சனி, 25 ஏப்ரல், 2015

திருநங்கைகளின் வாழ்வில் ஒளியேற்றிய திருச்சி சிவா! கொண்டாடும் திருநங்கைகள்


வேதனையும், வலிகளும் நிறைந்த அவர்கள் சம மனிதர்களை போல் வாழ உரிமை கேட்டு உணர்ச்சி பெருக்கோடு நடத்திவரும் மனிதநேய போராட்டத்துக்கு நேற்று ஒரு இமாலய வெற்றி கிடைத்து இருக்கிறது.
பல பட்டப்பெயர்களால் புறக்கணிக்கப்பட்ட அவர்களை திருநங்கைகள் என்று அழைக்க வைத்தது முந்தைய தி.மு.க. அரசு.
இப்போதும் தி.மு.க.வை சேர்ந்த திருச்சி சிவா எம்.பி. பாராளுமன்ற மேல்சபையில் திருநங்கைகளுக்கு சம உரிமை வழங்கும் தனிநபர் மசோதாவை கொண்டு வந்தார்.
மனித நேயத்துடன் கொண்டுவரப்பட்ட அந்த மசோதாவை எதிர்ப்பதற்கு யாருக்கும் மனம் வரவில்லை. குரல் ஓட்டெடுப்பு மூலம் மசோதா நிறைவேறி விட்டது.

45 ஆண்டுகளுக்கு பிறகு பாராளுமன்ற வரலாற்றில் தனிநபர் மசோதா ஒன்று எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் நிறைவேறி இருக்கிறது.
இதன் மூலம் இந்த சமூகம் அவர்கள் மீதும் அக்கறையுடன் இருக்கிறது என்பதை வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.
இதை அறிந்ததும் திருநங்கைகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும், உற்சாகமாக ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
இனி எங்கள் வாழ்நாளெல்லாம் வசந்தகாலம்தான் என்று நன்றி உணர்வுடன் கூறினார்கள்.
இந்த மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்ற காரணமாக இருந்த திருச்சி சிவா (தி.மு.க.) எம்.பி. திருநங்கைகள் பற்றிய தனது எண்ண ஓட்டங்களை பதிய வைத்தார்.
கே: திருநங்கைகளுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்ற சிந்தனை உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?
ப: திருநங்கைகள் சமூகத்தில் புறக்கணிக்கப்படுவதை கண்கூடாக பார்த்திருக்கிறேன். விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது எப்படியெல்லாம் நாங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறோம் என்று அவர்கள் சொல்வதை கேட்க முடிந்தது. சமுதாயத்தில் பொது இடங்களில் திருநங்கைகளை கேலியாக பார்ப்பது பேசுவது இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
அவர்களால் கழிவறைக்கு கூட சுதந்திரமாக நுழைய முடியாது. ஓட்டலில் சாப்பிடுவது முதல் பஸ் பயணம் வரை எல்லா இடங்களிலும் அவர்களுக்கு பல்வேறு இடைஞ்சல்கள். வாடகைக்கு வீடு எளிதில் கிடைப்பதில்லை. பாலியல் தொல்லைகளும் இவர்களுக்கு அதிகம் உருவாகிறது. இவர்கள் தவறான வழிக்கு செல்ல சூழ்நிலை தான் காரணம்.
கல்விதான் ஒரு மனிதனை உயர்வடைய செய்யும். சமுதாயத்தில் கல்விதான் ஒருவருக்கு சம அந்தஸ்தை வழங்கும். அதற்கு சட்டபாதுகாப்பு இருந்தால்தான் அவர்களால் முன்னேற முடியும். இதனால்தான் இவர்களுக்கான ஒரு சட்ட பாதுகாப்பு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.
கே: இந்த மசோதா மீது எத்தனை உறுப்பினர்கள் பேசினார்கள்? மசோதாவுக்கு எதிர்ப்பு இருந்ததா?
ப: காங்கிரஸ், பா.ஜனதா, அ.தி.மு.க., கம்யூனிஸ்டு, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட 22 கட்சி எம்.பி.க்கள் பேசினார்கள். எல்லோரும் திருநங்கைகளுக்கு ஆதரவாகவே பேசினார்கள்.
நான் முதலில் மசோதாவை தாக்கல் செய்து 30 நிமிட நேரம் பேசினேன். எல்லோரும் பேசிய பிறகு இறுதியில் 20 நிமிடம் பேசினேன். மசோதாவை திரும்ப பெற கூடாது. நிறைவேற்ற வேண்டும் என்றேன்.
அனைத்து உறுப்பினர்களின் விவாதங்களை கேட்பதற்காக 40 திருநங்கைகள் மேல்–சபைக்கு வந்திருந்தனர்.
கே: இந்த மசோதா எதிர்ப்பு இன்றி நிறைவேறியதா? அல்லது சிக்கல் ஏற்பட்டதா?
ப: முதலில் குரல் வாக்கெடுப்பில் பாரதிய ஜனதா எம்.பி.க்களின் சத்தம் குறைவாக கேட்டதால் குரல் வாக்கெடுப்பில் மசோதா தோற்று விட்டதாக அறிவித்தனர்.
உடனே நான் வாக்கெடுப்பு வேண்டும் (டிவிஷன்) என்று கேட்டேன்.
அப்போது மத்திய மந்திரிகள் குறுக்கிட்டு இது முக்கியமான பிரச்சனை, கருத்து வேறுபாடு வந்துவிடக்கூடாது என்று கூறி 2–வது முறையாக குரல் வாக்கெடுப்பு விட ஏற்பாடு செய்தனர். அதன்பிறகு குரல் வாக்கெடுப்பில் மசோதா நிறைவேறியது.
கே: பாராளுமன்றத்திலும் மசோதா நிறைவேற வேண்டுமா?
ப: பாராளுமன்றத்தில் மசோதா எளிதில் நிறைவேறி விடும் என்ற நம்பிக்கை உள்ளது.
கே: இந்த சட்டத்தால் திருநங்கைகளுக்கு என்னென்ன பாதுகாப்பு கிடைக்கும்?
ப: கல்வியில் 2 சதவீத இடஒதுக்கீடு கிடைக்கும். தேசிய அளவில் சட்ட உரிமைகள் ஆணையம் உருவாக்கப்படும்.
திருநங்கைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அல்லது விரைவு கோர்ட்டு உருவாக்கப்படும்.
அவர்களுக்கு பாலுறுப்பு அறுவை சிகிச்சைக்கான வசதிகள், மருத்துவ உதவிகள், சமூக பாதுகாப்பு, உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த சட்டத்தால் கிடைக்கும்.
திருநங்கைகளின் முன்னேற்றத்துக்காகவும், இந்த சமுதாயத்தில் அவர்கள் புறக்கணிக்கப்படாமல் இருப்பதற்கும் தி.மு.க. என்றென்றும் பாடுபட்டு கொண்டிருக்கிறது.
இவர்களுக்கு திருநங்கைகள் என்று பெயர் சூட்டி வாரியம் அமைத்து தொழில் தொடங்க வழி வகுத்து பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்ற காரணமாக இருந்தது தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆட்சியில்தான். இந்த மசோதாவை வரவேற்று பொருளாளர் மு.க.ஸ்டாலினும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த மசோதா பற்றி திருநங்கையர்களின் எண்ண ஓட்டங்களை அறிந்து கொள்ள சிலரை அணுகினோம். உற்சாகத்தின் உச்சியில் இருந்த அவர்கள் தங்கள் உள்ளத்தின் உணர்வுகளை அள்ளி கொட்டினார்கள்.
ஏய், அவனா நீ... என்று இப்பதான் வடிவேல் சினிமாவில் சொல்லி சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறார். ஆனால் நான் நிஜவாழ்க்கையிலேயே சந்தித்த அனுபவம் அது என்று தனது கடந்த கால வேதனை நிறைந்த நினைவுகளோடு தனது கருத்தை பகிர்ந்தார் சகோதான் அமைப்பின் பொதுமேலாளர் ஜெயா. அவர் மேலும் கூறியதாவது:–
படைத்தவன் செய்த தப்பு. நாங்கள் என்ன பாவம் செய்தோம். வீட்டிலும் பிரச்சனை. வெளியிலும் தொல்லை. அந்த வேதனையும், வலியும் வார்த்தைகளால் சொல்ல முடியாதவை.
சென்னையில் பிரபலமான ஆண்கள் கல்லூரியில் படித்தேன். முழுக்க முழுக்க ஆண்கள் உடை அணிந்து என்னை மறைத்து வாழ்ந்து கொண்டிருந்தேன். சக மாணவர்களின் ராக்கிங், கிண்டல் எல்லை மீறி நடந்தது. அவனா நீ... என்று நேருக்கு நேர் கேட்பார்கள். பெண் குரலில் பாட சொல்வார்கள். அப்போது நான் பட்ட கஷ்டத்திலும் எனது படிப்பும், தேர்ச்சி பெற்றதும் சில நல்ல நண்பர்கள் வட்டாரத்தை பெற்றுக்கொடுத்தது.
சமூகத்தில் நமக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாதோ... பாதுகாப்பும் கிடைக்காதோ... என்ற ஏக்கத்தில் இருக்கும் போதுதான் பாராளுமன்றத்தில் மசோதா அதிசயதக்க விதமாக நிறைவேறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த விசயத்தில் மனிதாபிமான நோக்கத்தோடு அத்தனை எம்.பி.க்களும் செயல்பட்டு இருக்கிறார்கள். இனி எங்களுக்கும் சம உரிமை கிடைக்கும். சமூக பாதுகாப்பு கிடைக்கும் என்பதை நினைக்கும் போது சொர்க்கலோகத்தில் பறந்தது போல் இருக்கிறது.
சுதா (நிறுவனர், தோழி அமைப்பு):
பாராளுமன்ற வரலாற்றில் 46 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு தனி நபர் மசோதா அதுவும் எங்கள் நலன் சார்ந்து கொண்டுவரப்பட்டு நிறைவேறி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
ஒருவர் கூட எதிர்ப்பு தெரிவிக்காதது எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது. எங்களுக்கு தனி ஆணையம், தனிசட்டம், நீதிமன்றம் வர உள்ளது. கல்வி, வேலை வாய்ப்பில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் என்ன உரிமை இருக்கிறதோ அந்த உரிமை எங்களுக்கும் கிடைக்கும் என்பது எங்கள் வாழ்க்கையில் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
சுதா (சமூக ஆர்வலர்)
மிகவும் சந்தோசமான நாள். மிகவும் நல்ல விசயம் நடந்துள்ளது. குறிப்பாக சாதி, மதம், அரசியல் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு எல்லோரும் எங்களின் ஜீவாதார உரிமைகளை அணுகி இருப்பதை நினைத்தாலே சந்தோசமாக உள்ளது.
முக்கியமாக தமிழகத்தில் உள்ள திருநங்கையர்களின் செயல்பாடுகள்தான் இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது. அந்த வகையில் இங்குள்ள திருநங்கைகள் கொடுத்து வைத்தவர்கள்.
வடமாநிலங்களில் திருநங்கைகளின் வாயில் இருந்து ஏதாவது அபசகுனமான வார்த்தையை கூறி சபித்துவிட்டால் பலித்துவிடும் என்று பயப்படுவார்கள். ஆனால் இங்கு மட்டும்தான் தவறு செய்தால் தட்டிக்கேட்கும் நிலையும் உள்ளது.
சட்ட அங்கீகாரம் கிடைத்தாலும் குடும்பங்களில் ஏற்றுக்கொள்ளும் மனநிலை வராததுதான் மனதுக்கு வருத்தமாக உள்ளது.

கருத்துகள் இல்லை: