tamilmirror.lk - எம்.றொசாந்த் : யாழ்.கொள்ளைக்காரி கைது
யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் கனேடிய தமிழ் குடும்பம் மீது தாக்குதலை மேற்கொண்டு கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனலைதீவை சேர்ந்த தமிழ் குடும்பம் ஒன்று, கனடாவில் குடியுரிமை பெற்று வந்து அங்கு வசித்து வந்த நிலையில், விடுமுறையை கழிக்க அனலைதீவுக்கு கடந்த வருடம் வந்து தங்கியிருந்துள்ளது.
அந்நிலையில் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு , அவர்களிடம் இருந்த வெளிநாட்டு பணம் , நகைகள் , பொருட்கள் , கடவுசீட்டு உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றிருந்தது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்றுறை பொலிஸார் , யாழ்ப்பாணத்தில் இருந்து, பிரத்தியேக படகில் அனலைதீவுக்குச் சென்று தாக்குலை மேற்கொண்டு , கொள்ளையடித்துக்கொண்டு மீள படகில் ஏறி தப்பி சென்றமையை கண்டறிந்தனர்.
அதனை தொடர்ந்து மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில் 03 நபர்களை சந்தேகத்தில் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை , தமக்கு பெண்மணி ஒருவர் பணம் கொடுத்து தம்மை கூலிக்கு அமர்த்தி தாக்குதலை மேற்கொள்ள கோரியதன் அடிப்படையிலையே தாம் தாக்குதல் மேற்கொண்டு கொள்ளையடித்ததாக தெரிவித்துள்ளனர்.
அதனடிப்படையில் குறித்த பெண் மணியை சுமார் ஒன்றரை வருடங்களாக தேடி வந்த பொலிஸார் புதன்கிழமை (24) பெண்மணியை கைது செய்துள்ளனர்.
குறித்த பெண்மணியிடம் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , கனடாவில் உள்ள ஐயப்பன் கோவில் தலைவரே தனக்கு பணம் அனுப்பி தாக்குதல் மேற்கொள்ள கூறியதன் அடிப்படையிலையே தான் வன்முறை கும்பல் ஒன்றுக்கு பணம் கொடுத்து தாக்குதலை மேற்கொண்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதனை தொடர்ந்து குறித்த பெண்ணை வியாழக்கிழமை (25) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய பொலிஸார் , பெண்ணை பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி கோரி விண்ணப்பம் செய்தனர்
பொலிசாரின் விண்ணப்பத்தை ஏற்ற மன்று , பெண்ணனை 48 மணி நேரம் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்க அனுமதித்துள்ளது.
அதேவேளை குறித்த பெண் கிளிநொச்சியை சேர்ந்தவர் எனவும் , அவருக்கு எதிராக ஏற்கனவே கொலை வழக்கொன்றும் , சில மோசடி வழக்குகளும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக