வியாழன், 27 ஏப்ரல், 2017

28 அதிமுக தலித் எம்.எல்.ஏ-க்கள் ரகசியக்கூட்டம்

அதிமுக தலித் எம்.எல்.ஏ-க்கள் ரகசியக்கூட்டம்:  ஆட்சியைக் கவிழ்க்க திட்டமா?
அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்களின் கூட்டம் நடைபெற்று வந்த நேரத்தில் அதிமுக-வின் தலித் எம்.எல்.ஏ-க்கள் 28 பேர் சென்னையிலுள்ள நட்சத்திர விடுதியில் ரகசியக் கூட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தினகரன் மற்றும் அவருடைய குடும்பத்தினரை கட்சியிலிருந்து ஒதுக்கிவைக்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். மேலும், இரு அணிகளும் இணைவதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இரு அணிகளும் ஒன்றிணைவதற்காகப் பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பிலும் குழு அமைக்கப்பட்டது. இன்னும் சில நாள்களில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக இரு அணியின் முன்னணி தலைவர்களும் கூறி வருகின்றனர். தற்போதுள்ள சூழ்நிலையில் இரு அணிகளும் இணையும் சூழ்நிலையே உருவாகியுள்ளது. மேலும் ஏப்ரல் 25ஆம் தேதி (நேற்று) எடப்பாடி அணியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டமும் நடைபெற்றுள்ளது.

இதே நேரத்தில், அதிமுக எம்.எல்.ஏ-க்களின் ஒரு பிரிவினர் சென்னையிலுள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் ரகசிய கூட்டம் நடத்தியுள்ளனர். அதிமுக தலித் பிரிவைச் சேர்ந்த 28 எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இளம்பை இரா.தமிழ்செல்வன் தலைமை வகித்துள்ளார். கூட்டத்தில் தமிழக அமைச்சரவையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினருக்குப் போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படாதது பற்றி விவாதித்துள்ளனர்.
தற்போது நடைபெற்று வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு 122 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு உள்ளது. அதில் தலித் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை மட்டும் 28. அதாவது பழனிசாமியின் ஆட்சியை ஆதரிக்கும் நான்கில் ஒரு பங்கு எம்.எல்.ஏ-க்கள், தலித் எம்.எல்.ஏ-க்களாக உள்ளனர். எனவே தமிழக அரசை தாங்கிக்கொண்டிருக்கும் நான்கு தூண்களில் ஒரு தூணாக தலித் எம்.எல்.ஏ-க்கள் பார்க்கப்படுகின்றனர். இந்த தூண் சரிந்தால் ஆட்சி எந்நேரமும் கவிழ்ந்துவிடும் சூழ்நிலை உள்ளது.
மேலும் அமைச்சர்களாக உள்ள 31 பேரில் 3 பேர் மட்டுமே தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். மற்ற சமுதாய பிரதிநிதிகளின் எண்ணிக்கை மட்டும் அமைச்சரவையில் அதிகமாக இருக்கும்போது தலித் அமைச்சர்களின் எண்ணிக்கை மட்டும் மிகவும் குறைவாகவே உள்ளது. ஏற்கெனவே அரசிடம் தலித் எம்.எல்.ஏ-க்கள் வைத்துள்ள பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமலேயே கிடப்பில் இருந்து வருகிறது. எனவே ஏப்ரல் 26ஆம் தேதி கூடிய எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தங்கள் சமுதாயத்துக்கு உரிய அளவில் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று அரசிடம் நிபந்தனை விதிக்க உள்ளதாகவும். இல்லையென்றால் ஆளுநரைச் சந்தித்து அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி தங்களுக்கு அமைச்சரவையில் இடஒதுக்கீடு வழங்க கோரிக்கை விடுக்கவும் முடிவு செய்துள்ளனர். 28 சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னின்று நிபந்தனை விதித்தால் இவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டிய நிலை அரசுக்கு ஏற்படும். மேலும், இரு அணிகளும் இணையும் சூழல் உருவாகியுள்ள நேரத்தில் எந்த அணி தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க முன் வருகிறதோ, அந்த அணியையே ஆதரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
நான்கில் ஒரு பங்கு எம்.எல்.ஏ-க்கள் ஆதரவை வாபஸ் பெற்றால் அவர்களை கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் பதவி நீக்கம் செய்ய முடியாது. எனவே, அமைச்சரவையில் தங்களுக்கான இடஒதுக்கீடு மற்றும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் ஆட்சியைக் கவிழ்க்கவும் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போதைய நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசில் அமைச்சர்கள் பெஞ்சமின், ராஜலட்சுமி, சரோஜா ஆகியோர் மட்டுமே தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  minnambalam

கருத்துகள் இல்லை: