திங்கள், 2 நவம்பர், 2015

தி நகரில் டாஸ்மாக் போராட்டம்...ஊருக்கு ஊரு சாராயம் தள்ளாடுது தமிழகம்.


மக்கள் அதிகாரம் - தி.நகர் ஆர்ப்பாட்டம்
மக்கள் அதிகாரம் - தி.நகர் ஆர்ப்பாட்டம் இன்று காலை 11.30 மணிக்கு, புரட்சிகர பாடகர், மக்கள் கலை இலக்கியக் கழக மையக்கலை குழு தோழர் கோவன் கைதை கண்டித்து பரபரப்பான தி.நகர் பேருந்து நிலையத்தின் எதிரே போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தது. ஏற்கனவே “மூடு டாஸ்மாக்கை” என்ற பாடலும், “ஊத்திக்கொடுத்த உத்தமி…” பாடலும் மக்களிடையே வேகமாக பரவி, கோவனை விடுதலை செய்ய கண்டன குரல்கள் எழுந்து வரும் சூழலில் இப்போராட்டம் வீரியமாக நடைபெற்றால் மேலும் அரசுக்கு நெருக்கடி ஏற்படும் என்றெண்ணிய ஜெயா அரசு வழக்கம் போல தனது ஏவலாளி போலீசு படையை குவித்து வைத்திருந்தது. பத்தடிக்கு ஒரு போலிசு, மொத்தமாக தி.நகர் பெரியார் சிலை அருகில் 100 போலிசு, அதுமட்டுமன்றி ரங்கனாதன் தெருவின் சந்து பொந்துகளிலெல்லாம் உளவுப்போலிசு என காக்கி மயமாயிருந்தது தி.நகர்.
அதுமட்டுமன்றி முன்னேற்பாடாக இரண்டு அரசுப் பேருந்துகளை கொன்டு வந்து நிறுத்தியிருந்தது, போராட்டக்காரர்களை அள்ளிப்போட்டு செல்ல. சம்பந்தமே இல்லாமல் பொதுமக்களிடையேயும், வாகன ஓட்டிகளிடையேயும் பீதி ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
காக்கி மயமாயிருந்தது தி.நகர்
இருப்பினும் சரியாக 11.40-க்கு பேருந்திலிருந்து வந்திறங்கிய மக்கள் அதிகாரம் சென்னை ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன் போலிசை நெருங்கி முழக்கமிடத் துவங்கினா. அவருடன் வந்திருந்தவர்கள் நான்கைந்து பேனரை விரிக்க சற்றே ஏமாந்து போனது போலிசு. ஆனால் அதற்கு மறுபக்கத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் மொத்தமாக முழக்கமிட்டுக்கொண்டே வர இன்னொரு பக்கம் பெண்கள் அமைப்பினர் சூழ போராட்டம் கச்சிதமாக துவங்கியது. துவக்கம் முதலே போராட்டத்தை தடுத்துவிட வேண்டுமென பிரயத்தபட்ட போலிசு ஒவ்வொருவரையும் குண்டுகட்டாக தூக்கி வண்டியில் ஏற்றியது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தமிழகத்தில் பொதுவான அரசியல் கட்சிகளின் போராட்டமாக இல்லாமல், தடை செய்ய வந்த போலீசுக்கு மக்கள் அதிகாரம் அமைப்பினர் பல்வேறு தடைளை ஏற்படுத்தினர். நிராயுதபாணியாக வந்த மக்கள் அதிகாரம் அமைப்பினரின் போராட்ட உறுதி தி.நகரையே ஸ்தம்பிக்க வைத்தது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
பெண்கள், குழந்தைகளை தாக்கியதை கண்டு சுற்றியிருந்த பொதுமக்கள் போலிசை வசைபாடத் துவங்கினர். போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலிசு ஒவ்வொரு போராட்ட நபருக்கும் நான்கு போலிசு வீதம் அனுப்பி கைது செய்ய முயன்றது. ஆனால் மொத்த பேரும் பெரியார் சிலையை சுற்றி நடுரோட்டில் முழக்கங்களை எழுப்பியதால் தான, தண்ட, சாம, பேத வழிமுறைகளையெல்லாம் பிரயோகித்து பார்த்தது போலிசு. ஆனால் விடாமல் “தோழர் கோவனை விடுதலை செய்!” என்றும் “மூடு டாஸ்மாக்கை” என்றும் முழக்கமிட்டுக் கொண்டிருந்தன்ர். மேலும் பாடல்களை உற்சாகமாக பாடிக்கொண்டிருந்தனர்.
இறுதியில் அரைமணி நேரம் கழித்து மூன்று பேருந்துகள், பல ஷேர் ஆட்டோகள், இரண்டு ஜீப்கள் போராட்டக்குழுவினரின் முழக்கங்களுடன் சென்னை சாலைகளை சுற்றத்துவங்கியது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
இது தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பினர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி
புரட்சிகரப் பாடகர் கோவன் மீது போடப்பட்ட
தேச துரோக குற்றச்சாட்டு வழக்கை திரும்ப பெற்று விடுதலை செய்!

கண்டன ஆர்ப்பாட்டம்

மிழக மக்களை மதுவால் கொல்லும் ஜெயா அரசின் டாஸ்மாக் கடைகளை மூடுமாறு “மக்கள் அதிகாரம்” சார்பில் நாங்கள் நடத்திய போராட்டங்களை அனைவரும் அறிவர். இப்போராட்டங்களையொட்டி இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டன. மூடு டாஸ்மாக்கை மூடு, ’’ஊருக்கு ஊரு சாராயம் தள்ளாடுது தமிழகம்’’ என்ற இரண்டு பாடல்களும் வினவு தளத்தில் வெளியிடப்பட்டு இலட்சக்கணக்கானோரை சென்றடைந்தன. வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் மூலம் இன்றளவும் இப்பாடல்கள் மிகப் பிரபலமாக மக்களால் கேட்கப்படுகின்றன. டாஸ்மாக்கை எதிர்க்கும் அனைத்துக் கட்சிகளும் இப்பாடல்களை வரவேற்றிருக்கின்றனர்.
மதுக்கடைகளை மூட மாட்டோம், தமிழக மக்களை வதைக்காமல் விட மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கும் தமிழக அரசு ஏற்கனவே டாஸ்மாக்குக்கு எதிராக போராடுபவர்கள் மீது அடக்குமுறைகளை ஏவிவிட்டிருந்தது. டாஸ்மாக் கடைகளை அடித்து உடைத்த மாணவர்கள் – மக்கள் அதிகாரம் தோழர்களை கைது செய்து பல நாட்கள் சிறையில் அடைத்தது. அதன் தொடர்ச்சியாக இப்போது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழு தோழர் கோவன் கடந்த 30-10-2015 (வெள்ளி) நள்ளிரவு 2.30 மணிக்கு திருச்சியில் கைது செய்யப்பட்டார். அவர் மீது 124 ஏ தேசத்துரோக நடவடிக்கை, 153 சமூகத்தில் இரு பிரிவினருக்கிடையில் மோதல் ஏற்படுத்துதல், 505(1) மக்களை அச்சுறுத்தி போராடத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பெரும்பான்மை மக்களின் பிரச்சனையை பாடல் இயற்றி பாடி, மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்த ம.க.இ.க தோழர் கோவனை கைது செய்ததை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது. ம.க.இ.க சார்பு இணையதளமான வினவில் இந்த பாடல் வெளியானதற்காக மக்கள் அதிகாரம் பொருளாளர் தோழர் காளியப்பனை கைது செய்ய காவல் துறை முயற்சிக்கிறது. இதையும் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
இதையெல்லாம் பார்க்கும்போது இனி அம்மா டாஸ்மாக் சாராயத்தை குடிக்க மறுப்பவர்கள் மீது தேச துரோக சட்டம் பாயலாம். அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மக்களை சீரழிக்கும் டாஸ்மாக் சாராயத்தை எதிர்த்து பாடல் பாடியதற்காக தேசதுரோகம் என்று சிறையில் அடைக்க முடியும் என்றால் நடப்பது மக்களாட்சி அல்ல மக்கள் விரோத அந்நியர்கள் ஆட்சி, எதிரான ஆட்சி அதை அகற்றுவதுதான் தீர்வு.
தமிழகம் முழுவதும் அறிவிக்கபடாத எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டு வருகிறது. தனது நாட்டு மக்களுக்கு உரிமைகளையும் வாழ்வாதாரங்களையும் உத்திரவாதம் செய்யும் தகுதியை, தார்மீக உரிமையை இழந்து அதை நடை முறை படுத்துவதில் அரசு கட்டமைப்பு முழுவதும் தோற்று போய் விட்டது. அது மக்களுக்கு எதிர் நிலை சக்தியாக மாறி நிற்கிறது.
அதனால் தான் நேர்மையான அதிகாரிகள் விஷ்னுபிரியா, முத்து குமாரசாமி தற்கொலை, அரசு மருத்தவர்கள் தற்கொலை, கிராணைட் விசாரணை அதிகாரி சகாயம் அரசுக்கு எதிராக மயானத்தில் போராடுதல் என தொடர்கிறது. மக்களின் எந்த அடிப்படையான போராட்டங்களுக்கும் தீர்வு கானாமல் காவல் துறையை வைத்து அடக்குமுறை செய்கிறது அரசு vinavu.com

2 கருத்துகள்:

praba சொன்னது…

True.....True....True....
Joshva

Unknown சொன்னது…

ஊருக்கு ஊரு சாராயம் தள்ளாடுது தமிழகம்.

Joshva