புதன், 5 ஜூன், 2024

சைலண்ட்டாக காய் நகர்த்தும் காங்கிரஸ்... பலமடையும் இந்தியா கூட்டணி - பாஜகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

 zeenews.india.com  -   Sudharsan G  :  Lok Sabha Election Result 2024: காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் மம்தா பானர்ஜி ஆகியோர் பாஜக கூட்டணியில் இருக்கும் நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவை தொடர்பு கொள்ள முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சைலண்ட்டாக காய் நகர்த்தும் காங்கிரஸ்
நிதிஷ் குமார் பீகாரில் 14 தொகுதிகளிலும், சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் 16 தொகுதியிலும் முன்னணியில் உள்ளன. இருப்பினும் இந்த இரு கட்சிகளும் பாஜகவின் கூட்டணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் மற்றும் பாஜக இரு கட்சிகளுக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது என்றே தெரிகிறது. இரு கட்சிகளும் மத்தியில் ஆட்சியமைக்க வேண்டும் என்றால் கூட்டணி கட்சிகளின் ஆதரவு நிச்சயம் தேவை.



2004 மற்றும் 2009ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை போன்று ஆட்சியமைக்க இந்தியா கூட்டணி திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக, தற்போதைய இந்திய கூட்டணியில் காங்கிரஸை தொடர்ந்து திமுக, திரிணாமூல், சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் அதிக இடங்களை கைப்பற்றியுள்ளன. தற்போதைய நிலவரப்படி இந்தியா கூட்டணி 230+ தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

மேலும் படிக்க | Lok Sabha Election Result 2024: மேற்கு வங்கம் திரிணாமூல் காங்கிரஸ் கோட்டை..! மீண்டும் நிரூபித்த மம்தா பானர்ஜி - பாஜக 2வது இடம்

யார் பக்கம் சாய்வார் சந்திரபாபு?

எனவே, பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை நெருங்க சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் ஆகியோரின் ஆதரவு நிச்சயம் தேவை எனலாம். இதில் சந்திரபாபு நாயுடுவுமே என்டிஏவில் இருந்து ஏற்கெனவே வெளியேறி இந்த தேர்தலையொட்டியே பாஜகவுடன் மீண்டும் கூட்டணியை புதுப்பித்தார். தற்போது ஆந்திராவில் ஆட்சியையும் கைப்பற்றியிருப்பதால் மத்தியில் தங்களுக்கு இணக்கமானவர்களை வைத்துக்கொள்ளவே சந்திரபாபுவும் விரும்புவார்.

நிதிஷ் குமார் யார் பக்கம்?

நிதிஷ் குமாரும் அதேபோல் இந்தியா கூட்டணியின் உருவாக்கத்தில் இருந்து கூடவே இருந்தாலும் தேர்தலையொட்டி பாஜக பக்கம் சாய்ந்துவிட்டார். எனவே, தற்போதைய நிலையில் அவர் பாஜகவிடமே சேர்வாரா அல்லது இந்தியா கூட்டணி பக்கம் செல்வாரா என்பதும் கேள்வியாக இருக்கிறது. நிதிஷ் குமார் நேற்று பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அவர் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும் தகவல்கள் தெரிவித்தனர்.

போராடும் பாஜக

ஆனால், பாஜக நிச்சயம் இந்தியா கூட்டணிக்கு அந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்காது என்றே தெரிகிறது. பாஜகவும் ஆட்சியமைக்க முடிந்தவரையில் போராடும். யார் ஆட்சியமைத்தாலும் கூட்டணி ஆட்சி என்பதால் அது நிலையான ஆட்சியாக இருக்குமா அல்லது பாதியிலேயே கவிழுமா என்பதே பலரின் கேள்வியாக உள்ளது. 

கருத்துகள் இல்லை: