புதன், 18 மே, 2022

தஞ்சாவூர் நாகநாதன் பிள்ளை என்கின்ற திரு சு நடேசன் இலங்கையின் முன்னாள் அமைச்சர்!

ராதா மனோகர்  21 மே 1895 -  தஞ்சாவூர் சுப்பையா பிள்ளை நாகநாதன் பிள்ளை என்கின்ற திரு சு நடேசன் முன்னாள் அமைச்சர்!  
தமிழ்நாடு, நாகப்பட்டணத்தைச் சேர்ந்த சுப்பையாவுக்கும்  தஞ்சாவூரைச் சேர்ந்த இலக்கணம் இரா : மசாமிப்பிள்ளையின்  மகளுக்கும் தஞ்சாவூரில் பிறந்தார் நாகநாதன் பிள்ளை
இவர் சட்டம் பயின்று மிகவும் இளமையிலேயே நகராண்மைக்கழக உறுப்பினரானார்.
பின்பு  முத்துக்கிருஷ்ண பரமஹம்சர் என்பவரிடம் வடமொழியும் சைவ சித்தாந்தமும் பயின்று தரிசனத்திரயம் என்ற நூலையும் எழுதினார்
வடமொழியில் காளிதாசர் இயற்றிய  சாகுந்தலாவை தமிழில் சாகுந்தலா காப்பியம் என்ற பெயரில் எழுதினார் ..
சேர் பொன்னம்பலம் ராமநாதன் அருணாசலம் சகோதரர்களுக்கு தமிழகத்தில் இருந்த அருள் பரானந்த சுவாமிகளிடம் நெருக்கம் இருந்தது. இவர் மூலம் இலக்கணம் ராமசாமி பிள்ளையின்குடும்பத்தோடு  ராமநாதன் சகோதர்களுக்கு அறிமுகம் கிட்டியது


சுப்பையா பிள்ளையின் மகன் நாகநாதனின் சைவ சமய அறிவினால் கவரப்பட்ட சேர் பொன்னம்பலம் ராமநாதன் அவரை 1924 இல் இலங்கைக்கு அழைத்து வந்து தனது பரமேஸ்வரா கல்லூரியின் அதிபர் பொறுப்பை ஒப்படைத்தார்  
திரு நாகநாதன் பிள்ளையை நடேச பிள்ளை என்று பெயரை மாற்றி கூடவே தனது அந்தரங்க செயலாளராகவும்  வைத்துக்கொள்கிறார்
இத்தோடு நிற்காமலே தனது மகளான சிவகாமசுந்தரியை நடேச பிள்ளைக்கு திருமணம் செய்து கொடுக்கிறார்

1930 இல் சேர் பொன்னம்பலம் ராமநாதன் காலமாகிவிடவே அவரின் பரமேஸ்வரா கல்லூரி ராமநாதன் கல்லூரி பொன்னம்பலவாணேச்வரர் கோயில் உட்பட சக தர்ம ஸ்தாபனங்களை நிர்வாகிக்கும் பொறுப்பும் இவரிடம் முற்றுமுழுதாக வந்து சேர்ந்து விடுகிறது

1934 இல் டொனமூர் ஆணைக்குழுவின் அடிப்படையில் அமைந்த சட்டவாக்கல்  சபைக்கு காங்கேசன் துறை தொகுதியில் போட்டி இட்டு வெற்றிபெற்றார்
மீண்டும் 1936 நடந்த தேர்தலையும் வெற்றி பெற்றார் .

1946 இல் டி எஸ் சேனநாயக்க எஸ் டபிள்யு பண்டாரநாயக்க ஜெ ஆர் ஜெயவர்தனா போன்றோருடன் சேர்ந்து ஐக்கிய தேசிய கட்சியை ஆரம்பித்தார்

1947 இல் சுதந்திர இலங்கையில் நடந்த முதல் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக காங்கேசன் துறை தொகுதியில் போட்டியிடுகிறார்
இத்தொகுதியில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்பாளராக திரு சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம்(தந்தை செல்வா) போட்டியிடுகிறார்
இதில் பரம்பரை சைவ பெருமகனாக அறியப்பட்ட திரு நடேசனை  திரு  செல்வநாயகம்   தோற்கடித்தார்

1952 இல் நடந்த தேர்தலில் தமிழ் காங்கிரசில் இருந்து பிரிந்து தமிழரசு கட்சியை உருவாக்கி அதன் சார்பில் தேர்தலில் நின்ற செல்வநாயகத்தை  ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட திரு நடேசன் தோற்கடிக்கிறார்

வெற்றி பெற்ற திரு நடேசன்  டட்லியின் அரசில் தபால் தகவல் போக்குவரத்து துறை அமைச்சரானார்
இவர் அமைச்சராக பணிபுரிந்த காலக்கட்டத்தில் உதவி அமைச்சர் குமாரசாமியோடு புது டெல்லிக்கு ஒரு முக்கிய வர்த்தக உடன்படிக்கைக்காக சென்றிருந்தார்  

அதுவரை யாழ்ப்பாண புகையிலை வர்த்தகம்  இந்தியாவுக்கும் அங்கிருந்து பல நாடுகளுக்குக்கும் தாராளமாக நடந்து கொண்டிருந்தது  

இந்த நடைமுறைக்கு மாறாக புதிய இந்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது  

இக்கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு யாழ்ப்பாணம் மலையாள புகையிலை சங்கம் இரு அரசுகளையும் வேண்டி கொண்டிருந்தது

இந்நிலையில் இது பற்றி நேரடியாக இந்திய அரசோடு பேசுவதற்கு டட்லி அரசின் சார்பாக இவர்கள் இந்தியாவுக்கு சென்றனர்

அங்கு இவர்களுக்கு மிகப்பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது

எங்களை மகாராஜாக்கள் போல நடத்தினார்கள்  ராஷ்ட்ரபதி பவனில் எங்களுக்கு விருந்துபசாரங்கள் செய்து எங்களை பிரபுக்கள் போல நடத்தினார்கள்
 குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத்தும் மத்திய அமைச்சர்களும் எங்களோடு மிகவும் அன்போடு நடந்து கொண்டார்கள்
இவையெல்லாம் அவர்களே ரத்மலானை விமான நிலையத்தில் பேட்டியில் கூறியது

புகையிலை போக்குவரத்து தடையும் தற்காலிகமாக நீக்கப்பட்டது
யாழ்ப்பாண புகையிலைக்கும் இலங்கை தமிழர் அரசியல் கலை கலாச்சாரம் சமூகவியல் எல்லாவற்றிற்கும் மிகுந்த தொடர்பு உளள்து என்பதை சற்று கோடி காட்டவே இச்சம்பவத்தை கொஞ்சம் விரிவாக கூறியுள்ளேன்

சைவர்களின் அரசியல் அசைக்க முடியாத அளவு வளமாகவும் அதிகாரம் மிக்கதாவாகவும் இருந்ததது
திரு ஜி ஜி பொன்னம்பலம் (சைவர்) தலைமையில் இருந்த தமிழ் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக வெற்றி பெற்ற எஸ்ஜே வி செல்வநாயகத்தால்  தனியாக தமிழரசு கட்சி வேட்பாளராக வெற்றி பெறமுடியவில்லை

1949 இல் காங்கிரசில் இருந்து பிரிந்து தமிழரசு கட்சியை செல்வநாயகம், திரு.  நாகநாதன்( தந்தை பெயர் ஜான் ஜெபரட்ணம் ஹென்ஸ்மன்) வன்னியசிங்கம் போன்றோர் நிறுவினார்கள்

தமிழர்களுக்கான அரசியல் கட்சியை உருவாக்கினாலும் அப்போது நாகநாதனுக்கும் செல்வநாயகத்திற்கும் தமிழில் பெரிதாக பரிச்சயம் இருக்கவில்லை .. வீடுகளில் ஆங்கிலத்தில்தான் பேசுவார்கள்
சாதாரணமாகவே தமிழில் பேச முடியாதவர்கள் மேடைகளில் எப்படி பேசமுடியும்?
அக்கால சூழலில் இவர்களை ஒரு அரை ஆங்கில கிறிஸ்தவ கனவான்களாகவே மக்கள் அறிந்திருந்தார்கள்

செல்வநாயகம் நாகநாதன் குழுவுக்கு  மிகப்பெரிய தடையாக இருந்தது தமிழ்
தமிழே சரியாக தெரியாமல் வெறுமனே ஆங்கிலத்தில் மட்டுமே பேசவும் எழுதவும் தெரிந்திருந்தது

மறுபுறத்தில் பெரும்பான்மையான சைவர்களை கொண்டிருந்த தமிழ் சமூகத்தில் அரசியல் செய்வேண்டி இருந்தது
முன்பு காங்கிரசில் இவர்கள் இருந்த பொழுது திரு பொன்னம்பலத்தின் சைவமும் தமிழும் மட்டுமல்லாது படித்தவர் பெரிய வழக்கறிஞர் என்பது போன்ற தோற்றங்கள் மக்கள் மத்தியில் இருந்தது
இவர்களின் அரைகுறை தமிழோ கிறிஸ்தவ பின்புலமோ மக்களிடம் பெரிதாக எடுபடவில்லை 

இக்காரணங்களால் 1952 இல் நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளராக போட்டியிட்ட போதும் அசல் சைவ சித்தாந்த பொன்னம்பலவாணேசர் தர்மகர்த்தா நடேசன் வெற்றி பெற்றிருந்தார்
யாழ்ப்பாணத்தில் இருந்த ஆரிய திராவிட பாஷாபிவிருத்தி சங்க தலைவராகவும் இருந்தார்

1956 இல் தமிழரசு கட்சியினர் தம்மை அசல் தமிழ் தேசியவாதிகளாக மறுபதிப்பு செய்துகொண்டனர்.
இந்த தமிழ் தேசிய அவதாரம் தமிழரசு கட்சிக்கும் பிரமாண்ட வெற்றியை குவித்தது   இன்று வரை குவிக்கின்றது

இவர்களின் இலங்கை தமிழ் தேசிய அரசியலின் ஆரம்ப புள்ளியாக இருந்தது இலங்கை திராவிட கழக மேடைகளும்  திராவிட கொள்கையை பரப்புரை செய்த ஏராளமான திரைப்படங்களும் பாடல்களுமாகும்
அன்றைய இளைஞர்களாக திராவிட மேடைகளில் அரசியல் அத்தியாயத்தை தொடக்கி இருந்த எஸ் டி சிவநாயகம் மட்டக்களப்பு ராசதுரை அமிர்தலிங்கம் சு வித்தியானந்தன் போன்ற துடிப்பான இளைஞர்களை செல்வநாயகமும் நாகநாதனும் தங்களின் தமிழரசு கட்சிக்குள் உள்வாங்கி இருந்தமை தமிழரசு கட்சிக்கு  பெரும் பலமாக இருந்தது  என்பது வரலாறு.

இன்னொரு புறத்தில் ஜி ஜி பொன்னம்பலமோ குறிகிய காலத்திலேயே காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலை பரந்தன் ரசாயன தொழிற்சாலை  வாழைச்சேனை காகித தொழிற்சாலை மற்றும் ஆனையிறவு உப்பள அபிவிருத்தி என்று பெரும் தொழிற்சாலைகளை தமிழ் பகுதிகளுக்கு கொண்டுவந்து சேர்த்திருந்தார்

திரு ஜி ஜி பொன்னம்பலத்தின் இச்சாதனைகள் இன்றுவரை முறியடிக்கப்பட்டு வில்லை
ஆனால் இவற்றை எல்லாம் தோற்கடித்து திரு பொன்னம்பலத்தை மீண்டும் மீண்டும் தோற்கடிக்க செல்வநாயகம் நாகநாதன் குழுவுக்கு தமிழ் தேசிய அரசியல் பெரிதும் கைகொடுத்தது

1956 இல் காங்கேசன் துறையில் தோல்வி அடைந்த திரு நடேசன் பின்பு தமிழ் காங்கிரஸ் கட்சியின் செனட்டராகவும் கட்சியின் தலைவராகவும் இருந்தார்
இறுதிவரை அரசின் பல ஆணைக்குழுக்களில் இடம்பெற்று இருந்தார்

முன்னாள் வடமாகாண முதலமைச்சரான திரு விக்னேஸ்வரன்  சேர் பொன்னம்பலம் ராமநாதன் குடும்பத்தின் பேரன் முறையானவர்தான்

இலங்கை தமிழ் தேசிய அரசியலின்  உண்மையான தோற்றுவாயாக இருப்பது சைவத்திற்கும் கிறிஸ்தவத்திரிக்கும் இடையேயான அதிகாரப் போட்டியே என்ற சந்தேகம் எழுகிறது

கருத்துகள் இல்லை: