புதன், 18 மே, 2022

முதல்வர் ஸ்டாலினுக்கு சக்கர நாற்காலி பயன்படுத்துவோரின் கோரிக்கைகள்

May be an image of 1 person, sitting and indoor

Gnana Sundari Coimbatore :    கோவை பெண்ணின் நியாயமான கோரிக்கை..
*"இந்த 5 வருட சக்கர நாற்காலி பயணத்தில் பல முறை துணிகள் வாங்க, பொள்ளாச்சியில் எனக்கேற்ற வசதி இல்லாத காரணத்தால் கோவை சென்றுள்ளேன்.. ஆனால் குழந்தைகளுடனே செல்வதால் அவை பெரும்பாலும் மால்களை (Mall) நோக்கியே சென்றுவிட்டன..*
*என் விபத்திற்கு பின், வீட்டில் நடக்கும் முதல் நிகழ்ச்சி என்பதால் குடும்பத்துடன் துணிகள் வாங்க சென்ற வாரமும் கோவை சென்றோம்.*
*குடும்பத்தினரின் விருப்பம் Sree Devi textile, The Chennai silks, Pothys, PSR silks ஆக இருந்ததன் காரணமாக காந்திபுரம் சென்றோம்.*
*கார் விட்டு இறங்கிய பின் தான் தெரிந்தது அங்கு எந்த கடைகளின் முக வாயிலில் சரிவு பாதை (Ramp) இல்லை என்றும், ஒரு சில கடைகளில் 10 படிகளுக்கு மேல் இருக்கின்றன என்றும், இருப்பினும் என்னுடன் அண்ணா மற்றும் மாமா வந்ததன் காரணமாக என்னை தூக்கிவிட்டனர்.*  


*மதிய உணவு உண்ண வெளியே சென்ற போது தான் தெரிந்தது, அங்குள்ள எந்த உணவகங்களிலும் சரிவு பாதை இல்லை என்பது...*
*அதுமட்டுமின்றி அன்று நான் சென்ற எந்த கழிப்பறைகளிலும் சக்கர நாற்காலி செல்ல வசதியும் இல்லை...*
*கோவை போன்ற வளர்ந்து வரும்   நகரங்களிலே இது போன்ற வசதிகள் இல்லை என்பது வேதனையே!!...*
*இதுபோன்ற பல இடங்களில் நான் குடும்பத்துடன் செல்வதால் அவர்கள் உதவியுடன் என் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறேன்.. சில இடங்களில் முடியாமல் திரும்பியதும் உண்டு..*
*தற்போது கோவை மாவட்டத்தில் மட்டும் எனக்கு தெரிந்தே நூற்றிற்கு மேற்பட்ட சக்கர நாற்காலி பயன்படுத்துவோர் உள்ளனர்..*
*அனைவருக்கும் என்னைப் போன்ற குடும்ப ஆதரவு உண்டா என்பதும் கேள்விக்குறியே ??.. பலர் விடுதிகளிலும், இல்லங்களிலும் (Homage, Trust) வாழ்கின்றனர்..*
*தற்போது தான் ஒரு சில சக்கர நாற்காலி பயன்படுத்துவோர் வீட்டை விட்டு வெளியே வந்து படிப்பு, சுயதொழில், வேலை, விளையாட்டு என தனக்கான துறைகளில் திறம்படச் செயல்பட்டு வருகின்றனர்..*
*அவர்களுக்கான தேவைகளை அவர்களே பூர்த்தி செய்யும் வகையில்.. பொது இடங்களான வணிக தளங்கள், வங்கிகள், உணவகங்கள், சுற்றுலா தலங்கள், மருந்து கடைகள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், மண்டபங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் போன்றவற்றில் கட்டாயமாக சரிவுப் பாதைகள் (தற்காலிக பாதைகள் ஆவது) வைக்க வேண்டும் என அரசு முயற்சி எடுக்க வேண்டும்..*
*இவை உடனடியாக மாற்றக் கூடியதோ அல்லது அரசு மட்டுமே செய்ய கூடியதுதோ இல்லை.  இந்த பதிவின் நோக்கமும் அது அல்ல.*
*என் முகநூல் நண்பர்கள் பலர்.. கல்வி நிறுவனங்கள், வங்கிகள், அரசு  மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள், சமூக ஆர்வலர்கள், மற்றும் அரசியல் பிரமுகர்களாக இருப்பதன் காரணமாக அவர்களில் எவரேனும் ஒருவர் செய்யும் சிறு மாற்றம் இனி வரும் காலங்களில் பலரது வாழ்வை மாற்றும் என்ற என் நம்பிக்கைக் காண பதிவு மட்டுமே..*
குறிப்பு: *தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டில் தண்டுவடம் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலி பயன்படுத்துவோர் மட்டுமே சுமாராக வருடத்திற்கு 30 முதல் 50 நபர்கள் (அவர்களின் சராசரி வயது 20 முதல் 40)*
*அது மட்டுமின்றி பக்கவாதம், பெருமூளை வாதம், தசை தேய்வு போன்றவற்றால் சக்கர நாற்காலி பயன்படுத்துவோரும் உண்டு...*
*இப்பதிவு சக்கர நாற்காலி பயன்படுத்துவோரின் சார்பாக என் முயற்சி குரல் மட்டுமே..  இதற்கான தீர்வு உங்களில் இருந்து தொடங்கட்டும்"

கருத்துகள் இல்லை: