புதன், 18 மார்ச், 2015

ட்ராபிக் ராமசாமி : ஜெ.,க்கு ஏழு ஆண்டு தண்டனை கேட்டேன் ! தாக்குதலுக்கு காரணம் அதுதான்

என்னை கைது செய்ததன் பின்னணியில், பலமான சதி இருக்கிறது; என்னை தாக்கியது, அ.தி.மு.க.,வினர் தான்,'' என, 'டிராபிக்' ராமசாமி அதிர்ச்சி குற்றச்சாட்டை வைக்கிறார். உரிய அனுமதி பெறாமல், தமிழகம் முழுவதும் வைக்கப்படும் பேனர்களை அகற்ற, நான் தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டுக் கொண்டிருக்கிறேன். நீதிமன்றமும், பேனர்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு போடுகிறது; ஆனாலும், அதை யாரும் கண்டு கொள்வதில்லை. நான், அ.தி.மு.க., சார்பில் வைக்கப்படும் பேனர்களை மட்டும் கிழிப்பதாக, அவர்கள் நினைத்து தான், என்னை எதிரியாக பார்க்கின்றனர். பல இடங்களில் பேனர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று, நான் சொன்னதும், தி.மு.க.,வினர் தாங்களாவே முன்வந்து அப்புறப்படுத்துகின்றனர். ஆனால், ஆளுங்கட்சியினர் அப்படி செய்வதில்லை; என் மீது வன்முறையை ஏவுகின்றனர். வீரமணி என்னும் கட்டிளம் காளையை பாய்ந்து பாய்ந்து தாக்கிய புஜபல பராக்கிரம பயில்வான் டிராபிக் ராமசாமி போன்ற தீவிரவாதிகளையும், சமூக சேவை செய்யும் விரோதிகளையும் விரைந்து போராடி தேடிப்பிடித்து கைது செய்து தமிழகத்தை அமைதி பூங்காவாக்கி எங்கும் பாலாறும் தேனாறும் ஓடச்செய்த எங்கள் அம்மே....நின் பொற்கால மக்களாட்சி வாழ்க வாழ்கவே...


இப்படித்தான், கடந்த 10ம் தேதியும், எழும்பூர் சென்றேன். தாசபிரகாஷ் ஓட்டல் அருகில், தி.மு.க.,வினர் வைத்திருந்த பேனர்களை அகற்ற வேண்டும் என, போலீஸ் மற்றும் மாநகராட்சி கமிஷனரை கேட்டுக் கொண்டேன். நான், பக்கத்தில் நண்பர் ஒருவரை பார்த்துவிட்டு திரும்பினேன்; அதற்குள் தி.மு.க.,வினர் தாங்களே முன்வந்து, பேனரை அகற்றி விட்டனர்; அப்போது, இது தொடர்பாக பேட்டி கொடுத்தேன். வீரமணி என்பவர் தலைமையில் அங்கு வந்த சிலர், என்னை தாக்கினர்; தாறுமாறாக பேசினர்; 'எங்கம்மா பேனரை கிழிக்கிற உன்னை, நாங்க கிழிக்கிறோம்; நீ, எங்க வேணும்மா போய் சொல்லுடா' என, சொல்லி அடித்து உதைத்தனர். வழக்கு சம்பந்தமாக, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அவசரமாக செல்ல வேண்டியிருந்ததால், சென்று விட்டேன். ஆனால் அவர், நான் அடித்ததாகச் சொல்லி, என் மீது புகார் கொடுத்திருக்கிறார். அந்த புகாரை வைத்து, போலீசார் என்னை கைது செய்தனர். அப்போது கூட, என்னை அடித்து உதைத்த போலீசார், நான் தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப் போடும் எண்ணத்துடன் காரியமாற்றினர். அதை அறிந்து நான், அமைதியாக இருந்து விட்டேன்.

கடந்த வாரம், நான் பெங்களூரு சென்று, ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், அவருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூற வேண்டும் என, வழக்கை விசாரித்து வரும் நீதிபதி குமாரசாமியிடம் மனு கொடுத்தேன். அதன் பின்தான், என்னை தாக்கியிருக்கின்றனர். தாக்குதலில் ஈடுபட்டதன் பின்னணியில், அ.தி.மு.க., இருப்பது தெரிகிறது. இதற்கெல்லாம், இந்த 'டிராபிக்' ராமசாமி பயப்பட மாட்டேன்; நியாயத்துக்காக தொடர்ந்து போராடுவேன்; இறுதி மூச்சு வரை, இது நடக்கும்; இன்று காலையில் கூட, சென்னை, தி.நகர், பர்க்கிட் ரோடு, சதாசிவம் ரோட்டில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா மற்றும் ஸ்டாலின் பேனர்களை கிழித்தெறிந்தேன். இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் தினமலர்.com

கருத்துகள் இல்லை: