செவ்வாய், 21 ஏப்ரல், 2015

செம்மர கடத்தல் மாபியாக்களே ஆந்திர தலைவர்களாக உள்ளார்கள்! தமிழர்களை கொன்றது ஒரு திசை திருப்பு முயற்சி

செம்மரக் கடத்தல் தடங்கள்
ந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சேசாச்சலம் வனப்பகுதியில் போலிசால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட தொழிலாளர்களைப் பற்றியும், திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டங்களில் அவர்களது கிராமங்களின் வாழ்நிலை பற்றியும் நேரடி செய்தியறிக்கையாக எழுதியிருந்தோம். இந்தக் கட்டுரையில் சர்வதேச செம்மரக் கடத்தலின் பரிமாணங்கள் குறித்து பார்க்கலாம்.
‘சுதந்திரச் சந்தை’யும், முதலாளித்துவ முதலீடும் அளிக்கும் உந்துவிசை உள்ளூர் ரவுடிகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் முதல் சர்வதேச கடத்தல்காரர்கள் வரை இயக்குகிறது.
கூலிக்கு மரம் வெட்ட அழைத்துச் செல்லப்படும் மலை கிராம தொழிலாளர்கள், அவர்களை போலி மோதலில் கொலை செய்யும், கைது செய்யும் ஆந்திர போலீஸ் இவர்களைத் தாண்டி நூற்றுக் கணக்கான கரங்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றன.

செம்மர ஏற்றுமதி 1998-ம் ஆண்டு முதல் இந்திய அரசால் தடை செய்யப்பட்டிருக்கிறது. அருகிவரும் தாவர, விலங்கு பொருட்களின் சர்வதேச வர்த்தகத்துக்கான ஒப்பந்தத்தின் (CITES – Convention on International Trade in Endangered Species) உறுப்பு நாடுகளும் செம்மர வர்த்தகத்தை தடை செய்திருக்கின்றன. ஆனால், ‘சுதந்திரச் சந்தை’யும், முதலாளித்துவ முதலீடும் அளிக்கும் உந்துவிசை அந்த தடைப் பட்டியல்களை உடைத்து உள்ளூர் ரவுடிகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் முதல் சர்வதேச கடத்தல்காரர்கள் வரை இயக்குகிறது.
சர்வதேச சந்தையில் செம்மரம் 3 தரத்தில் விற்கப்படுகிறது. முதல் தர மரம் இந்தியாவில் டன்னுக்கு ரூ 10 லட்சம் வரையிலும், வெளிநாட்டில் டன்னுக்கு ரூ 1 கோடி வரையிலும் விலை போகிறது.
  • சென்ற ஆண்டு திருப்பத்தூர் அருகில் உள்ள வனத்துறை விற்பனை நிலையத்தில் C தரத்திலான செம்மரம் டன் ரூ 7.64 லட்சத்துக்கு விற்கப்பட்டிருக்கிறது. அதற்கு, கடத்தல் சந்தையில் ஒரு டன்னுக்கு ரூ 15 லட்சத்துக்கு குறையாத விலை கிடைக்கிறது என்கின்றனர் வனத்துறை அதிகாரிகள்.
  • உயர்தர செம்மரக் கட்டையை டன்னுக்கு ரூ 1.5 கோடி மதிப்பில் ஏலம் விட்டிருக்கிறது ஆந்திர அரசு.
மரப்பாச்சி பொம்மை
நம் ஊரில் முன்பு மரப்பாச்சி பொம்மை செய்வதற்கு செம்மரத்தை பயன்படுத்தியிருக்கின்றனர்.
ஆந்திராவின் சித்தூர், கடப்பா, நெல்லூர் மாவட்டங்களின் சேசாச்சலம் வனப்பகுதிகளில் சுமார் 5,500 சதுரகிலோமீட்டர் பரப்பளவில் சுமார் 1.4 கோடி செம்மரங்கள் வளர்கின்றன என்று ஆந்திர அரசு மதிப்பிட்டுள்ளது. ஆந்திரக் காடுகளிலிருந்து சீனாவின் அல்லது மேற்கு ஆசியாவின் மேட்டுக்குடியினரின் பயன்பாட்டுக்கான இசைக் கருவிகள், மருந்து பொருட்கள் மற்றும் அறைக்கலன்கள் வரை நீளும் இந்த நீண்ட சங்கிலியின் சில கண்ணிகளைத் தேடி இணையத்திலும், சென்னையின் தெருக்களிலும் நடத்தப்பட்ட தேடல்களிலிருந்து சில விவரங்களை தருகிறோம்.
இந்தியாவில் வெட்டப்படும் செம்மரத்தில் மூன்றில் இரண்டு பங்குதான் ஏற்றுமதியாகிறது.
நம் ஊரில் முன்பு மரப்பாச்சி பொம்மை செய்வதற்கு செம்மரத்தை பயன்படுத்தியிருக்கின்றனர். இது போக கலைப்பொருட்கள் செய்யவும் பயன்படுத்தியிருக்கின்றனர். இப்போது, சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழக அரசின் பூம்புகார் கலைப்பொருட்கள் காட்சியகத்தில், செம்மரத்தில் செய்த ஒரு மரப்பாச்சியின் விலை ரூ 6,500. அதே அளவிலான விநாயகர் சிலையின் விலை ரூ 9,500. பெரிய விநாயகர் சிலை ரூ 20,000.
பூம்புகார்
சென்னை அண்ணாசாலையில் உள்ள பூம்புகார் கைவினைப் பொருள் கடையில் செம்மரக் கட்டையில் செய்த மரப்பாச்சி, பிள்ளையார் பொம்மைகள்.
“இதெல்லாம் 5 வருசத்துக்கு முன்ன வந்தது சார். மைசூர்ல எங்க ஃபேக்டரில செஞ்சு வரும். இப்பல்லாம் வர்றது. இல்ல. இது அதிகமா விக்கிறதும் இல்ல. வெளிநாட்டுக் காரங்களுக்கு டிசைன் டிசைனா இருந்தாத்தான் வாங்குவாங்க. ஒரே மாதிரி டிசைனா இருந்தா வாங்க மாட்டாங்க” என்றார் விற்பனை ஊழியரான பெண்.
பூம்புகாரைத் தவிர்த்த அண்ணா சாலையில் உள்ள மற்ற அனைத்து தனியார் கடைகளிலும், “செம்மரம் என்ற ஒன்றை கண்ணாலேயே பார்த்ததில்லை” என்று சாதித்தனர். கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளாத குறையாக கடையிலிருந்து அனுப்பி வைத்தனர். அது எவ்வளவு மோசடியானது என்பதை பின்னர் பார்ப்போம்.
The Old Curiosity Shop
“இன்னும் கொஞ்ச நாள்ல இதுல எதுவும் மிஞ்சாது. இதைப் போல (ஒரு பொம்மையை காட்டுகிறார்) பிளாஸ்டிக்ல செஞ்சு பெயின்ட் அடிச்சுதான் கலைப்பொருட்களே கிடைக்கும்”
the old curiosity shop என்ற கடையில் இருந்த லத்தீப் என்பவர், ஆந்திராவில் மரம் வெட்டும் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதை வன்மையாக கண்டித்தார். ஆனால், பண வேட்டைக்கான தொழிலில் இது தவிர்க்க முடியாதது என்றார்.
“வேறென்ன எதிர்பார்க்கிறீங்க. ஒரு மர வகையை வெட்டி பொருள் செஞ்சா, சீக்கிரம் அந்த மர இனமே அழிஞ்சுதான் போகும். உதாரணமா, அகர் பத்தியை எடுத்துக்கோங்க. அந்தமான் காடுகள்ல அகர்-னு ஒரு மரம் இருந்தது. அந்த மரத்தோட கட்டையை கொழுத்தினா நல்லா வாசம் வரும். அதை மன்னர்களுக்கு பயன்படுத்தினாங்க. அதையே பெரிய அளவில சந்தைப்படுத்த ஆரம்பிச்சதும், சீக்கிரமே மரத்தை எல்லாம் வெட்டி காலி பண்ணிட்டாங்க. இப்ப மூங்கில் குச்சியில, ஏதோ பசையைத் தடவி அகர்பத்தின்னு விக்கிறாங்க
இந்த கலைப்பொருட்கள பாருங்க, சந்தன மரம், கருங்காலி மரம், ரோஸ்வுட் எல்லாம் இருக்கு. இன்னும் கொஞ்ச நாள்ல இதுல எதுவும் மிஞ்சாது. இதைப் போல (ஒரு பொம்மையை காட்டுகிறார்) பிளாஸ்டிக்ல செஞ்சு பெயின்ட் அடிச்சுதான் கலைப்பொருட்களே கிடைக்கும். ஒண்ணும் செய்ய முடியாது”
கடந்த 10 ஆண்டுகளில் மதுரை மாவட்டத்தில் கிரானைட் மலைகளும், தென் மாவட்ட கடற்கரைகளில் தாதுமணலும் கொள்ளை போவதைப் போல, இந்திய மாபியாக்கள் சர்வதேச சந்தையில் கொள்ளை விலைக்கு விற்று பணம் ஈட்டுவதற்காக ஆந்திராவிலிருந்து செம்மரக் கடத்தலும் அதிகமாகியிருக்கிறது.
கடந்த 5 ஆண்டுகளில் வருவாய்த்துறை கண்காணிப்பு இயக்குனரகத்தின் சென்னைக் கிளை, சென்னை துறைமுகத்திலிருந்தும் சென்னையைச் சுற்றியிருக்கும் பொன்னேரி, ரெட் ஹில்ஸ், வண்ணாரப்பேட்டை, யானை கவுனி போன்ற இடங்களிலிருந்து ரூ 415 கோடி மதிப்பிலான 155 டன் செம்மரக் கட்டைகளை கைப்பற்றியிருக்கிறது. “பிடிபடாமல் கடத்திச் செல்லப்பட்ட கட்டைகளின் அளவு இதை விட பல மடங்கு இருக்கும்” என்கின்றனர் வருவாய்த் துறை அதிகாரிகள். ஆந்திர காடுகளில் வெட்டி கடத்தப்பட்டு வரும் செம்மரக் கட்டைகள், சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு மரக் கிடங்குகளில் வைக்கப்பட்டு சென்னை துறைமுகம் வழியாக கடத்தப்படுகின்றன.
“பைக்ல, கார்ல வச்சு கொண்டு வந்திருவாங்க சார். எல்லாத்தையும் ரெட் ஹில்ஸ் பக்கத்திலதான் சேர்த்து வைப்பாங்க. வாங்கி கைமாத்துவதுதான் எங்க வேல. 200 ரூபாய், 300 ரூபாய் கிலோவுக்கு வாங்கி, தரத்தை பொறுத்து 1000 ரூபாய் கிலோ வரைக்கும் வித்துடுவோம். எங்க கடைக்கு எல்லாம் சரக்கு வராது.
சென்னையிலேயே 200-300 பேரு இந்த வியாபாரத்தில இருக்காங்க. எங்க கிட்ட வாங்குறவங்க என்ன கொண்டு போறாங்கன்னு தெரியாது. ஆனா, நாங்க மாசத்துக்கு 1 டன் வரைக்கும் வாங்கி விக்கிறோம்.
கோயில் கலசத்தில இந்தக் கட்டைய வைப்பாங்கன்னு சொல்றாங்க. மாதவிடாய் பிரச்சனைங்க, ஆண்மை குறைவு இதுக்கெல்லாம் பயன்படுமாம். இந்தக் கட்டையில செஞ்ச பொருள் பல வருசத்துக்கு கெடாம இருக்கும்”.
இதைச் சொன்னவர் வடசென்னையில் மரத் தொழில் செய்யும் ஒரு வியாபாரி.
சமீபத்தில், சென்னைக்கு அருகில் கார்களில் கடத்தப்படும் செம்மரக் கட்டைகள் பல முறை கைப்பற்றப்பட்டிருக்கின்றன. ஏப்ரல் முதல் வாரத்தில் போளூரைச் சேர்ந்த செல்வம் மற்றும் ஜமுனாமத்தூரைச் சேர்ந்த ராமராஜன் ஆகியோர் காரில் 746 கிலோ எடையுள்ள 23 செம்மரக் கட்டைகளுடன் சோளிங்கர் அருகில் வந்து கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
கடத்தல் கலன்கள்
“கன்டெய்னருக்குள்ள செம்மரக் கட்டை என்ன, குடுவை குடுவையா மனுச உறுப்பை அனுப்பினாங்கன்னா கூட யாருக்கும் தெரியாது”
சென்ற ஒரு மாதத்தில், காட்பாடி உருகில் 2 வண்டிகளிலும், ரத்னகிரி அருகில் உள்ள ஆரப்பாக்கத்தில் 1 வண்டியும் செம்மரங்களுடன் விபத்தில் சிக்கி கைவிடப்பட்டு காணப்பட்டன. ஒவ்வொரு காரிலிருந்தும் 17 முதல் 18 செம்மரக் கட்டைகளை போலீஸ் கைப்பற்றியிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் சுமார் 1,000 டன் செம்மரக் கட்டைகள் கைப்பற்றப்படுகின்றன. “இப்போது பல்வேறு மாநில அரசுகளின் கைவசம் சுமார் 11,800 டன் செம்மரக் கட்டைகள் உள்ளன” என்கிறார் திருப்பதி மண்டல வனத்துறை அலுவலர் ஜி. ஸ்ரீனிவாசலு. ஆந்திர அரசின் கைவசம் 2002 முதல் கைப்பற்றப்பட்ட சுமார் 8,500 டன் (மதிப்பு சுமார் ரூ 3,000 கோடி) செம்மரக் கட்டைகள் உள்ளன. இது போக மகாராஷ்டிரா, குஜராத் அரசுகளும் கணிசமான அளவு கட்டைகளை கைவசம் வைத்திருக்கின்றன.
தற்போது ஆந்திர போலிசின் என்கவுண்டர் கொடூரத்தால் மாநில அரசுகள் வைத்திருக்கும் செம்மரக் கட்டைகளின் மதிப்பு கணிசமாக உயர்ந்துவிடும். அவற்றை விற்றால் மாநில அரசுகளும் கூட பெரும் பணத்தை திரட்ட முடியும்.
செம்மரக் கடத்தல்
2013-14ல் பிடிக்கப்பட்ட செம்மரக் கட்டைகள் பற்றிய புள்ளிவிவரம்.
சென்னை துறைமுகத்தில் வேலை செய்யும் ஒரு ஊழியரை தொடர்பு கொண்டோம். “சார், துறைமுகத்துக்கு என்ன வருது, என்ன வெளிய போகுதுன்னு தொழிலாளிக்கு தெரிய சான்சே இல்ல சார். 1990-ல 25,000 தொழிலாளிங்க இருந்தாங்க, இப்போ 6,000 பேர்தான் இருக்காங்க. பலருக்கு விருப்ப ஓய்வு, புதிதாக ஆள் எடுப்பது இல்லைன்னு எல்லாத்தையும் தனியார் கையில ஒப்படைச்சிட்டாங்க.
எல்லாமே கன்டெய்னர்ல அடைச்சி, சீல் வச்சி வரும். கன்டெய்னரை கிரேன் கொக்கியில் மாட்டி விடுவது மட்டும்தான் வேலை. அதைக் கூட துறைமுகத் தொழிலாளி செய்றதில்ல. தனியார் கம்பெனி ஆள் வெச்சி செஞ்சிக்கிறாங்க. கன்டெய்னருக்குள்ள செம்மரக் கட்டை என்ன, குடுவை குடுவையா மனுச உறுப்பை அனுப்பினாங்கன்னா கூட யாருக்கும் தெரியாது.” என்றார் அவர். 2001 முதல் சென்னை துறைமுகத்தின் கன்டெய்னர் (சரக்கு கலன்) முனையத்தை டி.பி வேர்ல்ட் என்ற பன்னாட்டு தனியார் நிறுவனம்தான் இயக்கி வருகிறது.
கொல்லப்பட்ட தொழிலாளிகள்
கடந்த 2014-ல் ஆந்திராவில் கொல்லப்பட்ட தமிழக தொழிலாளிகள்.
சரக்கு கலன் முனையத்தில் சுங்க அதிகாரிகள் அல்லது, ஏற்றுமதியாளரின் கிடங்கிலேயே கலால்துறை அதிகாரிகள் சீல் (முத்திரை) வைத்து விடுகிறார்கள். அவர்களது ஒத்துழைப்புடனோ அல்லது துறைமுகத்துக்கு கொண்டு வரும் வழியில் முத்திரையை உடைக்காமலேயே சரக்கு கலத்தின் ஹிஞ்சுகளை கழற்றி பொருளை மாற்றி விடுகின்றனர்.
சென்னை, தூத்துக்குடி துறைமுகங்கள் தவிர சித்தூரிலிருந்து தொலைவில் இருக்கும் மேற்கு கடற்கரையின் மும்பை துறைமுகம் வழியாகவும், கிழக்கு கடற்கரையின் விசாகப்பட்டினம் துறைமுகம் வழியாகவும் கூட செம்மரக் கட்டைகள் கடத்தப்படுகின்றன.
சென்ற ஆண்டில் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் பிடிபட்ட 3 ஏற்றுமதி பொதிகளைப் பற்றி பார்க்கலாம். இவற்றைத் தவிர பிடிபடாமல் 100 கணக்கான பொதிகள் போயிருக்கும் என்கிறது இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள டெக்கான் குரோனிக்கிள் நாளிதழ்.
ஆந்திரா செம்மரக் காடுகள்பிடிபட்ட 3 பொதிகளில் இரண்டு ஒரிசாவின் ரூர்கேலா, கட்டாக் நகரங்களிலிருந்து வந்ததாக காட்டப்பட்டிருக்கின்றன. இன்னொன்று சென்னையிலிருந்து வந்திருக்கிறது.
மே 2013-ல் வருவாய்த்துறை அதிகாரிகள், மலேசியாவுக்கு போகும் கப்பலில் ஏற்றப்படவிருந்த 16 டன் செம்மரக் கட்டைகளை (மதிப்பு ரூ 5 கோடிக்கும் மேல்) கைப்பற்றினர். 28 டன் கொள்ளளவு கொண்ட அந்த கலத்தில் 16 டன் சுடுகலன் சிமென்டை (refractory cement) மலேசியாவுக்கு அனுப்புவதாக ரூர்கேலாவைச் சேர்ந்த ஏற்றுமதி நிறுவனம் ஆவணங்களை கொடுத்திருந்தது. அந்த சரக்கு கலம், ஏற்றுமதி நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் கலால் துறை அதிகாரிகளால் முத்திரை வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், கிடைத்த உளவு தகவலின் அடிப்படையில் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் திறந்து பார்த்த போது கலத்தில் 16 டன் எடையுள்ள 400 செம்மரக் கட்டைகள் இருந்திருக்கின்றன. மலேசியா அல்லது துபாய்க்கு அனுப்பப்படும் இந்த செம்மரக் கட்டைகள் அங்கிருந்து சீனாவை சென்றடைகின்றன.
இன்னொரு முறை, கிரானைட் கற்களை ஹாங்காங்குக்கு அனுப்புவதாக ஆவணப்படுத்தப்பட்டிருந்த கப்பல் கலத்திலிருந்து செம்மரக் கட்டைகள் கைப்பற்றப்பட்டன.
செம்மரக் கடத்தல்
செம்மரக் கட்டைகள் அடங்கிய ஒரு லாரி அசாம் போலீசால் கைப்பற்றப்பபட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது (படம் விளக்கத்துக்காக மட்டும்).
செம்மரம் மானாவாரியாக வளரும் ஆந்திர காடுகளுக்கும், செம்மரக் கட்டைகள் பல லட்சம் ரூபாய் மதிப்பில் விற்கப்படும் சீன சந்தைக்கும் இடையே பாதை கடலில் மட்டுமின்றி நிலத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது. அசாமின் கர்பி அங்லோங் மாவட்டம் வழியாக நடந்த கடத்தலைப் பற்றிய ஒரு கதையை கேட்போம்.
ஆந்திர பிரதேசத்தின் வனத்துறை அதிகாரிகள் என்று சொல்லிக் கொள்ளும் நபர்களோடு, நன்றாக பொதியப்பட்டு லாரி நிறைய செம்மரக் கட்டை சுமைகள் அசாமை சென்றடைகின்றன. அவற்றுக்கான போலி ஆவணங்களையும் கைவசம் வைத்திருக்கின்றனர். வடகிழக்கு இந்தியாவின் கடைசி எல்லைப் புற நகரமான மோரே வழியாக மியன்மாருக்குள் அனுப்பப்பட்டு அந்நாட்டின் கச்சின் பள்ளத்தாக்கு வழியாக சீனாவுக்குள் கடத்தப்படுகின்றன, செம்மரக் கட்டைகள்.
2009-ம் ஆண்டு செம்மரக் கட்டைகள் அடங்கிய ஒரு லாரி அசாம் போலீசால் கைப்பற்றப்பபட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது. 16 டன் செம்மரக் கட்டைகளும், அவற்றை ஏற்றிச் சென்ற லாரியும், வனத்துறை மண்டல அதிகாரியால் ‘யாரும் சொந்தம் கொண்டாடாத சொத்து’ என்று அறிவிக்கப்படுகிறது. அதாவது, யார் மீதும் கிரிமினல் வழக்கு போடப்படவில்லை.
கைப்பற்றப்பட்ட செம்மரக் கட்டைகள்
2011-ல் கொச்சியில் பிடிபட்ட செம்மரம் நிரம்பிய கன்டெய்னர் (ஏற்றுமதிக்கான ஆவணங்களில் ரப்பர் மிதியடிகள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது).
மண்டல வனத்துறை அதிகாரி இந்த 16 டன் செம்மரக் கட்டைகளை விற்று விடுவது என்று முடிவு செய்கிறார். அரசின் அதிகார பூர்வ விலையின் படி அதற்கு ரூ 4.5 லட்சம் என்று விலை நிர்ணயித்து, இது தொடர்பான போலி டெண்டர் ஆவணங்களையும் தயாரிக்கிறது அந்த அதிகார வர்க்க கும்பல். இந்த செம்மரக் கட்டைகள் மியன்மாருக்கு பாதுகாப்பாக அனுப்ப வசதியாக, 4 லாரி சுமை தேக்கு மரக் கட்டைகளையும் சேர்த்து விற்க முடிவு செய்கின்றனர்.
4 லாரி தேக்குமரம், 1 லாரி செம்மரம் இவற்றை ரூ 7.5 லட்சத்துக்கு சங்கீதா தெரன்பீ என்ற மாணவிக்கு விற்பதற்கு, கர்பி ஆங்லோங் சுயாட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறுகிறது வனத்துறை. சங்கீதா, வனத்துறையில் பணிபுரியும் ரேகா பரூவா என்ற அதிகாரியின் மூத்த மகள். மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் உள்ள தனது வங்கிக் கணக்கிலிருந்து சங்கீதா ரூ 7.5 லட்சம் தொகையை செலுத்தியிருக்கிறார். மார்ச் 2009-ல் இந்த 16 டன் செம்மரக் கட்டைகளை மோரே வரை அனுப்புவதற்கான உரிமங்கள் வழங்கப்பட்டு அங்கிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் அனுமதி வழங்கப்படுகிறது.
செம்மரக் கடத்தல்
மும்பை துறைமுகத்தில் கைப்பற்றப்பட்ட செம்மரக் கட்டைகள்.
2009-ல் நடந்த இந்த சம்பவத்திற்கு பிறகு அசாமில் இதே அளவிலான பல செம்மர பொதிகள் அசாம் போலீசாலும், வனத்துறையாலும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. எல்லைப் புற நகரான மோரேவிலும் சில கைப்பற்றப்பட்டிருக்கின்றன.
ஆந்திர காடுகளில் வெட்டப்படும் இந்த மரங்கள், எந்தத் தடையும் இல்லாமல் ஆந்திரா, ஒரிசா, மேற்குவங்கம், அசாம் வழியா மியன்மாருக்கு கடத்தப்பட்டு தென் சீனாவை அடைய முடிகிறது என்றால் இந்த சங்கிலித் தொடரில் இடம் பெறும் அதிகாரிகள், பண முதலைகள், உள்ளூர் ரவுடிகளின் தொடர்பு பலத்தை புரிந்து கொள்ளலாம்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் 6 டன் செம்மரக் கட்டைகளை கடத்த முயற்சித்ததாக தான் ஷூய் (51), தோய் யுயான் (45), சர் ஷாய் (25), மற்றும் வெய் சீலியாங் (27) ஆகிய 4 சீனர்கள் கர்நாடகாவின் ஹோஸ்கோட் தொழில்துறை பகுதியில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
செம்மரக் கடத்தல்
கொச்சியில் விமான பயணிகளின் பெட்டிகளிலிருந்து கைப்பற்றப்பட்ட செம்மரக் கட்டைகள்.
சென்ற ஆண்டு நவம்பர் மாதம், விஜயவாடாவின் நியூ ஆட்டோ நகரில் உள்ள ஒரு கிடங்களிலிருந்து ரூ 100 கோடி மதிப்பிலான 30 டன் செம்மரக் கட்டைகளை பிடித்திருக்கின்றனர். சேசாச்சலம் காடுகளிலிருந்து நெல்லூர் வழியாக இவை விஜயவாடாவுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன.
கடல் வழியாக, தரை வழியாக மட்டுமின்றி வான் வழியாகவும் செம்மரக் கட்டைகள் பறக்கின்றன.
“2013-ம் ஆண்டில் 55 சீனர்கள் தமது கைப் பெட்டியில் செம்மரக் கட்டைகளை கடத்தி செல்வதை பிடித்திருக்கிறோம்” என்கிறார் டெல்லி விமான நிலையத்தின் மூத்த அதிகாரி. 2013-ல் டெல்லி விமான நிலையத்தில் பிடிக்கப்பட்ட மொத்தம் 71 கடத்தல் முயற்சிகளில் 18 டன் மரம் பிடிபட்டிருக்கிறது.
செம்மரக் கடத்தலை ஏழைத் தொழிலாளிகள் படுகொலையாக மட்டும் பார்க்க முடியாது. வைகுண்டராஜனின் தாது மணல் கொள்ளையிலிருந்து, பி.ஆர் பழனிச்சாமியின் கிரானைட் கொள்ளை, ரெட்டி சகோதரர்களின் இரும்புத் தாது கொள்ளை, வேதாந்தா அலுமினிய தாதுவை கைப்பற்றும் முயற்சி என்று நாட்டுக்கும் மக்களுக்கும் விரோதமான செயல்கள் தொடர்ந்து நடக்கின்றன. ஆண்டு தோறும், பல லட்சம் கோடி மதிப்பிலான செல்வங்கள் கொள்ளை போகின்றன.
தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் தனியார் மய, தாராள மய, உலக மய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாகவே இந்த இயற்கை வளக் கொள்ளைகள் நடந்து வருகின்றன. இவற்றைத் தடுக்க முடியாததோடு தாமும் கூட்டாக கொள்ளையில் ஈடுபடுபவையாக அரசும், அரசியல்வாதிகளும் சீரழிந்து போயிருக்கின்றனர்.
செம்மரம் என்பது ஏதோ சில மலைவாழ் மக்களால் வெட்டி எடுக்கப்பட்டு விற்கப்படும் குடிசைத் தொழில் அல்ல. சர்வதேச வலைப்பின்னலோடும், அரசு, முதலாளிகளின் கூட்டோடும் நடத்தப்படும் ஒரு திருட்டு வணிகம்.
உலக அளவில் மேட்டுக்குடி சந்தையைக் கைப்பற்றும் வண்ணம் இத்தகைய ‘அரிய’ வகை பொருட்கள் பற்றிய கதைகள் வருடத்திற்கொரு முறை ஓதப்படுகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டுகளில் செம்மரம் இப்படி ஒரு உயர்நிலை நுகர்வை அடைந்துள்ளது.
தென் கிழக்காசிய நாடுகளிலும், சீனாவிலும் இவற்றிற்கு சந்தை இருந்தாலும், இதன் நிர்வாக வேலைப் பிரிவினைகள் சித்தூரிலிருந்தே ஆரம்பிக்கிறது. மரம் வெட்டும் அனுபவமுள்ள தொழிலாளிகள், அவர்களை அழைத்து வரும் தரகர்கள், போக்குவரத்து, கிட்டங்கி, ஏற்றுமதி, அதிகார வர்க்கம், போலீசு, இவற்றின் பல நிலைகளில் உதவி செய்யும் அரசியல்வாதிகள், உள்ளூர் பிரமுகர்கள் என்று இதன் வலைப்பின்னல் பெரியது. அரியவகை மரம் என்பதை வைத்து உருவாக்கப்படும் செம்மரங்களின் மதிப்பும் வர்த்தகமும் மிகப்பெரிய பணத்தை புரட்டுகிறது.
ஆகவே இந்த தொழிலால் ஆதாயம் அடையும் சக்திகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்காமல் தொழிலாளிகள் மட்டும் குறிவைத்து கொல்லப்படுவது என்பது நிச்சயம் திருடர்களுக்கிடையே நடக்கும் பங்குச் சண்டைதான். செம்மர கடத்தலால் ஆதாயம் அடைந்தவர்கள் பகிரங்கமாக உலா வர, வெட்டியவர்கள் மட்டும் சிறைகளில் வாழ்கின்றனர். சிலர் கொல்லவும் படுகின்றனர்.
ஆளும் வர்க்கம் முழுவதுமே இந்தக் கூட்டணியில் உள்ளது. இந்தக் கூட்டணியை முறியடிக்காமல் செம்மரங்களை பாதுகாக்க முடியாது.
- வினவு செய்தியாளர்கள்.

கருத்துகள் இல்லை: