புதன், 18 மே, 2022

தமிழ்நாட்டில் இருந்து நிவாரண பொருட்களுடன் இலங்கை செல்லும் Tan Binh 99 கப்பல்

டான் பின் 99 கப்பலில் இலங்கை செல்லும் நிவாரண பொருட்கள்!

மின்னம்பலம் : இலங்கை செல்லும் நிவாரண பொருட்கள்!
டான் பின் 99 கப்பலில் இலங்கை செல்லும் நிவாரண பொருட்கள்!
தமிழக அரசு அறிவித்த நிவாரண பொருட்களுடன் சென்னையிலிருந்து இலங்கைக்கு இன்று கப்பல் புறப்படுகிறது.
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்து வருகிறது. இதையடுத்து இலங்கை மக்களுக்கு உதவுவதற்காகத் தமிழக சட்டப்பேரவையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
80 கோடி ரூபாயில் 40 ஆயிரம் டன் அரிசி, 28 கோடி ரூபாயில் உயிர் காக்கக் கூடிய 137 மருந்து பொருட்கள், 15 கோடி ரூபாய் மதிப்பில் 500 டன் பால் பவுடர் ஆகியவை இலங்கைக்கு அனுப்பத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசிடம் தமிழக அரசு ஒப்புதல் வழங்கியது.


மொத்தம் 123 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதன்படி தமிழகத்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களை பேக்கிங் செய்யும் பணி நடைபெற்று வந்தது.
அதோடு நிவாரணப் பொருட்கள் சென்னை துறைமுகத்தில் அம்பேத்கர் கப்பல் நிறுத்துமிடத்தில் உள்ள டபிள்யூ கியூ 4 பெர்த்தில் நிறுத்தப்பட்டுள்ள டான் பின் 99 என்ற கப்பலில் ஏற்றும் பணி கிரேன் உதவியுடன் நடைபெற்று வருகிறது.

ரூ.8.87 கோடி மதிப்பிலான 55 வகையான மருந்து பொருட்கள், 2 சிறப்பு மருந்துகள் 700 அட்டைப் பெட்டிகளில் அனுப்பி வைக்கப்படுகிறது. இதில் 7 வகையான மருந்து பொருட்கள் குளிர்சாதன வசதியுடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதால் அதற்கு ஏற்ப பேக்கிங் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கப்பலில் நிவாரணப் பொருட்களை ஏற்றும் பணி இன்று பகல் நிறைவடைந்ததும் மாலை 5 மணிக்குச் சென்னை துறைமுகத்திலிருந்து இலங்கை கொழும்பு துறைமுகத்திற்கு இந்த கப்பல் புறப்பட உள்ளது. அதற்காக ஆவணங்கள் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இன்று மாலை 5 மணிக்கு கப்பலை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து வழி அனுப்பி வைக்க உள்ளார். இந்த கப்பல் சென்னையிலிருந்து புறப்பட்ட அடுத்த 44 மணி நேரத்தில் கொழும்பு துறைமுகத்தைச் சென்றடையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

-பிரியா

கருத்துகள் இல்லை: