வியாழன், 16 ஜனவரி, 2020

பொங்கல் இந்து பண்டிகை; இஸ்லாமிய மாணவர்கள் கொண்டாட கூடாது' - மலேசிய அரசு


பிரதமர் மகாதீர் மொஹமத்மலேசிய மனிதவளத் துறை அமைச்சர் குலசேகரன்BBC :பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களில் இஸ்லாமிய மாணவர்கள் பங்கேற்கக் கூடாது என்று அறிவுறுத்தி மலேசிய கல்வித்துறை சார்பில் அந்நாட்டில் இயங்கும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்படுவது என்றும், அதற்கும் இஸ்லாத்துக்கும் எந்தவகையிலும் தொடர்பில்லை என்றும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மலேசிய ஊடகங்ககள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜனவரி 13ஆம் தேதியிட்ட இந்தச் சுற்றறிக்கை மலேசியக் கல்வி அமைச்சகத்தின் சார்பாக அனைத்து மாநில கல்வித்துறை இயக்குநர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இஸ்லாமிய வளர்ச்சித் துறை சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் பொங்கல் பண்டிகையானது ஒரு சமயப் பண்டிகை என்றும், அதில் இஸ்லாமியர்கள் பங்கேற்கக் கூடாது என்றும் முடிவெடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை பள்ளிகளில் கொண்டாட எந்தவிதத் தடையுமில்லை என மலேசிய கல்வி அமைச்சகம் புதன்கிழமை (ஜனவரி 15) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
“கடந்த 13 ஜனவரி 2020 தேதியிட்ட கல்வி அமைச்சகத்தின் சுற்றறிக்கைக் கடிதம், இதுபோன்ற கொண்டாட்டங்களில் தங்களின் பிள்ளைகள் பங்கு பெறுவது தொடர்பில் இஸ்லாமியப் பெற்றோர்கள் கொண்டிருந்த கவலையைத் தணிக்கும் விதத்திலேயே அனுப்பப்பட்டது. அந்தக் கடிதம் ஜாக்கிம் எனப்படும் மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு இலாகாவின் நிலைப்பாடு மற்றும் வழிகாட்டுதல்கள் அடிப்படையிலேயே வெளியிடப்பட்டது,” என்றும் கல்வி அமைச்சகத்தின் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

இடைக்கால கல்வி அமைச்சராக பிரதமர் மகாதீர் மொஹமத்

மலேசிய கல்வி அமைச்சுக்குப் பொறுப்பேற்றிருந்த மஸ்லி அண்மையில் பதவி விலகினார். இதையடுத்து கல்வி அமைச்சுக்கு இடைக்கால அமைச்சராகக் கூடுதல் பொறுப்பேற்றுள்ளார் பிரதமர் மகாதீர் மொஹமத்.
பிரதமருக்குத் தெரியாமல் இப்படியொரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டதா எனும் கேள்வி எழுந்துள்ளது.


சீனப் புத்தாண்டு நெருங்கி வரும் நிலையில் மலேசியா முழுவதும் அதற்கான கொண்டாட்டங்களுக்கு சீனர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கூடங்களில் சீனப் புத்தாண்டை வரவேற்கும் விதமாக லாந்தர் விளக்குகளை வைக்கக்கூடாது என அண்மையில் ஒரு தரப்பினர் வலியுறுத்தினர்.
அதற்கு முன்னதாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இஸ்லாமியர்கள் யாரும் வாழ்த்துத் தெரிவிக்க வேண்டாம் என்று மத போதகர் ஜாகிர் நாயக்கின் பழைய சமூக ஊடகப் பதிவு ஒன்றைச் சிலர் மறுபதிவு செய்தது சர்ச்சையானது.

‘பிரதமருக்குத் தர்மசங்கடம் ஏற்படுத்தும் முயற்சியா?’

கல்வித்துறை சார்பாக சுற்றறிக்கை அனுப்பிய அதிகாரி தமது பதவியிலிருந்து விலகவேண்டும் என வலியுறுத்தி உள்ளார் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி.
இத்தனை ஆண்டு காலமாக மலேசியாவில் பொங்கல் பண்டிகை எந்தவித சர்ச்சைக்கும் இடமளிக்காமல் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் திடீரென பிரச்சனை எழுப்பக் காரணம் என்ன, இது பிரதமருக்குத் தர்மசங்கடம் ஏற்படுத்தும் முயற்சியா என்று கேள்விகளை எழுப்புகிறார் பேராசிரியர் ராமசாமி.



அக்குறிப்பிட்ட சுற்றறிக்கையைப் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள மலேசியக் கல்வித் துறை, இஸ்லாமிய வளர்ச்சித் துறை வல்லுநர்களை உள்ளடக்கிய குழு ஒன்று கடந்தாண்டு ஏப்ரல் மாதம் கூடி விவாதித்ததாகவும், அதில் பொங்கல் பண்டிகை இஸ்லாத்துக்கு எதிரானது என்பதால் அதில் இஸ்லாமியர்கள் பங்கேற்கக்கூடாது என முடிவு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
இஸ்லாமிய மாணவர்கள் பொங்கல் கொண்டாட்டங்களில் நிச்சயமாக பங்கேற்கக்கூடாது என்றும் அதே வேளையில் பண்டிகையைக் கொண்டாடுபவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க அனுமதிக்கப்படுவதாகவும் அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டும் ராமசாமி இன உணர்வுகளைத் தூண்டும் வகையிலான செயல்பாடுகளை ஏற்க இயலாது என்றார்.


Image caption மலேசிய மனிதவளத் துறை அமைச்சர் குலசேகரன்
இந்த விவகாரம் குறித்து மலேசிய மனிதவளத் துறை அமைச்சர் குலசேகரனை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியது. அப்போது இதுகுறித்து அமைச்சரவையின் கவனத்துக்குக் கொண்டு செல்ல இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
“வேளாண்மைக்கு உதவிய இயற்கைக்கு உழவர்கள் நன்றி தெரிவிக்கும் பொங்கல் விழா மலேசியாவிலும் காலங்காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது,” என்றார் அமைச்சர் குலசேகரன்.

‘இந்து பண்டிகை அல்ல; தமிழர் பண்டிகை’

“பொங்கல் என்பது பெரும்பாலும் இந்துக்களால் கொண்டாடப்படுவது உண்மைதான் என்றும், அதில் ஓர் அங்கமாக சூரியனை வணங்கும் நிகழ்வும் உள்ளது என்றும் குறிப்பிட்ட அவர், அதற்காக இதை சமயம் சார்ந்த பண்டிகை என்று கூறிவிட இயலாது. இது தமிழர்களின் கலாசாரம் சார்ந்த பண்டிகையாகவே கருதப்பட வேண்டும்,” என்று பிபிசி தமிழிடம் மலேசிய இந்து சங்கத் தலைவர் மோகன் ஷான் தெரிவித்தார்.
பெரும்பாலும் தமிழ்ப் பள்ளிகளில் மட்டுமே பொங்கல் விழா கொண்டாடப்படும். அப்படி இருக்கையில் எதற்காக அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்? அப்படியானால் தமிழ்ப் பள்ளிகளில் பொங்கலுக்காக விழா எடுக்கக்கூடாது என்கிறார்களா? அண்மைக் காலமாக நடப்பதை எல்லாம் பார்க்கும்போது மக்கள் மத்தியில் மோதல் ஏற்படுத்தும் நோக்கத்துடன் சிலர் ஒரு குழுவாகச் செயல்படுகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது என்றார் மோகன் ஷான்.

சமத்துவப் பொங்கல்

முன்னாள் பிரதமர் நஜீப்பின் ஆட்சிக்காலத்தில் நாடு முழுவதும் அரசாங்கத்தின் ஆதரவுடன் ‘ஒரே மலேசியா பொங்கல் விழா’ (SATU MALAYSIA PONGAL) கொண்டாடப்பட்டது.
மேலும் நாடு முழுவதும் சமத்துவப் பொங்கல் என்ற பெயரிலும் கொண்டாடப்பட்டது. மலாய்க்காரர்கள், சீனர்களும் இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.
சர்ச்சைகளையும் மீறி வழக்கம் போல் இந்தாண்டும் மலேசியாவில் பொங்கல் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
மலேசிய பிரதமர் மகாதீர் மொஹமத் அந்நாட்டிலுள்ள இந்திய, தமிழ் வம்சாவளியினருக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து மலாய் மொழியில் காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
bbc

கருத்துகள் இல்லை: