வெள்ளி, 24 ஏப்ரல், 2015

ஆம் ஆத்மி பேரணியில் தற்கொலை செய்துகொண்ட விவசாயி விவகாரம் சிறிய விடயம் அல்ல !

ஆம் ஆத்மி பொதுக் கூட்டத்தில் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், வியாழக்கிழமை நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் உலுக்கியது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டன.
நிலம் கையகச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக, ஆம் ஆத்மி சார்பில், தில்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் புதன்கிழமை கண்டனப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ராஜஸ்தானைச் சேர்ந்த கஜேந்திர சிங் என்ற விவசாயி, மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
விவசாயத்தால் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கஜேந்திர சிங் இந்த முடிவை எடுத்ததாக, அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவம், நாடாளுமன்றத்திலும் கூச்சல், குழப்பத்தை உருவாக்கியது.
பிகார் சம்பவத்துக்கு இரங்கல்: மக்களவை வியாழக்கிழமை தொடங்கியவுடன், பிகார் மாநிலத்தில் ஏற்பட்ட கடும் சூறாவளிக்கு 44 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அண்மையில் மறைந்த ஒடிஸா மாநில முன்னாள் முதல்வர் ஜே.பி.பட்நாயக்கிற்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் கேள்வி நேரத்தைத் தொடங்க முயன்றபோது, அதை ஒத்திவைத்து விட்டு விவசாயி தற்கொலை குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
ஒத்திவைப்புத் தீர்மானம்: இதற்காக, காங்கிரஸ் உறுப்பினர்கள் கே.சி.வேணுகோபால், தீபேந்தர் சிங், ராஜீவ் சாதவ், திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் சௌகதா ராய், இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள் ராஜேஷ், கருணாகரன் ஆகியோர் ஒத்திவைப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர்.
அதற்கு அனுமதி மறுத்த அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், "விவசாயி தற்கொலை விவகாரத்தைப் பின்னர் விவாதிக்கலாம்' என்றார். ஆனால், இந்தக் கருத்தை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உடனடி விவாதம் வேண்டும் என்று கூறி, அவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.
"விவசாயிகள் நலனில் யாருக்கும் அக்கறையில்லை; அதை அரசியலாக்கவே அனைவரும் விரும்புகின்றனர்' என்று கூறிய சுமித்ரா மகாஜன், "தில்லியில் விவசாயி தற்கொலை செய்து கொண்டது மிகவும் உணர்வுப்பூர்வமான விஷயம்; எனவே, இதை அரசியலாக்க வேண்டாம்' என்று கேட்டுக் கொண்டார்.
எதிர்க்கட்சிகள் அமளி: இதைத் தொடர்ந்து பேசிய மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "விவசாயி தற்கொலை செய்து கொண்டதை விட முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் கேள்வி நேரத்தில் என்ன இருக்கிறது? என்று கேட்டார்.
இதுதொடர்பாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறுகையில், "இந்த விவகாரத்தைப் பற்றி விவாதிக்க அரசு தயாராக உள்ளது; மத்திய உள்துறை அமைச்சர் அவையில் இருக்கும்போது இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்கலாம்' என்றார்.
ஆனால், இந்தக் கருத்தை ஏற்க மறுத்த காங்கிரஸ், சமாஜவாதி, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இடதுசாரி உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளைப் புறக்கணித்து விட்டு வெளிநடப்பு செய்தனர்.
இதைத் தொடர்ந்து, மக்களவை நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடிய பிறகும் அதே பிரச்னையை எதிர்க்கட்சிகள் எழுப்பியதைத் தொடர்ந்து, விவசாயி தற்கொலை குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது, ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் பகவந்த் மான், பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துக் கருத்துத் தெரிவித்தார். அவரது கருத்தை அவைக் குறிப்பிலிருந்து நீக்குவதாக மக்களவைத் தலைவர் அறிவித்தார்.
இதற்கு காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். ஆம் ஆத்மி உறுப்பினரின் கருத்தை அவைக் குறிப்பிலிருந்து நீக்கக் கூடாது என்று அவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, உறுப்பினர்களின் கோரிக்கை குறித்து பரிசீலிப்பதாக மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.
சிபிஐ விசாரணைக்குக் கோரிக்கை: இதனிடையே, விவசாயி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் மாநிலங்களவையிலும் எதிரொலித்தது. கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு, இந்த விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என அவையில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதை மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஹமீது அன்சாரி ஏற்றுக்கொண்டார். அப்போது, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் பேசியதாவது:
தில்லி பொதுக்கூட்டத்தில் விவசாயி தற்கொலை செய்து கொண்டதற்கு மத்திய அரசும், தில்லி மாநில அரசுமே காரணம். விவசாயிகள் தற்கொலையை தடுத்து நிறுத்தப் போவதாக கடந்த மக்களவைத் தேர்தலின்போது நரேந்திர மோடி வாக்குறுதி அளித்திருந்தார்.
ஆனால், இன்றுவரை விவசாயிகள் தற்கொலை தடுத்து நிறுத்தப்படவில்லை. இதுதொடர்பாக அவர் மாநிலங்களவையில் விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து பேசிய பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, "தில்லி சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்; பயிர்ச் சேதத்துக்கு மத்திய, மாநில அரசுகள் இழப்பீடு அறிவித்தாலும், அது உரிய விவசாயிகளுக்கு சென்று சேரவில்லை' என்று குற்றம்சாட்டினார்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசை சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவும் குற்றம்சாட்டினார். அப்போது, மாநிலங்களவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவை நடவடிக்கைகளை 15 நிமிடங்களுக்கு ஹமீது அன்சாரி ஒத்திவைத்தார். dinamani.com

கருத்துகள் இல்லை: