ஞாயிறு, 12 ஜனவரி, 2020

திமுகவை மாநில கட்சி என்று குறுக்கிவிட முடியாது- அந்தமானில் ஸ்டாலின் முழக்கம் .. வீடியோ


.hindutamil.in/ : ஒட்டுமொத்த நாட்டுக்காகவும் போராடி வரும் திமுகவை மாநிலக் கட்சி என்று குறுக்கிவிட முடியாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அந்தமானில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்து அவர் பேசியதாவது:
கருணாநிதியின் சிலையைத் திறந்து வைப்பதற்காக ஆயிரம்கடல் மைல் கடந்து வந்திருக்கிறேன். 2013-ல் அண்ணாவின் சிலையை அந்தமானில் திறந்துவைத்தேன். இப்போது கருணாநிதியின் சிலையைத் திறந்து வைத்திருக்கிறேன்.
தமிழகத்தைப் போலவே அந்தமானிலும் திமுக வளரவேண்டும் என்று உழைக்கும்அனைவரையும் பாராட்டுகிறேன். அந்தமான் தீவில் அதிகஅளவில் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். திமுகவின் முயற்சியால் இன்று அந்தமானில் 8-ம் வகுப்பு வரை தமிழ் படிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

தமிழ் மன்னர்கள் காலத்தில் தமிழ் வாழக்கூடிய இடங்களில் எல்லாம் அவர்களது ஆட்சி விரிந்து, பரந்து பரவியதைப் போல, தமிழர்கள் வாழக்கூடிய இடங்களில் எல்லாம் திமுகவின் கொடி பட்டொளி வீசி பறக்கக் கூடிய காலம் உருவாகிக் கொண்டிருக்கிறது.
இங்கே பேசிய அந்தமான் திமுக நிர்வாகிகள், தமிழகத்தில் 39, புதுச்சேரியில் 1 என 40 மக்களவைத் தொகுதிகள் என்று பேசுகிறீர்கள்.
இனி அந்தமானையும் அந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றனர். இனி திமுக – காங்கிரஸ் கூட்டணியில் அந்தமானும் நிச்சயம் வரும். 41 இடங்களில்இப்போது 40 இடங்களில் வெற்றிபெற்று இன்றைக்கு நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கிறோம். ஏனெனில் அந்தமானில் வென்ற காங்கிரஸ் எம்.பி. சென்னை வந்து, தனது வெற்றிக்கு திமுக
தான் காரணம் என்றார்.
திமுகவும், திமுக எம்.பி.க்களும் தமிழகத்துக்காக, தமிழினத்துக்காக மட்டுமின்றி இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்தப் பிரச்சினைகளுக்கும் போராடி வருகிறோம். திமுகவைமாநிலக் கட்சி எனக் குறுக்கிவிட முடியாது. நாட்டின் 3-வது பெரிய கட்சியாக திமுக உருவெடுத்துள்ளது.
மற்ற மாநிலங்களில் ஏதேனும் பிரச்சினைகள், மறியல், பேரணி, கூட்டம் என்றால் திமுகவைத்தான் முதலில் அழைக்கிறார்கள். எந்த மாநிலத்திலாவது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அமைச்சரவை பதவி ஏற்கிறது என்றால், அந்த விழாவுக்கு என்னை அழைக்கிறார்கள். இது திமுகவுக்கு கிடைத்த பெருமை. தமிழர்களுக்கு கிடைத்திருக்கும் பெருமை. அந்தமானில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் திமுக மிகப் பெரிய வெற்றியைப் பெற வேண்டும். அந்த வெற்றி விழாவுக்கும் நான் வருவேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்

கருத்துகள் இல்லை: