புதன், 11 ஜனவரி, 2023

தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகள் என்ன விளைவை உண்டாக்கும் ..ஹிந்து ராம் பேட்டி

BBC News தமிழ்  :  தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் சில பகுதிகளை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தவிர்த்துவிட்டு வாசித்ததும், அதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானமும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. ஆளுநரின் செயல்பாடுகள், அவரது நோக்கம், மாநில அரசியலில் ஆளுநரின் செயல் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவை குறித்து தி இந்து குழுமத்தின் இயக்குநர்களில் ஒருவரான என். ராம், பிபிசி தமிழின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார். அவர் பேசியதிலிருந்து:
கே. திங்கட்கிழமை தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை வாசித்த ஆர்.என். ரவி, அதில் சில பகுதிகளை விட்டுவிட்டு வாசித்தது சர்ச்சையாகியிருக்கிறது. இது மரபு மீறலா?
ப. இந்த ஆளுநரின் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிக்கிறேன். மிகவும் அத்துமீறி, அரசியல் சாஸனத்திற்கு எதிராகச் செயல்படுகிறார். ஆளுநர் இப்படிச் செயல்பட அதிகாரம் கிடையாது. இவர் ஏதேதோ பேசுகிறார்.

அரசியலமைப்புச் சட்டத்தில் தமிழ்நாடு என இருக்கிறது. ஆனால், இவர் தமிழ்நாடு என இருக்க வேண்டாம், தமிழகம் என இருக்கலாம் என்கிறார். திங்கட்கிழமை மிக மோசமாக நடந்துகொண்டிருக்கிறார். அவர் திரும்பப்பெறப்பட வேண்டும்.

எதைப் படிக்கலாம், எதைப் படிக்கக்கூடாது எனத் தீர்மானிக்கும் உரிமை அவருக்கு இல்லை. அமைச்சரவை முடிவுசெய்து எதைக் கொடுக்கிறதோ, அதைத்தான் படிக்க வேண்டும். அவர்கள் கண்ணியமாகத்தான் எழுதியிருக்கிறார்கள். அவர் அதைத்தான் படிக்க வேண்டும். அவர் சில விஷயங்களைப் படித்துவிட்டு, சிலவற்றை விட முடியாது. இவர் மிக மோசமாக நடந்துகொண்டிருக்கிறார். அவர் மட்டுமல்ல, பல ஆளுநர்கள் இப்படித்தான் நடந்துகொள்கிறார்கள். குறிப்பாக கேரள ஆளுநர் போன்றவர்கள்.

ஆர்.என். ரவி இங்கிருக்க தகுதியில்லாதவர். அவர் ஒரு காவல்துறை அதிகாரி. அவருக்கு இங்கிருக்கும் கலாச்சாரம், அரசியல், மொழி போன்றவை புரியவில்லை. தினமும் ஏதோ செய்கிறார். கடந்த காலத்திலும் ஆளுநர்கள் பல தருணங்களில் தவறாக நடந்துகொண்டிருக்கிறார்கள். ஆளுநர் பதவியே இதுபோல ஆகிவிட்டது. தில்லியிலிருந்து உத்தரவு வருகிறதா அல்லது இவரே செய்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால், இவர் செய்யும் விஷயங்கள் விசித்திரமாக இருக்கின்றன. இவர் திரும்பப்பெற வேண்டும்.

கே. ஆளுநர்கள், ஆளுநர் உரையில் தங்களுக்குப் பிடிக்காத சித்தாந்தம் குறித்துவரும்போது, அதைத் தவிர்த்துவிட்டு வாசிக்க முடியுமா?

ப. முடியாது. இவருக்குப் பிடித்ததைத்தான் படிப்பேன், பிடிக்காததைப் படிக்க மாட்டேன் எனச் சொல்ல முடியாது. ஆளுநர் என்பவர் அரசியல் சாஸன ரீதியாக மாநிலத்தின் தலைவர். அவ்வளவுதான். அவருடைய அதிகாரங்கள் மிகக் குறைவு. அரசியல்சாஸனத்தில் அது குறிப்பிடப்பட்டுள்ளது. பல உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளும் இது தொடர்பாக இருக்கின்றன. ஆகவே நான், எனக்குப் பிடித்ததைத்தான் படிப்பேன் எனச் சொல்ல முடியாது. இங்கு பா.ஜ.க. அரசு இல்லை. இங்கு ஒரு பதற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறார்.

கே. ஆளுநர் அவையில் இருக்கும் போதே, அவரைக் கண்டிக்கும் வகையிலோ, ஆளுநர் பேசியதை நீக்கும் வகையிலோ தீர்மானத்தைக் கொண்டுவருவது மரபுகளை மீறிய செயல் என்கிறார்கள் எதிர்க்கட்சிகள்...

ப. கண்டிப்பாக செய்யலாம். இது என்ன பெரிய விஷயமா? ஆளுநர் பெரிய தவறைச் செய்துவிட்டார். அதைச் சரிசெய்ய வேண்டும். ஆகவே அந்தத் தீர்மானத்தைக் கொண்டுவருகிறார்கள். அந்தத் தீர்மானம் கண்ணியமாகத்தானே இருந்தது? ஏதோ குறைசொல்ல வேண்டுமெனச் சொல்கிறார்கள். இப்படிச் சொல்பவர்கள் ஆளுநரை மறைமுகமாக ஆதரிப்பதாகத்தான் நினைக்கிறேன்.

கே. ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் மோதல்கள் நீடிக்கும் நிலையில், மசோதாக்கள் நிலுவையில் உள்ள நிலையில், மாநில அரசுக்கு என்ன வாய்ப்புகள் இருக்கின்றன?

ப.  பல சட்ட உரிமைகள் இருக்கின்றன. அரசியல்சாஸன உரிமைகள் இருக்கின்றன. உச்ச நீதிமன்றம் பல முறை அதைச் சொல்லியிருக்கிறது. மத்திய அரசு ஆளுநரைப் பயன்படுத்தி பல தவறுகளைச் செய்கிறது.  அதனால்தான் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் ஆளுநர் பதவியையே ஒழித்துவிட  வேண்டுமெனச் சொன்னார். இப்படியெல்லாம் நடந்தால் ஆளுநர் பதவியே தேவையில்லை என்றுதான் மக்கள் புரிந்துகொள்வார்கள்.

பட மூலாதாரம், TWITTER/TNDIPR

கே. ஆளுநர் உரை, ஆளுநருக்கு வழங்கப்பட்ட பிறகு அதில் திருத்தங்கள் தேவை என ஆளுநர் கேட்க முடியுமா?

ப. கேட்கலாம். ஆனால், அரசின் முடிவுதான் இறுதியானது.  ஆளுநர் பதவி என்பது ஒரு அலங்காரப் பதவிதான். நாடாளுமன்ற முறையில் அப்படித்தான் இருக்க முடியும். பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறையை நாம் பின்பற்றுகிறோம். அங்கு, அரசு எழுதிக் கொடுப்பதையே அரசர்கள் வாசிப்பார்கள். நம் குடியரசுத் தலைவரும் அதைத்தான் செய்கிறார்.  எந்தக் குடியரசுத் தலைவராவது மாற்றிப் படித்திருக்கிறார்களா? ஆளுநர்களுக்கு அதைவிட குறைவான அதிகாரம்தானே இருக்கிறது. இது அரசியல்சாஸன மரபுகளுக்கு மாறானது.

கே. ஆளுநர் வெளியிலும் தனிப்பட்ட முறையில் பல கருத்துகளைத் தெரிவித்துவருகிறார். அது பல தருணங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தும் விதத்தில் இருப்பதாக ஆளும் தரப்பினர் சொல்கிறார்கள். குறிப்பாக, சமீபத்தில் தமிழ்நாடு - தமிழகம் குறித்த ஆளுநரின் பேச்சுகூட இப்படி சர்ச்சையானது..இதுபோல ஆளுநர்கள் கருத்துக்களைச் சொல்லி, விவாதங்களை ஏற்படுத்த முடியுமா?

ப. இதெல்லாம் பா.ஜ.கவுக்காக செய்யும் விஷயம். அப்படிச் செய்யக்கூடாது. மீறிச் செய்தால், மக்கள் கண்டிப்பார்கள். பொதுவாக ஆளுநரை யாரும் கடுமையாகக் கண்டிக்க மாட்டார்கள். விமர்சிக்க மாட்டார்கள். ஆனால், இதுபோலச் செய்தால், விளைவுகளைச் சந்திக்கத்தான் வேண்டும். பலர் அவருக்கு எதிராகப் பேசுவார்கள். ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டுமென கோரிக்கை வரும். எதும் திட்டமிட்டு செய்கிறாரா, அல்லது தெரியாமல் செய்கிறாரா எனத் தெரியவில்லை. ஆனால், வன்மையாக கண்டிக்க வேண்டிய போக்கு இது.

கே. ஆளுநரின் செயல்பாடுகள், இங்குள்ள பா.ஜ.கவுக்கு பலனளிக்குமா?

ப. பெரும்பாலும் விளைவு எதிராகத்தான் இருக்கும். அவர் தப்புக் கணக்குப் போடுகிறார். அந்தக் கட்சி மீதும் கட்சித் தொண்டர்கள் மீதும் வெறுப்பு ஏற்படும். தவறு செய்கிறார்கள் என்று நினைப்பார்கள். அவர்  சில சமயங்களில் வேண்டுமென்றே செய்கிறார், சில சமயங்களில் தெரியாமல் செய்கிறார். அவருக்கு தமிழ்நாட்டின் வரலாறு தெரியுமா? எப்படி தமிழ்நாடு எனப் பெயர் வந்தது எனத் தெரியுமா?. அவருடைய அர்த்தமில்லாத பேச்சுகளை ஊடகங்கள் விவாதிக்கத்தேவையில்லை.

கே. அரசியல்சாஸன மரபுகளை மீறி ஆளுநர் செயல்படும்போது ஆளும் அரசுக்கு என்ன வழி இருக்கிறது? ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றத்தை நாட முடியுமா?

ப. எதிர்க்கத்தான் வேண்டும். இப்போது செய்ததைப் போல தீர்மானம் கொண்டுவரலாம். எல்லா மசோதாக்களையும் அவர் வைத்துக்கொள்கிறார். தில்லிக்கு அனுப்ப மறுக்கிறார். எத்தனை மசோதாக்கள் நிலுவையில் உள்ளன என்பதே மறந்துவிட்டது. அவருக்கு எதிராக அரசியல் ரீதியாகத்தான் செயல்பட வேண்டும். ஆளுநரைப் பொறுத்தவரை பிரச்சனை ஏற்படுத்த நினைக்கிறார். அவரால் எதுவும் செய்ய முடியாது.

கருத்துகள் இல்லை: