வியாழன், 6 ஜூன், 2024

தமிழில் ஆங்கில வார்த்தைகளை கலக்க வேண்டிய தேவை உண்டா? ஏன் ?

May be an image of 1 person, smiling, studying, book and text that says '자로 CONSTITUTION INDIA'

Radhika Murugesan  :   ஒரு நண்பர் “ஏன் நீங்கள் ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்துகிறீர்கள்?” என்று கேட்டார். உண்மையில் தமிழை விட எனக்கு ஆங்கிலம் தான் சரளமாக பேசவும் எழுதவும் வரும்!.
என் தாய் வழி முன்னோர் இலங்கையிலிருந்து புரசைவாக்கம் பகுதியில் வந்து குடிபெயர்ந்தனர்.
 பின்பு அடுத்த தலைமுறை இங்கே ஆங்கிலம் வழி கல்வி கற்றனர்.
அதனால் தாய் வழியில் பெரும்பாலானோர் ஆங்கிலம் மட்டுமே பேசுவர்.
அப்பா மதுரையில் பிறந்து 18 வயதில் மெட்ராஸில் கிண்டியில் பொறியியல் படிக்க வந்து சேர்ந்தார்.
அவர் படித்தது தமிழ் வழியில். ஆங்கிலம் அற்புதமாக எழுதுவார்.
ஆனால் சரளமாக பேச வராது.
நான் படித்தது மெட்ராஸில் ஆங்கில பள்ளியில்.
அங்கே ஒரே பாடம் மட்டுமே  தமிழ் மொழி .
வெளியே தமிழ் பேசினால் தண்டனை கட்டணம் 5 பைசா உண்டு.



வீட்டில் அப்பா தவிர அனைவரும் ஆங்கிலத்தில் கதைப்பர்.
இன்னும் கூட என் தாய் “பிடி கொழுக்கட்டையை” “பீடி கொழுக்கட்டை” என்று எழுதுவார்.
என் தாய் மாமா பெரியம்மா சித்தி என அனைவரும் ஆங்கிலத்தில் மட்டுமே கதைப்பர்.

இப்படி இருக்க என் தந்தை எனக்கு பாடம் கற்றுக்கொடுக்கும் போது தினத்தந்தி தினம் படிக்கச் செய்வார். பிழை இருந்தால் மீண்டும் மீண்டும் எழுதி திருத்த வேண்டும்.

பின்பு 22 வயதில் படித்து வேலை செய்வதற்கு இங்கிலாந்து சென்றேன்.
அங்கே ஆங்கிலமே. பின்பு 2021 ஆம் ஆண்டு தாயகம் திரும்பியதும் தமிழ் மறந்தே போயிற்று.

ஆனால் இன்று எழுதும் தமிழ் நான் +2 வரை படித்த அந்த ஒரு பாடம் மட்டுமே.
பின்பு 2021 ஆம் ஆண்டு தொடங்கி தமிழில் வாசிக்கிறேன்.
இதனால் என் தமிழ் இப்போது நன்றாக இருக்குறது. சமீப காலம் வரை ஆங்கிலத்தில் சிந்தித்து தமிழில் பேசுவேன். கடந்த ஒரு வருடமாக கடின உழைப்பால் அதை மாற்றியுள்ளேன்.

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் - ஆங்கிலமும் அந்நிய மொழி - இந்தியும் அந்நிய மொழி - ஒன்று நமக்கு பயன்படுகிறது. மற்றொன்று நம்மை அழிக்கிறது …
 அதனால் ஆங்கிலம் நிச்சயம் ஒரு மொழியாக இங்கே இருக்க வேண்டும்

ராதா மனோகர் : சில விடயங்களில் ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.
இதை வேறொரு கோணத்தில் பார்க்கிறேன்
தமிழ் மொழியில் சைவ வைணவ பக்தி இலக்கியங்கள் ஏராளமாக கலந்து விட்டதால் விரும்ப தகாத பல பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளன
உதாரணமாக யூனிவெர்ஸ் என்பதை தமிழில் அண்டவெளி என்று குறிப்பிட்டால் சாதாரண மக்களுக்கு அதன் அர்த்தம் சிலவேளை புரியாமல் போய்விட கூடிய சாத்தியம் உண்டு
ஏனெனில் அது வழக்கத்தில் இல்லை
மாறாக  பிரபஞ்சம் என்று சொன்னால் இலகுவாக புரிந்து கொள்ளப்படுகிறது
ஆனால் எப்படி அது புரிந்து கொள்ளப்படுகிறது என்பதில்தான் சிக்கலே இருக்கிறது
பிரபஞ்சம் என்றால் எங்கும் நிறைந்துள்ள யுனிவர்ஸ் அல்லது அண்டவெளி என்பதை தாண்டி அதை ஒரு ஆத்மீக விடயமாக அல்லது அது ஒரு வேத புராண கருத்தியல் என்பதாக எல்லாம் யுனிவர்ஸ் மீது எக்கச்சக்கமான எக்ஸ்டரா லக்கேஜுகளை ஏற்றி வைத்துள்ளார்கள்
இந்த சிக்கல்களில் ஆழ்ந்து போகாமல் சுருங்க கூறி விளங்க வைக்க யுனிவர்ஸ் என்று கூறுவது இலகு.
எனது வாழ்வியல் சிந்தனைகள் என்ற நூலில் பல இடங்களில் இந்த சிக்கல் ஏற்பட்டன
அந்த இடங்களில் எல்லாம் வேறு வழியின்றி ஆங்கிலம் கலந்துள்ளேன்

கருத்துகள் இல்லை: