திங்கள், 2 நவம்பர், 2015

மக்கள் நலக் கூட்டணியில் இணைய தேமுதிகவுக்கு அழைப்பு

மக்கள் நலக் கூட்டணியை அறிவித்த இரா.முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன், வைகோ மற்றும் திருமாவளவன்.
மக்கள் நலக் கூட்டணியை அறிவித்த இரா.முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன், வைகோ மற்றும் திருமாவளவன். அதிமுக, திமுகவுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டியக்கம், தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியாக செயல்படும் என்று வைகோ அறிவித்தார்.
மேலும், தங்களுடன் தேமுதிகவும் இணைய வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த்துக்கு மக்கள் நலக் கூட்டணி அழைப்பு விடுத்தது.
திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சியில் மக்கள் நலக் கூட்டியக்கம் உருவாக்கப்பட்டது. இந்த இயக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இதில், மமக சமீபத்தில் வெளியேறியது. மற்ற 4 கட்சிகளும் தொடர்ந்து கூட்டியக்கத்தில் உள்ளன.
இந்த நிலையில், சென்னையில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் மக்கள் நலக் கூட்டியக்க தலைவர்கள் கூட்டம் இன்று நடந்தது.
இதில், கூட்டியக்கத்தின் குறைந்தபட்ச செயல் திட்ட அறிக்கையை வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் வெளியிட்டனர். | விரிவான செய்தி - மக்கள் நலக் கூட்டணி வாக்குறுதிகளின் முக்கிய அம்சங்கள் |
பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியது:
"தமிழகத்தின் நலனுக்காக தொடங்கப்பட்ட மக்கள் நலக் கூட்டியக்கம் தேர்தல் கூட்டணியாக செயல்படும். அதிமுக, திமுகவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள இந்தக் கூட்டணி, வரும் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, பாமக தவிர மற்ற கட்சிகள் மக்கள் நலக் கூட்டணியில் இணைய வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம். மக்கள் நலக் கூட்டணி சார்பில் முதல்வர் வேட்பாளராக யாரையும் முன்னிறுத்த மாட்டோம்.
எங்களது குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கையை முன்வைத்தே தேர்தலை எதிர்கொள்வோம். கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் உடன்பாடான அம்சங்களையே குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கையாக வெளியிட்டுள்ளோம். அதனால் தனி தமிழீழம், கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போன்ற சில விவகாரங்களை தவிர்த்துள்ளோம்.
கடந்த 48 ஆண்டுகளாக திமுகவும், அதிமுகவும் தமிழகத்தை சீரழித்துள்ளன. இரு கட்சிகளும் ஊழலில் ஊறி திளைக்கின்றன. எனவே, ஊழல் எதிர்ப்பை பிரதானமாக கொண்டு இந்தக் கூட்டணியை அமைத்துள்ளோம்.
ஊழல், மதவாதம், தீண்டாமை, மது இல்லாத தமிழகத்தை உருவாக்குவதே எங்கள் இலக்கு. அதிமுக, திமுக எதிர்ப்பில் உருவானதே தேமுதிக. எனவே அதிமுக, திமுகவுக்கு மாற்றாக உருவாகியுள்ள மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைய வேண்டும். இணையும் என நம்புகிறோம்" என்று அவர்கள் தெரிவித்தனர். /tamil.thehindu.com

கருத்துகள் இல்லை: