வெள்ளி, 24 ஏப்ரல், 2015

இன்று ஜெயகாந்தன் பிறந்த நாள்! முருகபூபதியின் பார்வையில்

இன்று  ஜெயகாந்தனின்  பிறந்த தினம். - முருகபூபதி தமிழ்நாட்டில்  கடலூரில்  மஞ்சகுப்பம்  என்ற  கிராமத்தில் தண்டபாணிப்பிள்ளை  - மகாலட்சுமி  அம்மாள்  தம்பதியரின்  மகனாக  24-04-1934  ஆம்  திகதி   பிறந்த ஜெயகாந்தனுக்கு  இன்று  24-04-2015 ஆம்  திகதி  81   வயது.  ஆனால்,  வழக்கம்போன்று  தமது நண்பர்களுடன்   இந்த  நன்நாளைக் கொண்டாட வேண்டியவர்  சில நாட்களுக்கு   முன்னர்  கடந்த  08-04-2015  ஆம்  திகதி   மறைந்துவிட்டார்.ஜெயகாந்தன்   சின்னவயதில்  தமது  ஊரைவிட்டு  சென்னைக்கு வந்தவர்.    ஐந்தாம்  வகுப்புவரையுமே   படித்தவர்.   இளம் பராயத்தில் பல   அன்றாடத் தொழில்களும்  செய்தவர்.   எனினும்  அவரை புடமிட்டு   வளர்த்தது  சென்னையிலிருந்த  கம்யூனிஸ்ட்  கட்சி காரியாலயம்.  அங்கிருந்த  தோழர்களின்  அரவணைப்பு  அவரை பின்னாளில் ஆளுமையுள்ள  சக்தியாக  வளர்த்தது.
தமது 12 வயதில்    சென்னை  வந்து  கம்யூனிஸ்ட்  கட்சியின்    கம்யூன்   வாழ்க்கைக்கு  தன்னை  அர்ப்பணித்துக்கொண்டு  படிப்படியாக   தன்னை  வளர்த்துக்கொண்டவர்.   சுயம்புவாக வாழ்ந்தமையினால்    சுதந்திரமாகவும்  இயங்கினார். தமிழ்   இலக்கிய,   திரைப்பட ,  அரசியல்  மற்றும்  சமூகத்தினால் கவனிக்கப்பட்ட   ஒருவரின்  மறைவிலிருந்து  அவரிடம்  கற்றுக்கொள்ளவேண்டியனவும்   - புறம் ஒதுக்கவேண்டியனவும் இருந்தாலும்    பாரதி,   புதுமைப்பித்தன்  வரிசையில்  அவர்  போற்றப்பட வேண்டியவரே.

முன்னவர்கள்  இந்த  சமூகத்தை   பொறுத்தவரையில் அதிர்ஷ்டசாலிகள்.    பாரதி  தமது  39  வயதிலும்   புதுமைப்பித்தன் தமது   42  வயதிலும்    மறைந்தார்கள்.  ஆனால்,  ஜெயகாந்தன் எதிர்வினைகளுடன்    போராடி  இறுதியில்  மௌனமே  ஒரு பாஷையாக    இருந்தவர்.

  பாரதியும்   புதுமைப்பித்தனும்  மறுவாசிப்புக்குட்பட்டது  அவர்களின் மறைவுக்குப்பின்னர்தான்.    ஆனால்  81  வயது  வரையில்  வாழ்ந்து மறைந்த   ஜெயகாந்தன்,  வாழும்  காலத்திலேயே மறுவாசிப்புக்குட்பட்டவர்.

அதனால்  ஜெயகாந்தனது  மேதாவிலாசம்  அவரது  கருத்துக்களினால்    அவ்வப்பொழுது  கேள்விக்குள்ளாகியிருக்கிறது. அவர்    இலக்கியத்துடன்  நின்றவர்  அல்ல.   பாரதி  அரசியல்  பேசினார்.   எழுதினார்.  ஆனால்.  தேர்தல்  பிரசாரம்  செய்தவர்  அல்ல. அவர்   வாழ்ந்த  காலம்   சுதந்திரத்திற்கு   முந்தியது.

புதுமைப்பித்தன்   முற்போக்கான  பல  சிறுகதைகளை   தந்திருந்தாலும் சினிமாவில்   காட்டிய  ஆர்வத்தை  அரசியலில்  காண்பிக்கவில்லை.

பாரதி    சினிமா   பக்கம்  செல்லும்  காலம்  இருக்கவில்லை.   ஆனால்,  அவரது   கவிதைகள்  சினிமாவில்  பாடல்களாக  ஒலித்தன.

ஜெயகாந்தன்  - இலக்கியத்திலும்  சினிமாவிலும்  அரசியலிலும் நெருங்கியிருந்து   பின்னாளில்  ஒதுங்கியவர்.

1977   இல்  நடந்த  சட்டசபைத் தேர்தலில்  தியாகராய  நகர் தொகுதியில்   சுயேட்சை   வேட்பாளராக  போட்டியிட்டு தோல்வியடைந்தவர்.

பாரதி   இலங்கையுடன்  நட்புறவு  வேண்டும்  என்பதற்காக "சிங்களத்தீவினுக்கோர்  பாலம்  அமைப்போம் " என்று  பாடிவிட்டு சென்றார்.Dominicjeeva3

அண்மையில்   இலங்கை  வந்த  பாரதப்பிரதமர்  நரேந்திரமோடியும் பராளுமன்றத்தில்   தமது  நீண்ட  உரையை   எந்தவொரு   குறிப்புமின்றி நிகழ்த்திவிட்டு  - இறுதியாக  பாரதியின்  பாலம்  அமைக்கும்  கருத்தை   மாத்திரம்  எழுதிவந்து  உச்சரித்தார்.

புதுமைப்பித்தன்  தமது  துன்பக்கேணியில்  கதையில்  இலங்கை  வந்த    இந்திய  மக்கள்,  தேயிலைத்தோட்டங்களில்  படும்  துயரத்தை பதிவுசெய்தார்.    எனினும்  பாரதியோ   புதுமைப்பித்தனோ   இலங்கை வந்ததில்லை.     புதுமைப்பித்தனுக்கு  வீரகேசரியில் பணியாற்றுவதற்கும்   ஒரு  சந்தர்ப்பம்  கிடைத்தும்  அவர் வரவில்லை.

ஆனால்  -  பாரதியின்  நெருங்கிய  நண்பர்  வ.ரா.  வீரகேசரியில் ஆசிரியராக   பணியாற்றியவர்.

ஜெயகாந்தனுக்கும்   இலங்கைக்கும்  உள்ள  உறவும்  தொடர்பும் சுவாரஸ்யமானது.    பாரதி -  புதுமைப்பித்தனுக்குப்பின்னர் இலங்கையில்    தேர்ந்த  இலக்கியவாசகர்களிடத்திலும் இலக்கியப்பேராசிரியர்களிடத்திலும்   மிகுந்த  தாக்கத்தை ஏற்படுத்தியவர்    ஜெயகாந்தன்.

" ஜெயகாந்தன்   இலங்கை வருவார்... ஆனால்... வரமாட்டார்... " என்று பேசுபொருளுக்கு    ஆளானவர்.   ஆயினும் -  அவரது  எழுத்துக்கள் இலங்கையில்  தேர்ந்த  வாசகர்களை   ஆக்கிரமித்திருந்தன.

பேராசிரியர்  கா. சிவத்தம்பியின்  தமிழ்ச்சிறுகதை   இலக்கியம்  தோற்றமும்  வளர்ச்சியும்  நூலிலும்  பேராசிரியர்  க. கைலாசபதியின்   தமிழ்  நாவல்  இலக்கியம்   நூலிலும்  ஜெயகாந்தனுக்கு  என  சில பக்கங்கள்   உள்ளன.

என்னைப்பொறுத்தவரையில்   1970  இற்குப்பின்னர்   என்னிடத்திலும் தாக்கத்தை    ஏற்படுத்தியவர்  ஜெயகாந்தன்.   ஆரம்பத்தில்  மு. வரதராசன்,   அகிலன்,  நா. பார்த்தசாரதியின்  படைப்புகளை படித்துக்கொண்டிருந்த   எனக்கு  ஜெயகாந்தனது  முதல்  நாவல் வாழ்க்கை   அழைக்கிறது  புதிய  தரிசனத்தை   வழங்கியது.

அவருடைய  ஒரு  பிடி  சோறு  முதல்  ஜய ஜய  சங்கர   வரையில் அனைத்து  சிறுகதைகளையும்  குறுநாவல்கள் -  தொடர்கதையாக வெளியாகி  நூலுருப்பெற்ற  நாவல்கள்  பெரும்பாலானவற்றையும் படித்ததுடன்,   அவரது  இலக்கிய  வாதியின்  கலை  உலக அனுபவங்கள்,   அரசியல்  அனுபவங்கள்  மற்றும்  கட்டுரை   நூல்கள் முதலானவற்றையெல்லாம்    தொடர்ந்து  படித்தேன்.

காலப்போக்கில்  ரகுநாதன்,   கி.ராஜநாரயணன்,   ராஜம் கிருஷ்ணன், ராமகிருஷ்ணன்,    ஜெயமோகன்,  என்று  எனது  வாசிப்புத்தளம் மாறியது.   ஜெயகாந்தனும்  எழுதுவதை   நிறுத்திக்கொண்டார். 1990   ஆம்  ஆண்டு  அவரை   சென்னை   ஆழ்வார்பேட்டையில்  அவரது   குடிலில்  ( இலக்கியவட்டாரத்தில்  அந்த  மாடிக்கட்டிட அறையை   ஜெயகாந்தன்  குடில்  என்றுதான்   அழைப்பார்கள்.) சந்தித்தவேளையிலும்   அவர்  எழுதுவதை   நிறுத்திக்கொண்டார். எனினும்   ஒரு  சொல்  கேளீர்  என்ற  அவரது  நூல்  1992    இல் வெளியாகியிருக்கிறது.    அதனைப்பார்க்கக்கிடைக்கவில்லை.

1990   இற்குப்பின்னர்  ஒரு  சில  நூல்களை   அவர் வரவாக்கியிருந்தாலும்.    சிறுகதை,   நாவல்கள்,  குறுநாவல்களை எழுதவில்லை.    ஏன்  எழுதுவதில்லை  எனக்கேட்டால்  இதுவரையில் எழுதியதை   படியுங்கள்.   படித்துவிட்டோம்  என்றால்,   மீண்டும் படியுங்கள்  எனச்சொல்லிக்கொண்டு  மீசையை   தடவிக்கொள்வார்.

அங்கு   தென்படும்  கம்பீரம்  அலாதியானது.  1990   களில்   ஏற்கனவே எழுதிய   தமது  சிறுகதைகளையே   நடிகரும்  இயக்குநருமான பாக்கியராஜ்   வெளியிட்ட   பாக்கியா  இதழுக்கு  கொடுத்தார்.   1990 களில்   அவரை   சந்தித்த  அந்த  இரவு வேளையில்,  பாக்கியா இதழிலிருந்து    வந்திருந்தவர்களிடம்  தமது  மாலை  மயக்கம் தொகுதியிலிருந்து   ஒரு  சிறுகதையை   காண்பித்து  அதனை பிரசுரிக்கச்சொன்னார்.

இலங்கையில்   என்னை   இலக்கிய  உலகிற்கு  அறிமுகப்படுத்திய மல்லிகை   ஆசிரியர்  டொமினிக்  ஜீவா   அவர்கள்தான்  சென்னையில் ஜெயகாந்தனையும் 1990  இல்  அறிமுகப்படுத்தியவர்.   ஜீவா இலங்கையில்  டானியல்,   கனகசெந்திநாதன்,   ஏ.ஜே.கனகரட்ணா, தெணியான்,   கனகராஜன்,   உட்பட  பலரை  எனக்கு அறிமுகப்படுத்தியவர்.

மல்லிகை   ஆசிரியர்  நீர்கொழும்பில்  எமக்கு  அறிமுகமான  1971  ஆம்   ஆண்டில்  அவருக்கு  ஜெயகாந்தன்  இடத்தில்  சற்றுக்கோபமும் மாறுபட்ட    அபிப்பிராயமும்  இருந்தது.

எனினும்   அவர்கள்  இருவரும்  முன்னர்  நல்ல  நண்பர்களாகவும் உறவJK&Bharathithasanாடியவர்கள்.    ஜெயகாந்தன்  ஆனந்த  விகடனில் முத்திரைக்கதைகள்    எழுதத்தொடங்கியதும்  தினமணிக்கதிரில் ரிஷிமூலம்   எழுதி  பின்னர் -  ஆசிரியர்  சிவராமனுக்கு  அக்கதை தொடர்பாக   பலத்த  கண்டனங்கள்  வந்த பின்னர்,   இனிமேல் அதுபோன்ற   கதைகளை   தினமணிக்கதிர்  பிரசுரிக்காது  என்று அறிவித்த  பின்னர்  சில    மாதங்களில்  தினமணிக்கதிரில் ஜெயகாந்தன்   காலங்கள்  மாறும்  என்ற  தொடர்கதையை  (இதுவே சில  நேரங்களில்  சில  மனிதர்கள்  நாவல்)   எழுதத்தொடங்கியதும் ஜெயகாந்தன்    சமரசங்களுக்குட்பட்டுவிட்டார்  என்று  காட்டமாக விமர்சிக்கத்  தொடங்கினார்   ஜீவா.

நாம்   ஜீவாவை   1971  இல்   சந்தித்த  காலப்பகுதியில்  ஏப்ரில்  கிளர்ச்சி நடந்து  - இரவில்  ஊரடங்குச்சட்டம்   பிறப்பிக்கப்பட்டிருந்தது.   அதனால்   நண்பர்களுடன்  இணைந்து  வளர்மதி  நூலகம்  என்ற அமைப்பை   தோற்றுவித்து  வளர்மதி  என்ற கையெழுத்துச்சஞ்சிகையும்    நடத்தினோம்.

நூலகம்   எமது  இல்லத்தில்  இயங்கியது.   ஜெயகாந்தனின்  முதல் நாவல்   வாழ்க்கை  அழைக்கிறது  ராணிமுத்து  பிரசுரமாக வெளியாகி   நண்பர்கள்  வட்டத்தில்  உலாவியது.   தொடர்ந்து கொழும்பு   செல்லும்  வேளைகளில்  ஜெயகாந்தன்  நூல்களை   வாங்கி வந்தேன்.   அதற்கு  முன்னர்  ஓட்டுமடத்தான்  என்ற  புனைபெயரை தமக்கு  சூட்டிகொண்டிருந்த  இலக்கிய  ஆர்வலரான  நாகராஜன் என்பவர்    ஜெயகாந்தனின்   ஆனந்த விகடன்  முத்திரைக்கதைகள் யாவற்றையும்   தொகுத்து  பைண்ட்   செய்து  எமக்கு வாசிக்கத்தந்திருந்தார்.    உன்னைப்போல்  ஒருவனையும்  அவ்வாறே வாசித்திருந்தோம்.

இவ்வாறு   நீர்கொழும்பில்  இலக்கிய  நண்பர்களிடம்  ஜெயகாந்தன் பெரும்   தாக்கத்தை   ஏற்படுத்தியிருந்த வேளையில் -  மல்லிகை ஆசிரியர்   மாதாந்தம்  அங்கு  வரும்பொழுது  கடற்கரையில்  சந்தித்து நீண்ட    நேரம்  கலந்துரையாடுவோம்.  அவ்வேளையில்     ஜீவா ஒரு படைப்பாளியைப்பற்றி  இன்னொரு  சிருஷ்டியாளனின்  பார்வை " என்ற  தொடர் கட்டுரையை   மல்லிகையில் எழுதத்தொடங்கியிருந்தார்.JKBook Cover

அடுத்து   வரவிருக்கும்  அத்தியாயத்தில்  தான்   என்ன எழுதப்போகின்றேன்  என்பதையும்  சூசகமாகச் சொல்லிவிடுவார். ஆனால்,  ஜெயகாந்தன்  வழிபாட்டில்  இருந்த  எமக்கு  ஜீவாவுடன் உடன் படமுடியவில்லை.

ஜீவா,  தமிழ்  நாட்டில்   சரஸ்வதி  விஜயபாஸ்கரன், வல்லிக்கண்ணன்,   ரகுநாதன்,  விந்தன்,  தி.க.சிவசங்கரன் முதலானவர்களுடன்  மாத்திரமன்றி  ஜெயகாந்தனுடனும்  நட்புறவு கொண்டிருந்தவர்.    ஜீவாவின்  சாலையின்  திருப்பம் சிறுகதைத்தொகுதிக்கு   ஜெயகாந்தன்  முன்னுரையும் எழுதியிருக்கிறார்.   ஜீவா  தொடக்கத்தில்  தமிழகம்  சென்றவேளையில்   ஜெயகாந்தனுடன்  ஊர்  சுற்றியவர். மாமல்லபுரத்திற்கு   இருவரும்  சென்றிருந்தபொழுது  ஜெயகாந்தன் ஜீவாவுக்கு   வாங்கிக்கொடுத்த  சால்வையை   இருவருமே போர்த்திக்கொண்டு   படத்துக்கு  போஸ்  கொடுத்திருக்கின்றனர்.

அந்தப்படத்தை  பிரேமில்  இட்டு  யாழ்ப்பாணம் மல்லிகைக்காரியாலயத்தில்   ஜீவா   மாட்டிவைத்திருந்தார்.

1965   காலப்பகுதியில்  சென்னை   சைனா  பஜாரில்  இருவரும் சாப்பிடுவதற்கு   ஒரு  ஹோட்டலைத் தேடிச்சென்ற  வேளையில் புரோட்வே   வீதியில்  ஒரு  பழைய  பூங்காவை   ஜீவாவுக்கு  காண்பித்த   ஜெயகாந்தன்,  தனது  கதைகளின்  மாந்தர்கள்  இங்குதான் வசிக்கின்றனர்   எனச்சொன்னாராம்.

ஜெயகாந்தன்   அடிநிலை   மக்களின்  கதைகளை   எழுதிய  காலத்தில் அவரை   ஏற்றிப்புகழ்ந்த  தமிழக  முற்போக்கு  இடது சாரி எழுத்தாளர்கள்  மத்தியில் - ஜெயகாந்தன்  ஆனந்தவிகடனிலும் தினமணிக்கதிரிலும்   எழுதத்தொடங்கியதும்  நிலைமை  மாறியது.

தமிழகத்தின்  ஒலி  இலங்கையிலும்  எதிரொலித்தது.

ஜெயகாந்தன்  தமது  படைப்புகள்   சமுதாய  ஆன்மீகப்பார்வை கொண்டவை   எனச்சொன்னதும் -  தனது  கதைகளுக்கு   முன்னுரை  எழுத  தமிழ்  நாட்டில்  ஒருவருக்கும்  யோக்கியதை  இல்லை   என்று சொன்னதும் -   தாம்  நடத்திய  ஞானரதம்  இதழில்  " பத்தினிக்கதைகள் படிப்பீரோ... மச்சினி கிடைத்தால் விடுவீரோ..." என்று  எழுதியதும்  முன்னர்  அவருக்கு  நெருக்கமாக  இருந்த  பல முற்போக்கு   எழுத்தாளர்கள்  வெகுண்டு  எழுந்தனர்.

ரகுநாதன்  -  கார்க்கி  இதழில்  சமுதாயப்பார்வை - ஆன்மீகப்பார்வை என்ற   கட்டுரையை   எழுதியதும்,  அதனை   மல்லிகையில்  மறுபிரசுரம்   செய்தார்  ஜீவா.   ஆனால் -  ஜெயகாந்தன்  அதற்கெல்லாம்   தமது  நூல்களின்  முன்னுரைகளிலேயே  பதில் சொன்னார்.   அவருடைய  ஒரு  பிடி  சோறு  சிறுகதைத்தொகுதிக்கு முன்னுரை   எழுதியவர்  தி.ஜ.ர.   அவரைத் தவிர  வேறு  எவரும் ஜெயகாந்தன்    நூல்களுக்கு  முன்னுரை எழுதியிருப்பதாகத்தெரியவில்லை.   தமது  அனைத்து  நூல்களுக்கும் அவரே   முன்னுரை   எழுதினார்.

ஜெயகாந்தனின்  33  நூல்களின்   முன்னுரைகள்  அனைத்தும் தனித்தொகுதியாகவும்  வெளியாகியிருக்கிறது.

மல்லிகையில்   ஜீவா  தொடர்ந்து  சில  மாதங்கள்  ஜெயகாந்தனை கடுமையாக   விமர்சித்தார்.   அவ்வப்பொழுது  அதற்கு  ஆதரவாகவும் எதிர்வினையாற்றியும்    கடிதங்கள்  வந்தன.  அவற்றையும்  ஜீவா பிரசுரித்தார்.

அச்சமயம்    யாழ்ப்பாணம்  பெரியாஸ்பத்திரியில்  டொக்டராக பணியாற்றிய   செல்வி  ராஜம்  தேவராஜன்  என்ற  மல்லிகை  வாசகி ஜீவாவின்   கருத்துக்களுக்கு  சார்பாக  ஒரு  கடிதம் எழுதினார்.

அதனை  வாசித்த  எனது  நீர்கொழும்பு  மாமா  மகள்  தேவா -  தேவி என்ற   புனைபெயரில்  எதிர்வினையாற்றினார்.   தேவியின்  பதில்  சற்று   வித்தியாசமாக  இருந்தமையினால்  மல்லிகையின் அட்டையில்   அவ்விதழில்  எழுதியவர்களின்  பெயர்ப்பட்டியலில் தேவியின்   பெயரும்  இடம்பெற்றது.

ராஜம்  தேவராஜன்  மணம் முடித்து  தற்பொழுது  இங்கிலாந்திலும் தேவி   ஜெர்மனியிலும்  வசிக்கின்றனர்.  தேவிதான்  பெண்கள்   சந்திப்பு ஊடறு  இலக்கிய  அமைப்பு  முதலானவற்றில்  சம்பந்தப்பட்டுள்ள தேவா   ஹெரால்ட்.

ராஜம்தேவராஜனின்   தம்பிதான்  யாழ்ப்பாணத்தில்  பிரபலமான சட்டத்தரணி   ரங்கன்  தேவன்.

நீர்கொழும்பில்   ஜெயகாந்தனை   நேரில்  பார்க்காமலேயே  அவரது படைப்புகளினால்   நாம்  ஈர்க்கப்பட்டிருந்தபொழுது,  நீர்கொழும்பூர் முத்துலிங்கம்   தமக்கு  மூத்த   மகன்  பிறந்ததும்   ஜெயகாந்தன்  என்று    பெயர்  சூட்டினார்.   அந்த  நீர்கொழும்பு  ஜெயகாந்தனும்  வளர்ந்து   தற்பொழுது  ஒரு  எழுத்தாளராக  அங்கே எழுதிக்கொண்டிருக்கிறார்.   ஆனால் -  நீர்கொழும்பூர்  முத்துலிங்கம் தனது   வாழ்நாளில்  தமது  ஆதர்ச  படைப்பாளி  ஜெயகாந்தனை சந்தித்தாரா...?  என்பது    தெரியாது.

1977   இல்  ஜெயகாந்தனுக்கு  43   வயது  வந்ததும்  கவியரசு கண்ணதாசன் ,  தமது  கண்ணதாசன்    ஏப்ரில்  இதழை   ஜெயகாந்தன் சிறப்பிதழாக   வெளியிட்டார்  அதன்  அட்டைப்படத்தில் ஜெயகாந்தனின்   இளமைத்தோற்றத்தையே  பதிவுசெய்தார். இந்தப்பத்தியில்   காணப்படுவது  ஜெயகாந்தனின்  புன்சிரிப்பு  தவழும் அந்த    இளமைத் தோற்றப்படமே.

குறிப்பிட்ட    கண்ணதாசன்  இதழை   எனக்கு  காண்பித்தவரும் மல்லிகை   ஜீவாதான்.
(தொடரும்) 
முற்போக்கு   இலக்கிய  முகாமில்   காலங்கள்  மாறியது .

சில   நேரங்களில்  சில   மனிதர்களாக   நட்புறவு  பேணிய  மல்லிகை  ஜீவாவும்   ஜெயகாந்தனும் தேனீ.com

கருத்துகள் இல்லை: