ஞாயிறு, 12 ஜனவரி, 2020

மோடியை சந்தித்த மம்தா பாணர்ஜிக்கு மாணவர் அணியினர் எதிர்ப்பு


  தினத்தந்தி : பிரதமர் மோடியை சந்தித்த மம்தா பாணர்ஜிக்கு திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் மாணவர் அணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கொல்கத்தா, கொல்கத்தா துறைமுகத்தின் 150-வது ஆண்டு விழாவில் பங்கேற்பதாக பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று விமானம் மூலம் கொல்கத்தா வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் பிரதமர் மோடி கவர்னர் மாளிகைக்கு சென்றார். அவருக்கு முன்னதாக முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கவர்னர் மாளிகைக்கு வந்திருந்தார். பிரதமர் மோடியும், மம்தா பானர்ஜியும் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சுமார் 20 நிமிடங்கள் இருவரும் தனியாக சந்தித்து பேசினார்கள்.
அதிகாரிகள் தரப்பில் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தெரிவிக்கப்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பின்னர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம், “குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் பிரச்சினை குறித்து பேசினேன். இந்த மூன்றையும் திரும்பப்பெறுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்தேன்” என்று கூறினார்.

பின்னர் மம்தா பானர்ஜி கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்டு திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் மாணவர் அணியினர் எஸ்பிளனேடு பகுதியில் நடத்திய குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டார்.  

அப்போது பிரதமர் மோடியை மம்தா பாணர்ஜி சந்தித்து பேசியதற்க்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சந்திப்பு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்துவிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

இது குறித்து பேசிய மம்தா பாணர்ஜி, அரசியல் ரீதியான தனது கடமையை நிறைவேற்றுவதற்காகவே பிரதமரை சந்தித்து பேசியதாக மாணவர்களிடம் விளக்கம் அளித்தார்.

பிரதமரிடம் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தனது எதிர்ப்பை பதிவு செய்ததாக அவர் குறிப்பிட்டார். நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று மாணவர்களிடம் அவர் கூறினார்

கருத்துகள் இல்லை: