வியாழன், 11 ஜூலை, 2024

சாட்டை துரைமுருகன் கைது! ஸ்டாலின் குறித்து அவதூறு !

 tamil.oneindia.com -  Vishnupriya R  சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் சாட்டை துரைமுருகன் தெரிவித்த கருத்துகளுக்காக பொய் வழக்கு புனைந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கடந்த மூன்றாண்டு விடியா திமுக ஆட்சியில் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், கடத்தல்காரர்கள், பாலியல் வன்கொடுமையாளர்கள் போன்றோர் சுதந்திரமாக நடமாடி வரும் நிலையில், ஆட்சியாளர்களின் தவறுகளை சுட்டிக் காட்டும் சமூக செயல்பாட்டாளர்கள் மீதும், அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் மீதும் சர்வாதிகார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.

தன் கையில் இருக்கும் அதிகாரம், நிரந்தரமானது என்ற இருமாப்போடு, 'இம்' என்றால் சிறைவாசம் 'உம்' என்றால் வனவாசம்... என்ற ரீதியில் வழக்குகள் போட்டு கைது செய்யும் அராஜகம் நாள்தோறும் அரங்கேறி வருகிறது.



நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளில் ஒருவரான திருச்சி சாட்டை துரைமுருகன் அவர்களை, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அவர் தெரிவித்த ஒரு சில கருத்துகளுக்காக பொய் வழக்கு புனைந்து இந்த அரசு கைது செய்து சிறையில் அடைத்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும். அவர் மீதான வழக்குகளை திரும்பப்பெற்று, அவரை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று காவல்துறை கையில் வைத்திருக்கும் விடியா திமுக முதலமைச்சரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியாக உள்ளவர் சாட்டை துரைமுருகன். இவர் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் நடிகை குஷ்பு குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பியதாக தஞ்சை போலீஸாரால் கடந்த 2021 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

இனிமேல் யார் குறித்தும் அவதூறு பரப்பக் கூடாது என்ற நிபந்தனையுடன் இவருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியிருந்தது. அடுத்த சில நாட்களில் குமரி மாவட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு பேசியதாக மீண்டும் கைது செய்யப்பட்டார். அதிலிருந்தும் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

தொடர்ந்து விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் கடந்த 8ஆம் தேதி முடிவடைந்தது. அப்போது இறுதி கட்ட பிரச்சாரத்தின் போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது திமுக தலைவர்கள் குறித்தும் கருணாநிதி குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தெரிகிறது.

இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, திருச்சி சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் தற்போது தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வைத்து தனிப்படை போலீஸார் அவரை கைது செய்துள்ளனர். குற்றாலத்தில் இருந்து சாட்டை துரைமுருகன் திருச்சிக்கு விசாரணைக்கு அழைத்துவரப்பட உள்ளார் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: