BBC tamil : அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து தற்போதைய அதிபர் ஜோ பைடன் விலகியுள்ளார். தான் சார்ந்த ஜனநாயகக் கட்சி மற்றும் தேசத்தின் நலனுக்காக இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
துணை அதிபராக இருப்பவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் அதிபராவதற்கு தனது ஆதரவையும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
வரும் நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் பைடன் இந்த முடிவை எடுத்துள்ளார்.
குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடும் நிலையில், ஜோ பைடனின் விலகலால் அதிபர் தேர்தலில் புதிய சுவாரஸ்யம் ஏற்பட்டுள்ளது.
ஜோ பைடனின் செயல்திறன் உள்ளிட்டவற்றை விமர்சித்து சொந்தக் கட்சியினரே அவரை போட்டியில் இருந்து விலகுமாறு அழுத்தம் கொடுத்து வந்தனர். ஹாலிவுட் பிரபலங்கள் உள்பட பலரும் ஜோ பைடன் போட்டியில் இருந்து விலக வேண்டும் என்று கூறிவந்தனர். இந்த நிலையில், அவரது அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
தனது ஆதரவை கமலா ஹாரிஸுக்கு ஜோ பைடன் வழங்கியிருந்தாலும் அவர் அதிபர் பதவிக்குப் போட்டியிடுவதற்கான அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.
ஜோ பைடன் கூறியிருப்பது என்ன?
சமூக வலைத்தளமான எக்ஸில் தனது அறிவிப்பை வெளியிட்டுள்ள ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆதரவு தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். மீதமுள்ள எனது பதவிக்காலத்தில் எனது கடமைகளைச் செய்வதில் எனது முழு ஆற்றலையும் செலுத்த முடிவு செய்துள்ளேன். 2020- ஆம் ஆண்டில் கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரிஸை துணை அதிபராகத் தேர்ந்தெடுப்பதே எனது முதல் முடிவு. என்னுடைய இந்த முடிவு சிறப்பானது.”
“இன்று நான் கமலா ஹாரிஸை எங்கள் கட்சியின் வேட்பாளராக முழுமையாக ஆமோதிக்கிறேன். ஜனநாயக கட்சியினர் ஒன்றுபட்டு டிரம்பை தோற்கடிக்க வேண்டிய நேரம்.” என்று ஜோ பைடன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கமலா ஹாரிஸுக்கு ஜோ பைடன் ஆதரவு தெரிவித்திருந்தாலும், அவர் உடனடியாக அதிபர் வேட்பாளராகி விடமுடியாது.
அடுத்து என்ன நடக்கும்?
கமலா ஹாரிஸுக்கு ஜோ பைடன் ஆதரவு தெரிவித்திருந்தாலும், அவர் உடனடியாக அதிபர் வேட்பாளராகி விடமுடியாது.
ஜோ பைடனின் ஆதரவு குறித்து கருத்துத் தெரிவித்துள்ள கமலா ஹாரிஸ், தான் பெருமைப்படுத்தப் பட்டிருப்பதாகவும், அதிபர் வேட்பாளராவதற்கான அனைத்தையும் செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளார்.
பைடனின் அறிவிப்பைத் தொடர்ந்து ஜனநாயகக் கட்சியினர் பெரும்பாலும் கமலா ஹாரிஸை ஆதரிக்க வாய்ப்புள்ளது. எனினும் அதிபர் வேட்பாராகவதற்கு வேறு சிலரும் முயற்சி செய்யக் கூடும்.
ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாடு அடுத்த மாதம் நடக்கும்போது, அதிபர் வேட்பாளர் மற்றும் துணை அதிபர் வேட்பாளர்கள் முறைப்படி அறிவிக்கப்படுவார்கள். நவம்பரில் தேர்தல் நடக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக