திங்கள், 16 மே, 2022

ரஷியா ரெனால்ட் நிறுவன சொத்துக்களை தேசியவுடைமையாக அறிவிப்பு

 மாலைமலர் : உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவில் இயங்கி வந்த கார் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது உற்பத்தியை நிறுத்தின.
12.44: உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷியா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடை விதித்தன. ரஷியாவில் இயங்கி வந்த கார் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது உற்பத்தியை நிறுத்தின. ஃபிரெஞ்ச் கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் ரஷியாவை விட்டு வெளியேறியது. இதையடுத்து ரஷியாவில் இயங்கி வந்த ரெனால்ட் நிறுவனத்தின் சொத்துக்களை தேசியவுடைமை ஆக்குவதாக ரஷியா அறிவித்துள்ளது.


10.02: உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா, அந்நாட்டின் கார்கிவ் நகரத்தின் மீது நடத்தி வந்த தாக்குதலில் இருந்து  நேற்று பின் வாங்கியது. இதனால் கார்கிவ் நகரத்தில் இருந்து வழங்கப்பட்டு வந்த எரிபொருள் விநியோகத்தை மீண்டும் உக்ரைன் தொடங்கியுள்ளது.  போரினால் சேதமடைந்த 2 விநியோக நிலையம் சரி செய்யப்பட்டு, 3000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.

04.20: ரஷிய அதிபர் புதினை வீழ்த்த சதி நடப்பதாக உக்ரைன் ராணுவ மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ் தெரிவித்துள்ளார்.

ஸ்கை நியூஸ் நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் உக்ரைன் ரஷியா போர் ஒரு திருப்புமுனையை எட்டும் என்றும்
இந்த ஆண்டு இறுதிக்குள் போர் முடிவடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த போரில் ரஷியா தோல்வி அடைந்தால், அதிபர் பதவியில் இருந்து புதின் அகற்றப்படுவார் என்றும் இதன் மூலம் ரஷியா வீழ்ச்சி அடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதின் மிகவும் மோசமான உளவியல் மற்றும் உடல் நிலை பாதிப்பில் இருப்பதாகவும்,  புடானோவ் கூறியுள்ளார்.

02.50: ரஷியாவிற்கு எதிராக தொடர்ந்து போரிட உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்கப்படும் என்று நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ளது.

பெர்லினில் நடந்த அந்த அமைப்பின் வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தில், பேசிய ஜெர்மனி வெளியுறவுத்துறை மந்திரி அன்னலெனா பேர்பாக், உக்ரைன் தற்காப்புக்கு தேவைப்படும் வரை ராணுவ உதவியை ஜெர்மனி வழங்குவதாக கூறினார்.

ரஷியாவிற்கு எதிரான போரில் உக்ரைன் வெற்றி பெற முடியும் என்றும், உக்ரைன் படையினர் தங்களது தாயகத்தை பாதுகாக்க தைரியமாக போரிட்டு வருவதாகவும்,நேட்டோ அமைப்பின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.

12:40: ரஷிய அதிபர் புதின் இரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பிரிட்டனை சேர்ந்த முன்னாள் உளவாளி கிறிஸ்டோபர் ஸ்டீல் தெரிவித்துள்ளார்.

எனினும் அவரை பாதித்துள்ள நோயை குணபடுத்த முடியாமா, முடியாதா என்பது தெரியவில்லை என்றும், தமக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் புதின் கடுமையாக நோய்வாய்பட்டுள்ளார் எனவும் கிறிஸ்டோபர்  குறிப்பிட்டுள்ளார்.

15.05.2022

23.30: உக்ரைனை சேர்ந்த ஒலிம்பிக் வீராங்கனை ரஷியாவிற்கு எதிரான போரிடும் தமது நாட்டு ராணுவத்தில் சேர விரும்புவதாக கூறியுள்ளார். 22 வயதான கிறிஸ்டினா டிமிட்ரென்கோ,  2016 யூத் ஒலிம்பிக் போட்டிகளில் பயத்லான் விளையாட்டில் தங்கம் வென்றுள்ளார். ரஷியப் படைகளுக்கு எதிரான போரிட்டு தனது தாய்நாட்டைப் பாதுகாக்க தனது திறமைகளைப் பயன்படுத்த விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

16:00: நேட்டோ அமைப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்க முடிவு செய்திருப்பதாக பின்லாந்து அதிபர் சவுலி நினிஸ்டோ உறுதி செய்துள்ளார். பின்லாந்துடன் நீண்ட நில எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ரஷியா, இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேட்டோ கூட்டணியில் இணைவது தவறு என்றும், அது இருதரப்பு உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ரஷியா கூறியுள்ளது.

15:30: பெர்லினில் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கனை சந்தித்ததாகவும், அமெரிக்காவில் இருந்து அதிக ஆயுதங்கள் மற்றும் பிற உதவிகள் உக்ரைனுக்கு வரவுள்ளதாகவும் உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி திமித்ரோ குலேபா தெரிவித்தார்.
 
15:00: உக்ரைனின் லிவிவ் பகுதியில் உள்ள ராணுவ உள்கட்டமைப்பு மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக கவர்னர் தெரிவித்துள்ளார்.

14:30: உக்ரைனில் ரஷியாவின் தாக்குதல் வேகத்தை இழந்துவிட்டது என்றும், உக்ரைன் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து அதன் தரைப்படையில் மூன்றில் ஒரு பங்கை இப்போது இழந்துவிட்டதாகவும் பிரிட்டன் கூறி உள்ளது. கண்காணிப்பு மற்றும் உளவுத்துறை சாதனங்களில் பெருமளவு இழப்பு ஏற்பட்டதால், அவர்களின் முன்னேற்றம் தடைபட்டதாகவும் பிரிட்டன் கூறுகிறது.

14.00: உக்ரேனிய ராப் மற்றும் நாட்டுப்புற இசைக்குழு கலுஷ் ஆர்கெஸ்ட்ரா அவர்களின் ஸ்டெபானியா பாடலுடன் யூரோ விஷன் பாடல் போட்டியில் வென்றது.

2004-ல் பாடகர்களான ருஸ்லானா மற்றும் 2016-ல் ஜமாலா ஆகியோருக்குப் பிறகு உக்ரைன் யூரோ விஷனை வென்றது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: