிலை அறிக்கையில் ஒரு சில மாநிலங்கள் நீங்கலாகப் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டிக்கும் வகையில் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியுள்ளார்கள்.
பிரதமர் மோடி அவர்களே, “தேர்தல் முடிந்துவிட்டது, இனி நாட்டைப் பற்றியே சிந்திக்க வேண்டும்” என்று சொன்னீர்கள். ஆனால், நேற்றைய பட்ஜெட் உங்கள் ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டைக் காப்பாற்றாது!.



அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டுப் போவீர்கள் என அறிவுறுத்தக் கடமைப்பட்டுள்ளேன்." என்று கூறி நாடாளுமன்ற வளாகத்தில் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் போராடும் வீடியோவை பகிர்ந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

முன்னதாக, இன்று மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இண்டியா கூட்டணி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். பின்னர், வெளிநடப்பும் செய்தனர். இந்த பட்ஜெட்டில் பல மாநிலங்களின் பெயர்கள்கூட குறிப்பிடப்படவில்லை என்றும், மாநிலங்களுக்கு இடையே பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது என்றும் அவர்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.

இதற்கு மாநிலங்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அப்போது அவர், “பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை எனக் கூறி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். நான் மகாராஷ்டிராவைக் குறிப்பிடவில்லை. ஆனால், அந்த மாநிலத்தின் ரூ. 76,000 கோடி மதிப்பிலான துறைமுக திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளோம். பெயர் குறிப்பிடாததால் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாகக் கூற முடியாது.

செலவுக் கணக்கில் திட்டங்கள் வாரியாக நிதி ஒதுக்கீடு குறித்து தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை என்றும், அந்த மாநிலங்களுக்கு எதுவும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் கூறுவது அரசாங்கத்தை கேவலப்படுத்தும் காங்கிரஸின் திட்டமிட்ட முயற்சி. இது ஒரு மூர்க்கத்தனமான குற்றச்சாட்டு.

காங்கிரஸ் ஆட்சிக் கால நிதி அமைச்சர்கள் தங்கள் பட்ஜெட் உரையின் போது அனைத்து மாநிலங்களின் பெயர்களையும் குறிப்பிட்டார்களா? இதற்கு முன்பு ஆட்சி செய்து பல பட்ஜெட்களை தாக்கல் செய்த காங்கிரஸ் இதை புரிந்து கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: