புதன், 22 ஏப்ரல், 2015

போதையில் KPN பேருந்து சாரதி விடியோ காட்சிகள்!


பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் ஓட்டுனரை நம்பித்தான் செல்கிறார்கள். ஆனால் அந்த ஓட்டுனரே போதையில் பேருந்து ஓட்டினால் பயணிகளின் மனநிலை எப்படி இருக்கும், அவர்களின் ஆவேசம் எப்படி எப்படி இருக்கும். இப்படி ஒரு வீடியோ  உலா வருகிறது. அந்த வீடியோவில் ஒரு கே.பி.என் பேருந்து நிற்கிறது. அதன் படிக்கட்டில் நிலைகொள்ளாத போதையில் அமர்ந்திருக்கிறார் ஒரு டிரைவர். அவரை சூழ்ந்திருக்கும்  பயணிகளில் ஒருவர் அப்படியே பல்லையெல்லாம் கழட்டிடுவேன் என்கிறார். இன்னொரு பெண் ராத்திரி பன்னிரெண்டரை மணிக்கு வந்து உன்கிட்டயெல்லாம் பேசணும்னு அவசியமே இல்லை என்கிறார். அப்படி ஒரு நிதானமே இல்லாத அளவுக்கு இருந்துகிட்டு எங்களையெல்லாம் ஏத்திட்டு என்ன நம்பிக்கையில வண்டி ஓட்டிகிட்டு இருப்ப நீ... என்று ஆவேசப்படுகிறார் மற்றொரு பெண். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தும் நிதானத்தில் இல்லை அந்த டிரைவர். 


போதை தலைக்கேறி தள்ளாடுகிறார். அவர்களிடம் தண்ணி கேட்கிறார் டிரைவர். அப்போது வாக்குவாதம் முற்றுகிறது. அவையெல்லாவற்றையும் ஒருவர் தனது மொபைலில் பதிவு செய்து கொண்டிருக்கிறார். போலீசில் புகார் கொடுக்கிறேன். நீ இனிமே எப்படி வண்டி ஓட்டுறனு பார்ப்போம். எங்க அத்தனை பேர் உயிரும் உன்கையிலதான இருக்கு என்று ஆளாளுக்கு டிரைவரை திட்டிதீர்க்கிறார்கள். அப்படியே பேருந்தின் உள்ளே செல்கிறார்கள். ஸ்டேரிங்கிற்கு பக்கத்தில் சரக்கு பாட்டில் இருக்கிறது. இது எங்கு நடந்தது? எப்போது எடுக்கப்பட்ட வீடியோ? என்று தெரிவில்லையென்றாலும் பெரிய அதிர்ச்சியை கிளப்பியது அந்த வீடியோ.

அந்த வீடியோ தொடர்பாக கே.பி.என். நிர்வாகத்தினரிடம் பேசினோம். "இது முழுக்க முழுக்க பொய்யாக கிரியேட் செய்யப்பட்ட வீடியோ. அந்த பேருந்து எங்களுடையதுதான். ஆனால் டிரைவர் எங்கள் டிரைவர் இல்லை. எங்களுடைய டிரைவர் எல்லோருக்கும் பேட்ஜ் இருக்கு. அந்த சம்பவம் 20 நாட்களுக்கு முன்பு சென்னை கோயம்பேட்டில் நடந்திருக்கிறது. எங்களுடைய அந்த பேருந்து சென்னையிலிருந்து புவனேஸ்வரம் போகிற வண்டி எங்களுடைய டிரைவர் சாப்பிட போன நேரத்தில் வண்டியில் யாருமில்லை. அப்போது அந்த டிரைவர் வந்து குடித்திருக்கிறார். விசாரித்ததில் அவர் மற்றொரு டிராவல்ஸ் பேருந்தின் டிரைவர் என்று தெரியவந்தது. அந்த டிராவல்ஸ் உரிமையாளரிடம் கூப்பிட்டு சொல்லிவிட்டோம். மற்றபடி அந்த சம்பவத்திற்கும் எங்களுடைய டிராவல்ஸ்க்கும் சம்பந்தம் இல்லை" என்கிறார்கள்.

அன்றைக்கு வண்டி ஓடவில்லை என்கிறார்கள் நிர்வாகத்தினர். ஆனால் வீடியோவைப் பார்க்கும் போது பாதியில் நிறுத்தி பிரச்னை செய்வது போல் இருக்கிறது. கூடவே அந்த வீடியோவில் ஒருவர் வண்டியின் பெயரை சேர்த்து வீடியோ எடுத்துட்டோம். வண்டி நம்பரும் இருக்கு என்று சொல்கிறார்.

பயணிகள் உயிரோடு விளையாடலாமா..?

-எம்.புண்ணியமூர்த்தி  vikatan.com

கருத்துகள் இல்லை: