செவ்வாய், 26 மார்ச், 2024

தங்க தமிழ்செல்வன் ஜெயிக்கலனா ராஜினாமா” : அமைச்சர் மூர்த்தி பேச்சு!

 மின்னம்பலம் - Kavi  :  தேனி தொகுதியில் தங்க தமிழ்ச்செல்வன் வெற்றி பெறாவிட்டால் நான் என் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
தேனி தொகுதியில் அதிமுக சார்பில் நாராயணசாமி, திமுக சார்பில் தங்க தமிழ்செல்வன், பாஜக கூட்டணியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகின்றனர்.
இதில் தங்க தமிழ்செல்வன் அதிமுகவிலிருந்து டிடிவி தினகரனுடன் சென்று, அங்கிருந்து திமுகவுக்கு வந்தவர்.  தினகரனுக்கு நெருக்கமானவராகவும், அமமுக கொள்கை பரப்பு செயலாளராகவும் இருந்தவர் தங்க தமிழ்செல்வன்,
தற்போது டிடிவி தினகரனும், தங்க தமிழ்ச்செல்வனும் ஒரே தொகுதியில் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடுகின்றனர். இதனால் தென்மாவட்ட தொகுதிகளைப் பொறுத்தவரைத் தேனி தொகுதி முக்கியமான தொகுதியாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தேனி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் அறிமுக கூட்டம் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி. மூர்த்தி தலைமையில் இன்று (மார்ச் 25)உசிலம்பட்டியில் நடைபெற்றது.

அப்போது பேசிய அவர், “கட்சிக்குச் சிலர் துரோகம் செய்கிறீர்கள். எவ்வளவு பெரிய துரோகம் செய்கிறீர்கள்? யாரை ஏமாற்றுகிறீர்கள்? இந்த தேர்தலுக்கு முறையாக உழைக்க வேண்டும். 6 தொகுதிகளை நான் பார்த்தாலும், சோழவந்தான் தொகுதிதான் இலக்கு.

உண்மையாக வெற்றிக்கு உழைக்க வேண்டும், சோழவந்தான் தொகுதியில் நான் அப்போது உழைத்ததால் நான் இப்போது அமைச்சராகப் பதவி உயர்ந்துள்ளேன்.
எல்லோரும் மக்களைப் போய் சந்தியுங்கள் செல்போனில் மட்டும் வேலை செய்ய வேண்டாம்.

தங்க தமிழ் செல்வன் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறாவிட்டால், எனது அமைச்சர், மாவட்டச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று சவால் விடுத்தார்.
பிரியா

கருத்துகள் இல்லை: