திங்கள், 3 ஜூன், 2024

தமிழகத்தில் 39 மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை

 மாலை மலர் :  சென்னை 543 தொகுதிகள் கொண்ட இந்திய பாராளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கி கடந்த 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
இதில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. இவ்வாறு மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் நாளை எண்ணப்படுகின்றன. இந்த பணியில் 38 ஆயிரத்து 500 பேர் ஈடுபட உள்ளனர். இதில், வாக்கு எண்ணும் பணியில் 10 ஆயிரம் பேரும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்து வைக்கும் பணியில் 24 ஆயிரம் பேரும், நுண் பார்வையாளர்களாக 4 ஆயிரத்து 500 பேரும் ஈடுபடுகிறார்கள்.



தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணி 39 மையங்களில் உள்ள 43 கட்டிடங்களில் நடைபெற உள்ளது. இந்த மையங்களில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு அறை வீதம் 234 அறைகளில் வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளது. ஒவ்வொரு அறையிலும் 14 மேஜைகள் வீதம் சுமார் 3 ஆயிரத்து 300 மேஜைகளில் இந்த வாக்கு எண்ணும் பணியானது நடைபெற உள்ளது. தேவையான இடங்களில் 14-க்கும் அதிகமான மேஜைகள் பயன்படுத்தப்படும்.

வாக்கு எண்ணிக்கையானது நாளை காலை 8 மணிக்கு அனைத்து மையங்களிலும் தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கப்படும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஒவ்வொரு மேஜையிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, வாக்கு எண்ணும் பணி கண்காணிக்கப்படும்.

ஒவ்வொரு தொகுதிக்கும் நியமிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளர்கள் (ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்) முன்னிலையில் தேர்தல் எண்ணிக்கை நடைபெறும். ஒவ்வொரு சுற்று முடிவிலும் சுற்று வாரியாக வாக்குகளின் எண்ணிக்கை வெளியிடப்படும்.

சென்னையை பொறுத்தவரையில் தென் சென்னை தொகுதியில் 41 வேட்பாளர்களும், மத்திய சென்னை தொகுதியில் 31 வேட்பாளர்களும், வட சென்னைதொகுதியில் 35 வேட்பாளர்களும், திருவள்ளூர் தொகுதியில் 14 வேட்பாளர்களும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 31 வேட்பாளர்களும், காஞ்சிபுரம் தொகுதியில் 11 வேட்பாளர்களும் களம் கண்டுள்ளனர்.

இதில், தென்சென்னை தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணி சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலும், மத்திய சென்னை தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணி நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியிலும், வடசென்னை தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணி மயிலாப்பூரில் உள்ள ராணி மேரி கல்லூரியிலும் நடைபெற உள்ளது.

இதேபோல் திருவள்ளூர் தொகுதிக்கு பெருமாள்பட்டு ஸ்ரீராம வித்யாமந்திரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்லூரியிலும், காஞ்சிபுரம் தொகுதிக்கு பொன்னேரிக்கரையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு என்ஜினீயரிங் கல்லூரியிலும் வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும், வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை (ஸ்டிராங் ரூம்) துப்பாக்கி ஏந்திய மத்திய ஆயுதப்படை போலீசார் கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வருகின்றனர். மேலும், பாதுகாப்பு அறை முழுவதும் கண்காணிப்பு கேமராவால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும், ஒவ்வொரு வேட்பாளர் அல்லது அவரின் பிரதிநிதிகள் வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை கண்காணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பு அறையின் கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் தெரியும் வகையில் மின்னணு திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் அரசியல் கட்சி முகவர்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகார அட்டை வழங்கப்பட்ட பணியாளர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். இவர்களை சீர் செய்வதற்காக சவுக்கு கம்புகளால் வரிசைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும், குடிநீர் வசதி மற்றும் நகரும் கழிப்பறை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அறைக்கான பாதுகாப்பு பணியில் மத்திய ஆயுதப்படை போலீசாருக்கு அடுத்தபடியாக 2-வது அடுக்காக மாநில ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 3-வது அடுக்காக உள்ளூர் போலீசார் வாக்கு எண்ணும் மையங்களின் நுழைவாயில்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையை பொறுத்தவரை 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் தலா ஆயிரம் போலீசார் வீதம் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்த வகையில், தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணும் மையங்களில் சுமார் 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சுமார் 60 ஆயிரம் போலீசார் தமிழகம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். மொத்தத்தில் தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 15 கம்பெனி துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

கருத்துகள் இல்லை: