வியாழன், 6 ஜூன், 2024

சந்திரபாபு நாயுடுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

 nakkheeran.in :  இந்தியாவில் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தல் நடைபெற்றது.
இதற்கான தேர்தல் முடிவுகள் நேற்று (04-06-24) வெளியாகின. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியாக் கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது.
இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், கூட்டணிக் கட்சிகளில் தயவால் பா.ஜ.க கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்கவுள்ளது.
இந்தப் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஆந்திராவில் முதல்வராகப் பதவியேற்கவிருக்கும் சந்திரபாபு நாயுடு, பா.ஜ.கவுடனான கூட்டணியை உறுதி செய்தார்.


அதே வேளையில் இன்று (05.06.2024) பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நிதிஷ்குமாரும், சந்திரபாபு நாயுடுவும், பா.ஜ.கவிடம் பல நிபந்தனை விதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. அதே சமயம் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினும் கலந்துகொண்டார்.
.

இந்நிலையில் டெல்லி விமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடுவுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். மேலும் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றிப் பெற்றதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திரபாபு நாயுடுவுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பக்கத்தில், “டெல்லி விமான நிலையத்தில் கலைஞரின் நீண்டகால நண்பரான சந்திரபாபு நாயுடுவுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, சகோதர மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் ஆந்திரா இடையேயான உறவுகளை வலுப்படுத்த ஒத்துழைப்போம் என்று நம்பிக்கை தெரிவித்தேன். அவர் மத்திய அரசில் முக்கியப் பங்காற்றுவார், தென் மாநிலங்களுக்காக வாதிடுவார், நமது உரிமைகளைப் பாதுகாப்பார் என்று நான் நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: