வெள்ளி, 20 மே, 2022

ராஜீவ் காந்தியுடன் இறந்தோர் குடும்பத்தினர் குமுறல்: "நாங்கள் தமிழர்கள் இல்லையா?"

BBC tamil : முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுவிட்டார்.
இந்தத் தீர்ப்பை அரசியல் கட்சிகள் பலவும் வரவேற்றுள்ள சூழலில், '30 ஆண்டுகளாக நாங்கள் அடைந்துவரும் துயரங்களை அரசும் கண்டுகொள்ளவில்லை' என்கின்றனர் குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி மனித வெடிகுண்டு தாக்குதலால், ராஜீவகாந்தி கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் அவருடன் சேர்த்து 18 பேர் இறந்தனர்.
இந்த வழக்கில் முருகன் என்கிற ஸ்ரீகரன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். குறிப்பாக, மனித வெடிகுண்டு தாக்குதலுக்குப் பயன்பட்ட 9 வோல்ட் பேட்டரியை பேரறிவாளன் வாங்கிக் கொடுத்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
விடுதலையும் சிறைத்துறை உத்தரவும்ஆனால், 'பேட்டரியை எதற்காகப் பயன்படுத்தப் போகிறார்கள் என்பது தனக்குத் தெரியாது' என பேரறிவாளன் கூறிய வார்த்தைகளை நிராகரித்ததால், அவருக்குத் தண்டனை கிடைத்ததாக வாக்குமூலம் வாங்கிய ஐ.பி.எஸ் அதிகாரி தியாகராஜன் தெரிவித்ததும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், அதில் எந்த முடிவையும் எடுக்காமல் ஆளுநர் காலம் தாமதம் செய்து வந்ததாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் முறையிட்டார்.

இந்த வழக்கின் வாதங்கள் நிறைவுற்ற பிறகு நேற்று (மே18 ஆம் தேதி) தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், 'பேரறிவாளனை விடுவிப்பதற்காக 2018 ஆம் ஆண்டு அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது. ஆனால், 161 ஆவது சட்டப்பிரிவின்கீழ் முடிவெடுப்பதில் நீண்ட தாமதம் காரணமாக 142 ஆவது சட்டப்பிரிவின்படி தனக்குரிய அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் பயன்படுத்துகிறது.

    பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் கூறியிருப்பது என்ன?

அதன்படி, 30 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் விடுதலை செய்யப்படுகிறார்' என நீதிபதிகள் குறிப்பிட்டனர். இதனையடுத்து, 'சிறையில் உள்ள மற்ற ஆறு பேரையும் விடுவிப்பதற்கு அரசு போதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்' என அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன.
அனுசுயா
அனுசுயா

அதேநேரம், 'பேரறிவாளனை விடுவித்தது அநீதி' என ராஜீவ்காந்தி படுகொலை சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் பேசி வருகின்றனர். இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய ஓய்வுபெற்ற காவல்துறை ஏ.டி.எஸ்.பி அனுசுயா, ''வெடிகுண்டு சம்பவம் நடந்த காலத்தில் காஞ்சிபுரம் காவல்துறையின் மகளிர் பிரிவில் உதவி ஆய்வாளராக இருந்தேன். போலீஸ் பணிக்கான உடல் தகுதியோடு தேர்வான எனக்கு, காலம் முழுக்க மறக்க முடியாத வேதனையை அந்த ஒரு சம்பவம் கொடுத்துவிட்டது.

இதனால், எனது மார்பில் 5 வெடிகுண்டு சிதறல், கண் பாதிப்பு ஏற்பட்டதோடு, இரண்டு விரல்கள் பறிபோயின. இதனால் வழக்கமாக ஒரு மனிதன் செய்யக் கூடிய எந்த வேலையையும் என்னால் செய்ய முடியாது. நான் பிறப்பால் எந்தவித குறைபாடும் இல்லாமல்தான் பிறந்தேன். தற்போது பாத்திரத்தில் வெந்நீர்கூட தூக்க முடியாமல் தவிக்கிறேன். காலம் முழுக்க இந்த வேதனைகளோடுதான் நான் வாழவேண்டும்'' என்கிறார்.

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக பேசிய அனுசுயா, '' இது மிகவும் அநீதியானது. வெளிநாட்டில் இருந்து வந்து இந்தியாவின் முன்னாள் பிரதமரை கொன்றுள்ளனர். அவர்களோடு சேர்ந்து 16 பேர் கொல்லப்பட்டனர். இவர்களைத் தவிர குற்றவாளிகளில் இருவரும் இறந்துவிட்டனர். இந்தச் சம்பவத்தில் 26 பேருக்குத் தூக்குத் தண்டனை கிடைத்தபோது உற்சாகம் அடைந்தோம்.

அதற்கடுத்து வந்த நாள்களில் உடனடியாக தூக்குத் தண்டனையை நிறைவேற்றியிருக்கலாம். இந்த வழக்கில் உள்ள சட்ட நுணுக்கங்களை வெளிக்காட்டி பேரறிவாளன் தரப்பினர் வாதாடியதால் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துவிட்டது. இவர்கள் செய்த தவறுக்காக நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். குறிப்பாக, மத்திய, மாநில அரசுகளின் மோதலில் இவர் விடுவிக்கப்பட்டுள்ளதாகத்தான் பார்க்கிறேன்,'' என்கிறார்.

மேலும், '' இந்திரா காந்தி கொலை வழக்கில் சிக்கியவர்களை தூக்கில் போட்டனர், காந்தியைக் கொன்ற குற்றவாளியையும் தூக்கில் போட்டனர். ஆனால், ராஜீவ்காந்தியை கொன்றவர்களுக்கு மட்டும் ஏன் சலுகை காட்ட வேண்டும்? பேரறிவாளனை முதலமைச்சரே கட்டித் தழுவுகிறார் என்றால் எப்படி எடுத்துக் கொள்வது?'' எனக் கேள்வியெழுப்புகிறார்.
எங்கள் கருத்தைக் கேட்கவில்லை
அப்பாஸ்

பட மூலாதாரம், Abbas
படக்குறிப்பு,
அப்பாஸ்
அப்பாஸ்

இதையடுத்து, ஸ்ரீபெரும்புதூர் குண்டுவெடிப்பில் இறந்த காங்கிரஸ் பிரமுகர் சம்தானி பேகத்தின் மகன் அப்பாஸிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். ''1991 ஆம் ஆண்டு தென்சென்னை மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவராக என் தாயார் இருந்தார். அப்போது தேர்தல் பிரசாரத்துக்காக ஸ்ரீபெரும்புதூருக்கு வருகை தந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்திக்கு மாலை அணிவித்தார். அந்த நேரத்தில் மனித வெடிகுண்டு தாக்குதலால் எனது தாய் இறந்துவிட்டார். அப்போது எனக்கு பத்து வயது. அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் எனது தந்தையும் இறந்துவிட்டார். கடந்த 30 ஆண்டுகளாக பெற்றோர் இல்லாமல்தான் நானும் என்னுடன் பிறந்த ஐந்து பேரும் வளர்ந்தோம்'' என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், '' பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் நிரபராதியாக வெளியில் வந்தால் ஏற்றுக் கொண்டிருப்போம். ஆளுநர் தாமதம் செய்ததைக் காரணமாக வைத்து வெளியில் வந்துள்ளார். தமிழ்நாடு அமைச்சரவையும் தீர்மானம் நிறைவேற்றியதால் அதனைக் காரணமாக வைத்து விடுதலை செய்துள்ளனர். இந்தப் படுகொலை சம்பவத்தால் பாதிக்கப்பட்ட எங்களிடம் இவர்கள் எந்தக் கருத்தையும் கேட்கவில்லை'' என்கிறார்.
    பேரறிவாளன் விடுதலை: ராஜீவ் காந்தி மரணமும், வழக்கு கடந்து வந்த பாதையும்
    பேரறிவாளன்: எந்த அடிப்படையில் விடுதலை?

''30 ஆண்டு சிறைவாசம் அனுபவித்ததால், மனிதாபிமான அடிப்படையில் விடுதலை வரவேற்கின்றனரே?'' என்றோம். ''இந்தியாவில் மட்டும்தான் இதுபோன்ற குரல்கள் வருகின்றன. சிறு வயதில் இருந்தே பெற்றோரை இழந்த தவிக்கும் எங்கள் மீது யாருக்கும் பரிதாபம் வரவில்லை. முன்னாள் பிரதமரோடு 16 அப்பாவித் தமிழர்களும் கொல்லப்பட்டனர். அவர்கள் எல்லாம் என்ன பாவம் செய்தார்கள்? அந்தக் கூட்டத்துக்குச் சென்றதைத் தவிர அவர்கள் செய்த தவறு என்ன?'' என்று கேட்கிறார் அவர்.
நாங்களும் தமிழர்கள்தானே?

''இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டீர்களா?'' என்றோம். '' இந்த வழக்கில் எங்கள் தரப்பைக் கேட்காமல் எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என நாங்கள் தொடர்ந்த மனுக்களை எல்லாம் தள்ளுபடி செய்துவிட்டனர். மத்திய, மாநில அரசு ஆகியவைகளுக்கு இடையிலான விவகாரமாக மட்டும் வழக்கை எடுத்துக் கொண்டனர். இந்தச் சம்பவத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது நாங்கள்தான். எங்கள் கருத்தையும் கேட்டிருக்க வேண்டும். நானும் எவ்வளவோ போராடிவிட்டேன்.

'ஒருநாள் சிறையில் இருந்து பாருங்கள், கஷ்டம் தெரியும்' என பேரறிவாளன் தரப்பில் கூறுகின்றனர். அவர்களும், எங்கள் வாழ்க்கையை ஒருநாள் வாழ்ந்து பார்க்கட்டும். பேரறிவாளனுக்கு விடுதலை கிடைத்ததை பட்டாசு வெடித்துக் கொண்டாடுகின்றனர். முதலமைச்சரும் அவரைக் கட்டியணைத்து வாழ்த்து சொல்கிறார். இதெல்லாம் எந்த மாநிலத்தில் நடக்கிறது? எங்களுக்கும் ஸ்டாலின்தானே முதலமைச்சர், நாங்கள் தமிழர்கள் இல்லையா?'' என்றார்.

''உங்கள் தாய் இறந்ததற்கு நிவாரணம் எதுவும் கிடைக்கவில்லையா?'' என்றோம். '' அப்படி எதுவும் கிடைக்கவில்லை. குண்டுவெடிப்பு சம்பவத்தில் இறந்த ஒன்பது போலீசார் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்குக் காவல்துறையில் பணி கிடைத்துவிட்டது. வேறு சிலருக்கு மூப்பனார் செய்த உதவி காரணமாக எரிவாயு ஏஜென்சி கிடைத்தது.

நாங்கள் சிறியவர்களாக இருந்ததால் எதுவும் வந்து சேரவில்லை. 30 ஆண்டுகளாக சிரமப்பட்டுத்தான் வாழ்ந்து வருகிறோம். தற்போது அம்பத்தூர், பாடி பகுதியில் கடிகார கடை ஒன்றை நடத்தி வருகிறேன். குண்டுவெடிப்பில் இறந்த சிலரது குடும்பங்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாததால் அவர்கள் சீரழிந்துவிட்டனர்'' என்கிறார்.
தி.மு.க சொல்வது என்ன?
சூர்யா வெற்றிகொண்டான்

குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களின் குமுறல் குறித்து தி.மு.க செய்தித் தொடர்பாளரும் தலைமைக் கழக வழக்குரைஞருமான சூர்யா வெற்றிகொண்டானிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். ''வெடிகுண்டு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களில் சோனியா காந்தியின் குடும்பத்தினர் மிக முக்கியமானவர்கள். அவரது பிள்ளைகளே, 'இத்தனை ஆண்டுகாலம் சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டீர்கள். உங்களை மன்னித்துவிட்டோம். நீங்கள் திருந்தி வாழ்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்தால் அதனை மனப்பூர்வமாக வரவேற்கிறோம்' எனக் கூறிவிட்டனர். இதுதொடர்பாக, வேலூர் சிறையில் நளினியை சந்தித்துப் பிரியங்கா காந்தி பேசினார். அவரை நாங்கள் சிறைக்குக் கூட்டிச் சென்று பார்க்க வைக்கவில்லை'' என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், '' சட்டப்பிரிவு 161-ஐ பயன்படுத்துவது என்பது மாநில அரசின் அதிகாரம் எனக் கூறிய பிறகும் பலவகைகளில் ஆளுநர் இடையூறு செய்தார். இதனால் அரசியமைப்புச் சட்டத்துக்கு உரிய மரியாதையே போய்விட்டது. எனவே, 'அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் காலதாமதம் செய்தது தவறானது' என்று நீதித்துறை கூறிவிட்டது. மேலும், '161 ஆவது பிரிவை பயன்படுத்தாததால் சட்டமன்றத்துக்கான மாண்பை காப்பாற்ற வேண்டும்' எனக் கூறி பேரறிவாளனை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது,'' என்கிறார்.
நிரபராதி என்பதால் கட்டித் தழுவினார்

''பேரறிவாளனை முதல்வர் கட்டியணைத்ததை விமர்சிக்கிறார்களே?'' என்றோம். '' பேரறிவாளனை நேரில் சந்தித்ததும் முதல்வர் கட்டியணைக்க சில காரணங்கள் உள்ளன. இந்த வழக்கில் பேரறிவாளனின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த ஐ.பி.எஸ் அதிகாரி தியாகராஜன், அவரது வாக்குமூலத்தைத் தவறுதலாக பதிவு செய்யப்பட்டதாகக் கூறியுள்ளார். அவரே கூறிய பிறகு அற்புதம்மாள் தொடர்ந்து பேசி வந்த வாதத்துக்கு வலு சேர்க்கும் வகையில், 'பேரறிவாளன் நிரபராதி' என்ற பார்வை திரும்பியது. அந்த அடிப்படையில் ஓர் அப்பாவி தவறாக சிறையில் சிக்கிவிட்டதை உணர்ந்து, முதல்வர் கட்டித் தழுவினார்.

அந்த 3 நிமிட சம்பவத்தால் பேரறிவாளனின் 30 ஆண்டு சிறைவாசம் மறந்துவிட்டது. இது புனையப்பட்ட வழக்கு என ஐ.பி.எஸ் அதிகாரியே கூறிவிட்டதால், நிரபராதி என்ற உணர்வின் அடிப்படையில் கட்டித் தழுவினார்'' என்கிறார். மேலும், '' பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கான நீதி எதுவென்றால், இந்த வழக்கில் சிறையில் உள்ளவர்கள் 30 ஆண்டுகால சிறைவாசத்தை அனுபவித்ததுதான்'' என்கிறார்

கருத்துகள் இல்லை: