tamil.oneindia.com - Nantha Kumar R : பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் தான் கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பான முதல் சர்வே முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த சர்வே கர்நாடகாவை ஆட்சி செய்யும் பாஜகவுக்கு ஷாக் அளிப்பதுடன்,
தற்போது எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சி வெற்றியின் விளிம்பில் உள்ளதாக தெரிவித்துள்ளது. இருப்பினும் கூட முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் ஜனதாதளம் (எஸ்) கட்சி தான் ஆட்சியை நிர்ணயம் செய்யும் கிங்மேக்கராக மாற வாய்ப்புள்ளது என சர்வே தெரிவித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்துக்கு கடந்த 2018 ல் சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக, ஜனதாதளம் (எஸ்) என எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியமைக்க தேவையான 113 இடங்களில் எந்த கட்சிகளும் வெற்றி பெறவில்லை. இதனால் தொங்கு சட்டசபை உருவானது.
இருப்பினும் தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்தது. இந்த கட்சி மொத்தம் 104 இடங்களில் வெற்றி பெற்றது. ஆளும்கட்சியாக இருந்த காங்கிரஸ் 78 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஜனதாதளம் (எஸ்) கட்சி 37 இடங்களில் வென்று 3வது இடம் பிடித்தது.
2018 தேர்தலில் நடந்தது என்ன?
இதையடுத்து தேவேகவுடாவின் ஜனதாதளம்(எஸ்) கூட்டணி சேரும் என்ற நம்பிக்கையில் எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்றார். இது நடக்கவில்லை. இதையடுத்து எடியூரப்பா சில நாட்களில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சி கூட்டணி அமைத்தது. முதல்வராக ஜனதாதளம்(எஸ்) சார்பில் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி பொறுப்பேற்றார். இந்த ஆட்சி ஒன்றரை ஆண்டுகள் நீடித்த நிலையில் 16க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவினர். இதனால் கூட்டணி ஆட்சி கவிழ்ந்த நிலையில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்தது. எடியூரப்பா முதல்வரான நிலையில் அவரும் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் பசவராஜ் பொம்மை முதல்வராக செயல்பட்டு வருகிறார். தற்போதைய சூழலில் கர்நாடகாவில் பாஜகவுக்கு 120 எம்எல்ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 72 பேரும் ஜனதாதளம் கட்சிக்கு 30 பேரும் எம்எல்ஏக்களாக உள்ளனர்.
நான்கு முனை போட்டி வாய்ப்பு
இந்நிலையில் தான் கர்நாடக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பணியை ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் பணியை துவங்கி உள்ளன. ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வரும் நிலையில், மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற ஆவலில் காங்கிரஸ் வியூகம் வகுத்து செயல்பட தொடங்கி உள்ளது. இந்த 2 கட்சிகளுக்கு நடுவே தொங்கு சட்டசபை அமைந்தால் கிங்மேக்கராக மாறி ஆட்சியை பிடிக்கும் வகையில் ஜனதாதளம்(எஸ்) கட்சியும் செயல்பட தொடங்கி உள்ளது. இதுதவிர டெல்லி, பஞ்சாப்பில் காங்கிரஸ், பாஜகவை வீட்டுக்கு அனுப்பிய ஆம்ஆத்மியும் இந்த தேர்தலில் களமிறங்க உள்ளது. இதனால் நான்குமுனை போட்டி நிலவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்பாளர்கள் தேர்வு சுறுசுறுப்பு
தற்போதைய சூழலில் ஜனதா தளம் (எஸ்) கட்சி முதற்கட்ட பட்டியலை கடந்த மாதமே வெளியிட்டது. 93 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ராமநகர் மாவட்டம் சென்னபட்டணாவில் குமாரசாமியும், அவரது மகன் நிகில் குமாரசாமி ராமநகரிலும் போட்டியிடுகிறார்கள். காங்கிரஸ் கட்சி இந்த மாதம் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடலாம் என கூறப்படும் நிலையில் பாஜக, ஆம்ஆத்மியும் வேட்பாளர்கள் தேர்வில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இதனால் கர்நாடகா அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
வெளியானது முதல் சர்வே முடிவு
இதற்கிடையே தான் South Pulse People Survey எனும் தேர்தல் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சர்வேயின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பாக முதலில் வெளியாகி உள்ள இந்த சர்வே முடிவு பலருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது. ஏனென்றால் கர்நாடகாவில் எந்த அரசியல் கட்சிக்கும் ஆட்சியமைக்க தேவையான 113 தொகுதிகளில் வெற்றி கிடைக்காது என இந்த சர்வே தெரிவித்துள்ளது. இந்த சர்வே முடிவின் பல்வேறு அம்சங்கள் பின்வருமாறு:
சர்வே முடிவு சொல்வது என்ன?
சவுத் பர்ஸ்ட் எனும் செய்தி இணையதளம் சார்பில் Peoples Pules மற்றும் Cicero அமைப்புகள் இணைந்து த டிசம்பர் 22ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை டிராக்கர் போல் சர்வே நடத்தியது. இந்த சர்வே கடந்த 2018 ம் ஆண்டு நடந்த தேர்தலை தான் பிரதிபலிக்கிறது. அதன்படி தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்க தேவையான சிங்கிள் மெஜாரிட்டி என கூறப்படும் 113 இடங்கள் கிடைக்காது. மாறாக காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும். தற்போது மாநிலத்தில் ஆட்சி செய்யும் பாஜக, 2ம் இடம் பிடிக்கும். காங்கிரஸ், பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் மீண்டும் கிங்மேக்கராக ஜனதாதளம் (எஸ்) கட்சி மாறும். அதாவது ஜனதாதளம் (எஸ்) கட்சி ஆதரவளிக்கும் கட்சி மாநிலத்தில் ஆட்சியை அமைக்கும் என சர்வே தெரிவித்துள்ளது.
கட்சி பெறும் இடங்கள் எவ்வளவு?
இந்த சர்வேயின்படி கடந்த 2018 தேர்தலை ஒப்பிடும்போது 22 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக கிடைக்கும் எனவும், அந்த கட்சி மொத்தம் 101 இடங்களில் வெற்றி பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக பாஜக 91 இடங்களிலும் ஜனதாதளம் (எஸ்) கட்சி வெறும் 29 இடங்களிலும் வெற்றி பெறும் என சர்வே தெரிவித்துள்ளது. அதோடு நடைபெற உள்ள தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 40 சதவீத ஓட்டுக்கள் கிடைக்கும் எனவும், பாஜக 36 சதவீத ஓட்டுக்களையும், ஜனதாதளம் (எஸ்) கட்சி 18 சதவீத ஓட்டுக்களையும் பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0.2 சதவீதத்தில் 13 இடத்தை இழக்கும் பாஜக
மேலும் முந்தைய 2018 தேர்தலில் காங்கிரஸ் கட்சி 38 சதவீத ஓட்டுக்களை பெற்ற நிலையில் இந்த தேர்தலில் 2 சதவீதம் அதிகமாக ஓட்டுக்களை பெறும் எனவும், இதன்மூலம் 22 இடங்களை கூடுதலாக கைப்பற்றும் என அக்கட்சிக்கு பாசிட்டிவ்வான முடிவை சர்வே அளித்துள்ளது. மாறாக பாஜகவுக்கு ஷாக்கான முடிவை இந்த சர்வே வழங்கி உள்ளது. ஏனென்றால் கடந்த தேர்தலில் பாஜக 36.02 ஓட்டுக்கள் பெற்ற நிலையில் இந்த தேர்தலில் 0.2 சதவீத ஓட்டுக்கள் குறைந்து 36 சதவீதம் பெறும் நிலையில் 8 இடங்களை பறிகொடுக்கும் என சர்வே தெரிவித்துள்ளது. மேலும் 2018ம் ஆண்டில் 18.4 சதவீத ஓட்டுக்களை அறுவடை செய்த ஜனதாதளம் (எஸ்) கட்சி 2.4 சதவீத ஓட்டுக்களை இழந்து 16 சதவீத ஓட்டுக்களை மட்டுமே பெறும். இதன்மூலம் கடந்த தேர்தலை ஒப்பிடும்போது இந்த தேர்தலில் 8 இடங்களை பறிகொடுக்கும். இருப்பினும் கூட யாருக்கும் தனித்து ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஜனதாதளம் (எஸ்) கட்சி தான் கிங்மேக்கராக ஆட்சியை நிர்ணயம் செய்யும் என சர்வே தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English summary
With a total of 224 assembly constituencies in the state of Karnataka, the elections will be held in April or May. In this context, the first survey results related to the Karnataka assembly elections have been released. The survey comes as a shock to the ruling BJP in Karnataka, and the current opposition Congress is on the brink of victory. However, former Prime Minister Deve Gowda's Janata Dal (S) is likely to become the ruling kingmaker, according to the survey.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக