செவ்வாய், 8 டிசம்பர், 2015

அன்புமணி : நிவாரணப் பொருள்களை அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் பறித்துச் செல்லும் கொடுமை...

சென்னை: நிவாரணப் பொருள் கொள்ளைகளை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களில் மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் போதிய அளவு  நிவாரண உதவி வழங்கப்படவில்லை. இந்நிலையை மாற்ற நடவடிக்கை எடுப்பதற்கு பதில் தனிநபர்களும், தொண்டு நிறுவனங்களும் வழங்கும் நிவாரண உதவிப் பொருட்களை ஆளுங்கட்சியினர் கொள்ளை அடித்துச் செல்வதாக வரும் செய்திகள் பெரும் கவலையளிக்கின்றன.
பொதுமக்களுக்கு வழங்குவதற்காக கொண்டு வரப்படும் உதவிப் பொருட்களை அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் பறித்துச் செல்லும் கொடுமைகள் நடக்கின்றன. மற்ற மாவட்டங்களிலிருந்து வரும் உணவுப் பொருட்கள் மீது முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படங்கள் கட்டாயப்படுத்தி ஒட்டப்படுகின்றன.
கிறித்தவ அமைப்பின் சார்பில் 3 லாரிகளில் எடுத்து வரப்பட்ட உதவிப் பொருட்களை வேலூர் அருகே ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் கைப்பற்றிச் சென்றுள்ளனர். சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றின்  ஊழியர்களால் கொண்டுவரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள உணவு, போர்வை மற்றும் மருந்துகளை  அ.தி.மு.க.வினர் பறித்து வைத்துக் கொண்டு அமைச்சர் வளர்மதி வந்த பிறகு, அவர் தான் உதவிப் பொருட்களை வழங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளனர்.
ஆனால், பல மணிநேரமாகியும் அமைச்சர் வராத நிலையில் அந்த உதவிப் பொருட்களை தண்ணீரில் வீசி விட்டு சென்றுள்ளனர்.
ஒரு தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட குடிநீர் பாட்டில்களில்  ஜெயலலிதா படத்தை ஒட்டாமல் இருந்ததற்காக அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்களிடம் ஒரு பாட்டிலுக்கு ரூ.5 வீதம் அ.தி.மு.க.வினர் பணம் பறித்துள்ளனர். இத்தகைய கொள்ளை குறித்த குற்றச்சாற்றுகள் நீண்டுகொண்டே செல்கின்றன.
கடலூர் மாவட்டத்திலும் இதே நிலையே காணப்படுகிறது. உதவிப் பொருட்களுடன் வருவோருக்கு அவற்றை எந்த பகுதியில் வினியோகிப்பது என்பது குறித்து ஆலோசனை வழங்குவதற்குக் கூட அதிகாரிகள் தயாராக இல்லை. யார் உதவிப் பொருட்களைக் கொண்டு வந்தாலும் அவற்றை அதிமுக நிர்வாகிகளிடம் ஒப்படைத்துச் செல்லும்படி மாவட்ட நிர்வாகத்தால் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
கடலூர் மாவட்டத்திற்கு உணவுப் பொருட்களை கொண்டு வரும் வாகனங்களை  மாவட்ட எல்லையில் தடுத்து நிறுத்தும் அதிமுகவினர், அவற்றில் ஜெயலலிதா படத்தை ஒட்டிய பிறகு தான் அனுப்புகின்றனர். இதற்கு பல மணி நேரம் ஆவதால் பல நேரங்களில் மக்களுக்கு தாமதமாகவே உணவு கிடைக்கிறது; சில நேரங்களில் உணவு கெட்டுப் போகிறது. பல தொண்டு நிறுவனங்கள் கொண்டு வந்த உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை அதிமுகவினர் பறித்துச் சென்று விட்டதாக புகார்கள் எழுந்துள்ளன.
பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு மீண்டு வரும் வரையில் அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் வழங்குவது அரசு உள்ளிட்ட அனைவரின் கடமையாகும். இதை உணர்ந்து அரசு செயல்பட வேண்டும். உணவு மற்றும் உதவிப் பொருட்கள் ஆளுங்கட்சியினரால் கொள்ளையடிக்கப்படுவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அனைவருக்கும் சரியான நேரத்தில் உணவு உள்ளிட்ட உதவிப் பொருட்கள் உரிய நேரத்தில் கிடைப்பதையும் அரசு உறுதி செய்யவேண்டும்." என்று கூறியுள்ளார்விகடன்.com

கருத்துகள் இல்லை: