புதன், 4 நவம்பர், 2015

2ஜி வழக்கில் பார்ப்பன நரித்தனங்கள்..டெலிகாம் Cartel ஆரிய வடவர் பார்பனர் கூட்டு சதி...


போயசு தோட்டத்தில் நடந்த ஜெயா-மோடி சந்திப்புதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தனிமைப்படுத்தித் தோற்கடித்துவிட வேண்டும் என்பதில் ஜெயாவிற்கு இணையாக ஆர்.எஸ்.எஸ்.ஐச் சேர்ந்த ஆடிட்டர் குருமூர்த்தி, தற்பொழுது பா.ஜ.க.வில் ஒட்டிக் கொண்டுள்ள சுப்பிரமணிய சுவாமி, தினமணி ஆசிரியர் வைத்தியநாத அய்யர் உள்ளிட்ட தமிழகத்துப் பார்ப்பனக் கும்பல் தீயாய் வேலை செய்து வருகிறது.
நான்காண்டு கால அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கலாம் என்றால், தமிழ்நாட்டைக் குடிநாடாக ஆக்கியதுதான் அம்மாவின் ஒரே சாதனையாக இருக்கிறது. தமிழகத்திலுள்ள கட்சி சாராத ‘நடுநிலை’ வாக்காளர்கள் அனைவரையும் ஒரு ரேட்டு போட்டு வாங்கிவிட அம்மாவால் முடியுமென்றாலும், கொஞ்சத்துக்கு கொஞ்சம் பேரிடமாவது இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கும் அறவுணர்ச்சியும் சுயமரியாதை உணர்வும் அதற்குத் தடையாக இருக்கிறது. மற்ற எதிர்க்கட்சிகள் தி.மு.க.வோடு கூட்டணி சேர்வதைத் தடுக்கும் பார்ப்பனக் கும்பலின் நோக்கம் நிறைவேறினாலும், அ.தி.மு.க. ஆட்சி மீது உள்ள அதிருப்தி தி.மு.க.விற்கு வாக்குகளாக மாறுவதைத் தடுப்பதற்கு ஏதாவது செய்தாக வேண்டும். இப்படியான நிலையில் தமிழகத்துப் பார்ப்பனக் கும்பல் தி.மு.க. ஒரு ஊழல் கட்சி என்ற பழைய கள்ளைப் புதிய மொந்தையில் தமிழகத்து வாக்காளர்களின் முன் பரிமாறுவதற்குப் பல்வேறு சதித்தனங்களில் இறங்கியிருக்கிறது.
2ஜி வழக்கில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள ஆ.ராசா மீது புதிதாக சொத்துக் குவிப்பு வழக்கு; 2ஜி வழக்கு தொடர்பாக விசாரிப்பதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் மற்றும் கடந்த தி.மு.க. ஆட்சியின்பொழுது உளவுத்துறை ஏ.டி.ஜி.பி.யாக இருந்த ஜாபர் சேட் இருவருக்கும் சி.பி.ஐ. அழைப்பாணை அனுப்பவிருப்பதாகக் கசியவிடப்பட்ட தகவல்; தயாநிதி மாறன் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபொழுது, தனது இல்லத்தில் சட்டவிரோதமாக பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை வைத்திருந்த குற்ற வழக்கில் அவரைக் கைது செய்து விசாரிக்க சி.பி.ஐ. எடுத்த முயற்சிகள்; சன் குழும தொலைக்காட்சி மற்றும் பண்பலை வானொலி ஆகியவற்றுக்கான உரிமத்தை ரத்து செய்வதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் நடத்திய உள்குத்து வேலைகள்; ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை விசாரிக்கக் கோரி உச்சநீதி மன்றத்தில் சு.சாமி தாக்கல் செய்திருக்கும் மனு; 223 கோடி ரூபாய் அளவிற்கு கருப்புப் பணம் வாசன் கண் மருத்துவமனையில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும்; இம்மருத்துவமனையே ப.சிதம்பரம் குடும்பத்திற்குச் சொந்தமானதென்றும் ஆடிட்டர் குருமூர்த்தியும் தினமணியும் இணைந்து
வைத்துள்ள குற்றச்சாட்டு – இவை அனைத்தும் கடந்த இரண்டு மாதங்களில் ஒன்றன் பின் ஒன்றாக தி.மு.க. தலைமை மற்றும் ப.சிதம்பரத்தை நோக்கி எய்யப்பட்டுள்ளன. தமிழகத்துப் பார்ப்பனக் கும்பல் இந்த வழக்குகளில், குற்றச்சாட்டுகளில் பெருத்த அக்கறையும் ஈடுபாடும் காட்டுவதற்குப் பின்னே அதன் சுயநல நோக்கம் இருப்பதை யாரும் மறுத்துவிட முடியாது.
ஆ.ராசா மீது திடீரெனப் பாய்ந்தது சொத்துக்குவிப்பு வழக்கு.
ஆ.ராசா மீது திடீரெனப் பாய்ந்தது சொத்துக்குவிப்பு வழக்கு.
ஆகஸ்டு முதல் வாரத்தில் சென்னையில் நடந்த அரசு விழா ஒன்றில் கலந்துகொள்ள வந்த பிரதமர் மோடி, ஜெயாவை அவரது இல்லத்திற்கே சென்று சந்தித்துவிட்டு டெல்லி திரும்பினார். அதற்கடுத்த பத்து நாட்களிலேயே ஆ.ராசா மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் சி.பி.ஐ. ரெய்டு நடத்தப்பட்டு, ஆ.ராசா, அவரது மனைவி உள்ளிட்டு 20 பேர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பாய்ந்தது. இந்தக் காலவரிசையே காக்கை உட்கார்ந்த பிறகுதான் பனம் பழம் கீழே விழுந்தது என்பதை நிரூபிக்கிறது.
2ஜி முறைகேடு தொடர்பாக ஏற்கெனவே இரண்டு வழக்குகள் நடந்து வருகின்றன. உச்சநீதி மன்றத்தின் கண்காணிப்பில் கடந்த ஐந்தாண்டுகளாக நடந்து வரும் இவ்வழக்குகளில் இறுதிக்கட்ட வாதங்கள் முடிவடையும் தருவாயில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவ்வழக்கின் தொடக்கத்திலேயே ஆ.ராசா மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்களின் வீடுகளைச் சோதனையிட்ட சி.பி.ஐ., அப்பொழுதே கண்டுபிடிக்க முடியாததை – ஆ.ராசா தனது வருமானத்திற்கு அதிகமாக 30 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்திருப்பதை இப்பொழுது கண்டுபிடித்திருப்பதாகக் கூறுவதே சந்தேகத்திற்கு இடமளிக்கிறது.
இந்த வழக்கு குறித்துத் தன்னிலை விளக்கம் அளித்துள்ள ஆ.ராசா, “2004 முதல் 2010 வரையிலான காலக்கட்டத்தில் நானோ, எனது குடும்பத்தாரோ சொத்துக் குவிப்பில் ஈடுபடவில்லை என சி.பி.ஐ. விசாரணை அதிகாரி விஜய் பிரயதர்ஷினி கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்திருப்பதாக”க் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், இந்த வழக்கு டெல்லியிலிருந்து அல்லாமல், சென்னையைச் சேர்ந்த சி.பி.ஐ. அதிகாரிகளால் போடப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார், அவர். இவையெல்லாம் உண்மையென்றால், இந்த வழக்கின் பின்னணி குறித்து சந்தேகம் கொள்ள முகாந்திரம் இருக்கிறது.
சண்முகநாதன், ஜாபர் சேட்
தி.மு.க தலைவர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் (இடது) மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரி ஜாபர் சேட்.
இந்த சந்தேகங்கள் குறித்து சி.பி.ஐ. எந்தவிதமான விளக்கத்தையும் அளிக்காதபொழுது, தமிழகத்து பார்ப்பனக் கும்பலோ சி.பி.ஐ.யின் பிரதிநிதி போல, “வழக்கை யார் போட்டால் என்ன? நீதிமன்றத்தில் வழக்கின் ஒரு கட்டத்தில் ஒரு கருத்து கூறப்பட்டால், ராசா மீது இனிமேல் சி.பி.ஐ. சந்தேகப்படக்கூடாது என அர்த்தமல்ல” எனப் பாய்ந்திருப்பதோடு, 2ஜி வழக்கின் முடிவு தெரியும் முன்பே, “ராசா ஒன்றும் அப்பழுக்கற்றவரோ, அப்பிராணியோ அல்ல” எனத் தீர்ப்பெழுதிவிட்டது. (துக்ளக், 9.9.2015)
சண்முகநாதன், ஜாபர் சேட் விவகாரம் இதனைவிட வன்மமும் குதர்க்கமும் நிறைந்ததாக உள்ளது. சண்முகநாதன், ஜாபர் சேட் இருவருக்குமிடையே கலைஞர் டி.வி.க்கு கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பல கோடி ரூபாய் பெறுமான விளம்பரங்கள் பெறுவது தொடர்பாக நடந்த உரையாடல் பதிவுகள் புதிய விவகாரமல்ல. 2ஜி வழக்கு தொடர்புடைய நீரா ராடியா டேப் விவகாரம் கசிந்தபொழுதே இவையனைத்தும் சந்திக்கு வந்துவிட்டன. அதனை இப்பொழுது கையில் எடுத்துக்கொண்டு தி.மு.க.விற்கு நெருக்கடி ஏற்படுத்துவதுதான் சி.பி.ஐ. – பார்ப்பனக் கூட்டணியின் நோக்கம்.
இந்த விவகாரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனுக்கு முறையான அழைப்பாணை எதுவும் சி.பி.ஐ.யால் அனுப்பப்படவில்லை. மாறாக, அவரை விசாரணைக்கு வருமாறு தொலைபேசி மூலம் சி.பி.ஐ. கோரியிருக்கிறது. இதற்கு சண்முகநாதன், “எழுத்துபூர்வமாக அழைப்பாணை அனுப்புமாறு” சி.பி.ஐ.க்குப் பதில் அளித்துவிட்ட பிறகு, இந்த விவகாரம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
தி.மு.க. ஆட்சியில் உளவுத்துறை ஏ.டி.ஜி.பி.யாக இருந்த ஜாபர் சேட் ஐ.பி.எஸ். அதிகாரி என்பதால், அவரை விசாரிப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என்பதுதான் சட்டத்தின் நிலை. இந்த அனுமதியை சி.பி.ஐ. பெறுவதற்கு முன்பே, அவரது பெயரை வழக்கில் சேர்த்து விசாரிக்கப் போவதாக கிசுகிசுக்கள் இறக்கை கட்டிப் பறந்தன.
தயாநிதி மாறன், கலாநிதி மாறன்
முன்னாள் தொலைதொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் சன் குழும நிர்வாக இயக்குநர் கலாநிதி மாறன்
நீரா ராடியா டேப் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை 2ஜி வழக்கில் இணைக்க வேண்டும் எனக் கோரி சி.பி.ஐ. தாக்கல் செய்த மனுவின் மீது உச்சநீதி மன்றம் இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை. இந்த டேப் விவகாரத்தில் பழம் பெரும் தரகு முதலாளிகளான ரத்தன் டாடா, அம்பானி போன்றோரும் சம்பந்தப்பட்டிருப்பதால், உச்சநீதி மன்றம் இந்த விவகாரத்தை அப்படியே கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தி.மு.க.வுக்கு நெருக்கமானவர்கள் மட்டும் குறி வைக்கப்படுவதற்கு அரசியல் பழிவாங்குதல் தவிர்த்து வேறு காரணம் இருக்க முடியாது.
தயாநிதி மாறன் தொலைதொடர்புத் துறை அமைச்சராக இருந்தபொழுது அவருக்குத் துறைரீதியாக வழங்கப்பட்ட 3 இலவச உயர்ரக தொலைபேசி இணைப்புகளை ரகசியமாக நீட்டித்து, அதில் இருந்து 764 தொலைபேசி இணைப்புகளை உருவாக்கி, அவற்றை சன் டி.வி.க்குப் பயன்படுத்தியதன் மூலம் அரசுக்கு 229.2 கோடி ரூபாய்க்கு இழப்பை ஏற்படுத்தியிருக்கிறார் என்று ஆடிட்டர் குருமூர்த்தி தினமணியில் திரும்ப திரும்ப எழுதி வருகிறார். மேலும், சட்டவிரோத இணைப்புகளை வைத்திருப்பது தேசப் பாதுகாப்பை அச்சுறுத்தும் குற்றமாகும் என்றும் பீதியூட்டி வருகிறார்.
ஆனால், சி.பி.ஐ. விசாரித்து வரும் இந்த வழக்கு குருமூர்த்தி குறிப்பிடுவது போல பிரம்மாண்டமானதாக இல்லை. தயாநிதி மாறன் தனக்கு வழங்கப்பட்ட மூன்று இலவச இணைப்புளை நீட்டித்து, 364 இணைப்புகளைச் சட்டவிரோதமாக உருவாக்கி, அதன் மூலம் அரசுக்கு 1.2 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தினார் என்பதுதான் சி.பி.ஐ. வைத்துள்ள குற்றச்சாட்டு.
குருமூர்த்தி வாதிடுவது போல இது 229.2 கோடி ரூபாய் பெறுமான மோசடி என்றால், சி.பி.ஐ. ஊழல் தொகையைக் குறைவாக மதிப்பிட்டு, வழக்கை ஏன் சப்பாணியாக்கிவிட்டது என்ற கேள்வி எழுகிறது. மாறாக, சி.பி.ஐ., குறிப்பிடும் தொகைதான் உண்மை என்றால், 2ஜி வழக்கில் 1.76 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு தி.மு.க. ஊழல் செய்துவிட்டது போலக் கூசாமல் புளுகி வரும் பார்ப்பனக் கும்பலின் இன்னொரு பித்தலாட்டமான ஏற்பாடாக இவ்வழக்கு ஊதிப்பெருக்கப்படுகிறது.
இந்த வழக்கில் தயாநிதி மாறனைக் கைது செய்வதற்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ள உச்சநீதி மன்றம், “உ.பி.யில் நடந்துள்ள 8,000 கோடி ரூபாய் பெறுமான ஊழலில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளவர்களைக் கைது செய்ய முயலாத நீங்கள், தயாநிதி மாறனைக் கைது செய்ய ஏன் துடிக்கிறீர்கள்?” என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. மாறன் சகோதரர்கள் யோக்கியமானவர்கள் இல்லைதான். அதே அளவிற்குப் பார்ப்பனக் கும்பலும் ஊழலை எதிர்ப்பதில் சுய இலாபமில்லாத பரிசுத்தவான்கள் இல்லை என்பதை உச்சநீதி மன்றத்தின் கேள்வி அம்பலப்படுத்துகிறது.
குருமூர்த்தி, வைத்தியநாதன்
ஆடிட்டர் குருமூர்த்தி (இடது) மற்றும் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்
“சன் டி.வி.க்கு அயல்நாட்டிலிருந்து முறைகேடான வழியில் முதலீடு வந்திருக்கிறது; மாறன் சகோதரர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவாகியிருக்கின்றன” என்ற காரணங்களை முன்வைத்துதான் சன் குழுமம் பண்பலை ஏலத்தில் பங்கு பெறுவதற்குத் தடை விதித்தது, மத்திய உள்துறை அமைச்சகம். இதே அளவுகோலைப் பிரயோகித்தால் 2ஜி வழக்கில் கிரிமினல் வழக்கை எதிர்கொண்டுள்ள ரிலையன்ஸ் நிறுவனமும் பண்பலை ஏலத்தில் பங்கு கொள்வதைத் தடை செய்திருக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை என்பதே அரசியல் காரணங்களுக்காகவே சன் குழுமத்தின் மீது தடை விதிக்கப்பட்டது என்பதை அம்பலப்படுத்துகிறது. சன் குழுமம் இத்தடைக்கு எதிராக சென்னை, டெல்லி உயர்நீதி மன்றங்களில் வழக்குப் போட்டு சாதகமான தீர்ப்பை பெற்ற பிறகும்கூட, உள்துறை அமைச்சகம் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அப்பீலுக்கு மேல் அப்பீல் செய்து சன் குழுமத்தை முடக்கிப் போட்டு விடும் முயற்சியில் இறங்கித் தோற்றுப் போனது.
“வாசன் கண் மருத்துவமனையில் 223 கோடி ரூபாய் அளவிற்கு கருப்புப் பணம் முதலீடு செயப்பட்டுள்ளது; அம்மருத்துவமனையின் நிர்வாகம் ஏறத்தாழ 20 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருக்கிறது; இம்மருத்துவமனையின் உண்மையான அதிபர்கள் ப.சிதம்பரம் குடும்பத்தினர்தான்” என்று குருமூர்த்தியும் தினமணியும் வைக்கும் குற்றச்சாட்டுகள் மைய அரசால் வழக்காக எடுத்துக் கொள்ளப்படவில்லை. வருமான வரித்துறையின் சென்னை மண்டலத்தில் ஆணையராகப் பணியாற்றி வந்த எம்.சீனிவாச ராவ், தன்னைப் பணியிட மாற்றம் செய்ததற்கு எதிராக ஒரு வழக்கை மத்திய தீர்ப்பாயத்தில் தொடுத்தார். அந்த வழக்கில், “வாசன் கண் மருத்துவமனையில் நடந்துள்ள முறைகேடுகளைக் கண்டுபிடித்து, அந்நிறுவனம் மீதும், அதனின் உண்மையான உரிமையாளர்களான ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீதும், அவர்களின் கூட்டாளியான ஜே.டி. குழுமம் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தி வந்தேன். அதனால்தான் உயர் அதிகாரிகள் தன்னைப் பணியிட மாற்றம் செய்துவிட்டதாக”க் குறிப்பிட்டுள்ளார். அவர் முன் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் ப.சிதம்பரத்திற்கு எதிரானது என்பதால் தினமணியும் குருமூர்த்தியும் அதனைக் கையில் எடுத்துக்கொண்டு பரபரப்பாக எழுதி வருகின்றனர்.
“வாசன் கண் மருத்துவமனையில் கருப்புப் பணத்தை முதலீடு செய்த ஜே.டி.குழுமம் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” என்ற கேள்வியை இதற்குப் பொறுப்பான அதிகாரியான நாகபிரசாத் என்பவரிடம் வருமான வரித்துறை ஆணையரான சீறிவத்சவா கேட்டபொழுது, “மேலிடத்தின் அறிவுரையின் பெயரில்தான் நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை” என்று அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர். இதனைத் தனது கட்டுரையிலேயே குறிப்பிடும் குருமூர்த்தி, “வருமான வரித்துறையில் ஆட்சி மாறிய பிறகும் ப.சிதம்பரத்தின் ஆட்கள் உயர் பதவிகளில் இருந்து வருகிறார்கள். இவையெல்லாம் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்குத் தெரிந்துதான் நடக்கிறதா? அவர் ஏன் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்?” என்ற கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.
வாசன் கண் மருத்துவமனை கருப்புப் பண புழக்கத்திலும் வரி ஏய்ப்பிலும் ஈடுபட்டிருப்பதற்கு ஆதாரங்கள் இருந்தும், அதன் மீதும், அந்நிறுவனத்தின் உண்மையான உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்படுகிறதென்றால், இந்த விவகாரத்தில் முதன்மைக் குற்றவாளி மோடி அரசுதான். ஆனால், குருமூர்த்தியும் தினமணியும் தமது அரசியல் நோக்கங்களுக்காக மோடி அரசையும், நிதியமைச்சகத்தையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ப.சிதம்பரத்தின் மீது மட்டும் பாய்கிறார்கள்.
இந்தியத் தரகு முதலாளிகள் வெளிநாடுகளில் குவித்து வைத்துள்ள கருப்புப் பணத்தைத் தமது அரசு கொடுத்துள்ள சலுகைகளைப் பயன்படுத்திக் கொண்டு வெள்ளையாக்கிக் கொள்ளுமாறு கெஞ்சிக் கொண்டிருக்கிறது, மோடி அரசு. மேலும், கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது வரியே விதிக்கக்கூடாது என்பதைத் தனது கொள்கையாகக் கொண்டும் செயல்பட்டு வருகிறது. வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ள வோடாஃபோன், நோக்கியா, வீடியோகான், என்.டி.டி.வி. உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் மீதான வழக்குகளை நீதிமன்றத்திற்கு வெளியே முடித்துக் கொள்ளப் போவதாக உத்தரவாதமளித்திருக்கிறார், நிதியமைச்சர். இப்படிபட்ட நிலையில் ப.சி.க்குச் ‘சொந்தமான’ வாசன் கண் மருத்துவமனை வரி ஏய்ப்பு மற்றும் கருப்புப் பண புழக்கத்தில் ஈடுபட்டிருப்பது குறித்த குருமூர்த்தியின் அறச்சீற்றம், தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் மோசடித்தனமும் விளம்பரத்தனமும் கொண்டதாகும்.
“1970-களில் வெறும் 265 ரூபாய் இலஞ்சம் பெற்றவருக்கு 30 ஆண்டுகள் கழித்து ஒன்றரை ஆண்டு சிறை தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்பொழுது, தயாநிதி மாறன், ப.சி. போன்றவர்கள் தப்பித்துவிடக் கூடாது” என ஆதங்கப்பட்டு எழுதுகிறார், குருமூர்த்தி. நிச்சயமாக; ஆனால், அவரின் இந்த தார்மீக கோபமும் ஆதங்கமும் ஜெயாவை நோக்கித் திரும்ப மறுப்பது ஏன்?
ஜெயாவை விடுதலை செய்த கணக்குப் புலி குமாரசாமிகூட, அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிக்கவில்லை எனத் தீர்ப்பெழுதவில்லை. அந்தக் கொள்ளை 10 சதவீதத்திற்குள் இருக்கிறது என்பதுதான் குமாரசாமியின் கணக்கு. 265 ரூபாய் இலஞ்சம் பெற்றவருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை என்றால், குமாரசாமியின் தீர்ப்புப்படி 2.82 கோடி ரூபாய் சொத்தை வருமானத்திற்கு அதிகமாகச் சேர்த்துள்ள ஜெயாவிற்கு எத்தனை ஆண்டு சிறை தண்டனை என்ற கேள்வியை தினமணியும் குருமூர்த்தியும் ஒருநாளும் எழுப்பியதேயில்லை. தண்ணீரைவிட ஒரே சாதி இரத்தம் அடர்த்தியானது அல்லவா!
***
குருமூர்த்தி – தமிழ்நாட்டின் குமாரசாமி!
யாநிதி மாறன், சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டில் 341 அதிநவீன இணைப்புகளையும், போட் கிளப் பகுதியில் உள்ள தனது நவீன பங்களாவில் 323 அதிநவீன இணைப்புகளையும் ஆக மொத்தம் 764 இணைப்புகளைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தி வந்தார் எனக் குற்றஞ்சாட்டியிருக்கிறார், குருமூர்த்தி. (தினமணி, 15.8.2015, பக்.8) ஆனால், இவையிரண்டையும் எப்படிக் கூட்டினாலும் 664 என்றுதான் விடை வருகிறது. இந்த வகையில் நானும் குமாரசாமிதான் எனக் கூவியிருக்கிறார், ஆடிட்டர் குருமூர்த்தி. வேத கணிதம், வேத கணிதம் என்று இந்து மதவெறிக் கும்பல் கூப்பாடு போட்டு வருகிறதே, அதன்படி கூட்டினால் இப்படித்தான் விடை வருமோ! வினவு.com
***
– குப்பன்
_________________________________
புதிய ஜனநாயகம்

கருத்துகள் இல்லை: