திங்கள், 25 மார்ச், 2024

திமுகவுடன் எந்த மனக்கசப்பும் இல்லை: துரை வைகோ

 மின்னம்பலம் -indhu   :  தி முகவுடன் எந்த மனக்கசப்பும் இல்லை என மதிமுக வேட்பாளர் துரைவைகோ இன்று (மார்ச் 25) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், அதற்கான ஏற்பாடுகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
அந்தவகையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் திருச்சி தொகுதியில் துரை வைகோ போட்டியிட உள்ளார்.
நேற்று  திருச்சி அறிவாலயத்தில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், “செத்தாலும் எங்கள் சின்னத்தில் தான் போட்டிடுவோம்” என்று கண்ணீருடனும் ஆவேசத்துடனும் துரை வைகோ பேசியது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், இன்று (மார்ச் 25) திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துரை வைகோ வேட்புமனுத் தாக்கல் செய்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், “நான் வெற்றி என்ற இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

மக்களின் ஆதரவு கிடைக்கவேண்டும். அதன்பின், மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப நான் செயல்பட வேண்டும் என்பது தான் எனது இலக்கு. நேற்று உணர்ச்சி வசப்பட்டு நான் பேசியதால், திமுகவுடன் எந்த மனக்கசப்பும் இல்லை.

மனிதர்களாக இருந்தால் உணர்வுகள், உணர்ச்சிகள் அனைத்தும் இருக்கத்தான் செய்யும். திமுகவின் அடையாளங்களாக நாங்கள் இருக்கிறோம். இன்று காலையில் கூட அண்ணன் நேரு  வீட்டிற்குச் சென்று, அவரது வாழ்த்துக்களைப் பெற்றுத் தான் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தேன்.

நேரு அவரது மகனைப்போல என்னைப் பாவித்து, ‘நீ வெற்றி பெற்று நன்றாக வரவேண்டும்’ என வாழ்த்தினார். நாங்கள் தேர்தல் பரப்புரையை ஆரம்பித்து விட்டோம். இனி எங்களது கவனம் முழுக்க அதில்தான் இருக்கும்” என துரை வைகோ தெரிவித்துள்ளார்.

இந்து

கருத்துகள் இல்லை: