செவ்வாய், 10 ஜனவரி, 2023

ஆளுநர் விவகாரம்: எம்எல்ஏ-க்களை எச்சரித்த முதல்வர் ஸ்டாலின்

 minnambalam.com  -  Selvam  :  ஆளுநருக்கு எதிராக சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் யாரும் எந்தவிதமான கருத்துக்களும் தெரிவிக்கக்கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் துவங்கியது. ஆளுநர் ரவி சட்டமன்ற கூட்டத்தொடரில் தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே வெளிநடப்பு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அதனை தொடர்ந்து நேற்று மாலை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.


இந்தநிலையில், சட்டப்பேரவையின் இரண்டாவது நாளான இன்று மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மறைந்த உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களுக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

சட்டமன்றத்திலிருந்து திமுக உறுப்பினர்கள் அண்ணா அறிவாலயம் வருகை தந்தனர். அங்குள்ள கலைஞர் அரங்கில் காலை 11.15 மணிக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் துவங்கியது. கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர்களிடம், “சட்டமன்றத்தில் தொகுதி பிரச்சனைகளைப் பேச வேண்டும். எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டாலும் தாங்கள் எந்தவிதமான எதிர்வினையும் ஆற்றக்கூடாது. ஆளுநருக்கு எதிராக சட்டமன்றத்தில் யாரும் எந்தவிதமான கருத்துக்களும் தெரிவிக்கக்கூடாது.” என அறிவுறுத்தியுள்ளார். 20 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 11.38-க்கு நிறைவடைந்தது.

செல்வம்

கருத்துகள் இல்லை: