வெள்ளி, 19 டிசம்பர், 2014

படிக்காத தற்குறிகள் நேர்மையற்றவர்களாக மாறியது ஏன் ?

அம்பேத்கர்சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்ததும் என்ன நடந்தது என நாடே பார்த்தது. ஒரு கிரிமினலைத் தண்டித்தால், தண்டிக்கப்பட்ட கிரிமினலுக்காக தமிழ்ச் ‘சமூகமே’ அழுதது ஏன்?
இந்திய சமூகத்தில் சிவில் உரிமைகள்
“நாம் அரசியலில் ஜனநாயகமும், சமூகத்தில் ஜனநாயக மறுப்பும் கொண்டிருக்கிறோம்”
இந்தியாவில் சிவில் உரிமை பற்றிய கோரிக்கை அவசர நிலைக்குப் பிறகு எழுந்தது; அரசு மனித உரிமைகளை மீறும் போது அதைக் காப்பதற்காகத் தோன்றியது.
அம்பேத்கர் “நாம் அரசியலில் ஜனநாயகமும், சமூகத்தில் ஜனநாயக மறுப்பும் கொண்டிருக்கிறோம்” என்று நமது இந்திய சமூதாயத்தின் முரண்பட்ட நிலையைச் சொன்னார். நமது ஜனநாயகம் வெள்ளைக்காரன் கொடுத்த ஜனநாயகம்; சுதந்திரத்திற்காக, ஜனநாயகத்திற்காக நமது மக்கள் போராடியதால் நம்முடைய ஜனநாயகம் வரவில்லை; ஆங்கிலேய ஆட்சியாளர்கள் காங்கிரசுகாரர்கள் முதல் ஜஸ்டிஸ் கட்சியினர் வரை பதவிகளை உருவாக்கிக் கொடுத்து உருவானது.
நமது சமூகம் சாதி ஆதிக்கமும், நிலவுடமை ஆதிக்கமும் கொண்டது. சாதி அமைப்பு ஜனநாயகத்திற்கு விரோதமானது. நமது நாட்டில் தீண்டாமைச் சட்டங்கள் இருந்தாலும், அரசு தீண்டாமையைப் பாதுகாக்கும் அரசாக இருக்கிறது. அதனால்தான் நாம் ஒவ்வொன்றுக்கும் போராட வேண்டியதிருக்கிறது.
ஒரே நேரத்தில் அரசுக்கு எதிராகவும், சமூக அமைப்புக்கு எதிராகவும் போராட வேண்டியதிருக்கிறது.

இன்று அதிகார வர்க்கம், நீதித் துறை உள்ளிட்ட அரசமைப்பு மதிப்பிழந்து கடைத்தேற்ற முடியாத அளவுக்கு நிலைமை உள்ளது. இன்றைய அரசமைப்பு அதற்கு ஆள்வதற்கு தகுதி இருப்பதால் நிலவவில்லை; மக்கள் அதை நொறுக்காததால் தொடர்கிறது. எல்லாத் துறைகளும் அழுகி நாறிவிட்டன; காலாவதி ஆகிவிட்டன.
நீதித்துறை லஞ்ச ஊழல் நிறைந்து அழுகி நாறிவிட்டது. பிரசாந் பூசணின் தந்தை சாந்திபூஷண் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வாக்குமூலத்தில் 8 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஊழல்வாதிகள் என்று ஆதாரபூர்வமாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்திக்கத் தயாராக இருந்தாலும் உச்ச நீதிமன்றம் வழக்குப்போட மறுக்கிறது.
இந்த அரசமைப்பு முடை நாற்றம் அடிப்பதன் அடையாளம் தான் ஜெயா மீது அது காட்டும் விசுவாசம்.
ஜெயா சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக வாதாடிய ஆச்சாரியா நூல் எழுதியிருக்கிறார். அதில் தன்னை மிரட்டினார்கள் எனப் பச்சையாக எழுதியிருக்கிறார். மிரட்டல், பொய் வழக்கு என அடுத்தடுத்து மிரட்டியதாகச் சொல்கிறார். ஆனால் எவரும் அதைப்பற்றிக் கேள்வி எழுப்பவில்லை.
சுப்ரதா ராய்
சகாரா முதலாளி சுப்ரதாராய் இருபத்தையாயிரம் கோடி திருடிவிட்டு திகார் ஜெயிலில் இருக்கிறார்.
வருமானவரி வழக்கில் ஜெயாவிற்காக நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் நடைபெறுகிறது. இவற்றைத் தட்டிக் கேட்காமல் இருப்பதால் நாம் அனுபவிக்கும் தண்டனை ஏராளம். ஜெயா என்ற கிரிமினல் படத்தை அரசு அலுவலகங்கள் அனைத்திலும் மாட்டி வைத்திருக்கிறார்கள். அதை எடுக்க முடியவில்லை. அரசுக்கு நோட்டீஸ் அனுப்புகிறது நீதிமன்றம். ஏன் உத்திரவிடவில்லை?
ஜெயா அடைக்கப்பட்ட பரப்பன அக்கிரகாரா சிறையில் அவருக்கு குளுகுளு வசதி செய்து கொடுக்கப்பட்டது எப்படி?
சகாரா முதலாளி சுப்ரதாராய் இருபத்தையாயிரம் கோடி திருடிவிட்டு திகார் ஜெயிலில் இருக்கிறார். மக்களை ஏமாற்றிக் கொள்ளையடித்த பணத்தைத் திருப்பிக்கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. “சொத்துக்களை விற்றுக்கட்ட வேண்டும்” என்றார் ராய். அதற்காக திகார் சிறைக்கு உள்ளேயே தனி அறை கட்டி இணைய வசதியுடன் அலுவலகம் வைக்க அனுமதி அளித்துள்ளது நீதிமன்றம்.
கர்நாடகத்தில் ரெட்டி பிரதர்ஸ் ஜெயிலில் அப்படித்தான் இருந்தார்கள். இன்னும் கொஞ்ச நாளில் ஜெயிலில் நட்சத்திர விடுதிபோல் சொகுசு அறைகள் வந்தாலும் வரும். அதற்கான வாய்ப்பு இருக்கிறது.
டான்சி நிலம் முறைகேடு வழக்கில் உயர் நீதிமன்றம் என்ன சொன்னது? அரசு நன்னடத்தை விதி மீறல் தான்; குற்றமில்லை என்றது.
சி.பி.ஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்கா 2 ஜி குற்றவாளிகளைச் சந்தித்துள்ளார் என்று அவரை பொறுப்பை விட்டு விலகச் சொல்லியிருக்கிறது உச்ச நீதிமன்றம். ‘மக்களுக்கு கடவுள் மீது நம்பிக்கை இருக்கிறது. ஆகையால் விலகிக் கொள்’ என்று தேவநாதனை விலகிக் கொள்ளச் சொன்னது போல, சங்கராச்சாரியை விலகிக்கொள்ளச் சொன்னது போல சின்காவையும் சொல்லியிருக்கிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயாவுக்கு உடந்தையாக நீதித்துறை
உச்ச நீதிமன்றம்17 ஆண்டுகளாக நடந்த சொத்துக்குவிப்பு வழக்கில் 170 முறை வாய்தா வாங்கியிருக்கிறது ஜெயலலிதா கும்பல். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தான் ஜெயாவைக் காப்பாற்றி இருக்கிறார்கள்.
  • கர்நாடக உயர்நீதி மன்றம் ஜெயா கும்பலை கடுமையாக எச்சரித்து பிணை வழங்க மறுத்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் 2 மாதத்திற்குள் மேல்முறையீடு செய்துவிடுவதாக நாரிமன் சொல்ல 3 மாதத்திற்குள் செய்யுங்கள் என்று சலுகை காட்டி ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்.
  • கர்நாடக உயர் நீதிமன்றம் ஊழல், மனித உரிமை மீறல், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை வழிகாட்டியாகக் கொண்டு தான் பிணை மறுத்தது. ஆனால் இதை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் சர்வசாதாரணமாக பிணை வழங்குகிறார் தலைமை நீதிபதி தத்து. அப்பீல் பண்ணச் சொல்லி வழக்கை முடித்துக் கொள்ள ஏற்பாடு செய்து தருகிறார்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.
  • ஜெயாவுக்கு ஆதரவாக ஜாமீன் கோரி வழக்கு நடத்திய நாரிமன் தி.மு.க அரசு சார்பாக ஜெயாவுக்கு எதிராக வழக்கு நடத்தியவர். இது வழக்கறிஞர்களின் வழிகாட்டு நெறிமுறை மரபுகளுக்கு முரணானது.
  • டிராபிக் ராமசாமி, நாரிமன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனுத் தாக்கல் செய்தார். காரணம் நாரிமன் மகன் ரோகிண்டன் நாரிமன் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கிறார். நெருக்கமான உறவினர்கள் நீதிபதியாக இருக்கும் இடத்தில் வழக்கு நடத்தக் கூடாது என்று மரபு உள்ளது. பாலி நாரிமன் அங்கே வழக்கு நடத்தியது தவறு என நீதிபதி சந்துரு சொல்கிறார்.
தமிழகத்திற்கு ஏற்பட்டிருக்கும் இழிநிலை
ஜெயா கைது, காஞ்நிபுரம் காட்சிகள் (2)
தமிழன் எனச் சொல்லிக் கொள்ளவே வெட்கமாக இருக்கிறது.
ஜெயா தண்டிக்கப்பட்டது குறித்து எல்லா ஊடகங்களும், ‘ஏதோ தப்பு நடந்துவிட்டது. கூடா நட்பினால் வந்த கேடு’ என்பது போல சித்தரித்து இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்று ஆலோசனைகளும் வழங்கினார்கள். காரணம் எல்லா ஊடகங்களும் முதலாளிகள் வசம் இருக்கின்றன.
கொள்ளை அடித்து தண்டிக்கப்பட்ட ஜெயாவிற்காகப் பால்குடம், மொட்டை அடித்தல், யாகம், ஹோமம் என பரிகாரம் செய்கிறார்கள். என்ன இது மழுங்கத்தனம். தமிழன் எனச் சொல்லிக் கொள்ளவே வெட்கமாக இருக்கிறது. தமிழகத்திற்கு இந்த இழிநிலை ஏன் ஏற்பட்டது? அதை குஜராத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
குஜராத் காந்தி பிறந்த ஊர், வணிகம் செய்பவர்கள் அதிகம். நல்ல உணவு உண்பது, ஷேர் மார்க்கெட் இது தான் அவர்களது அன்றாட வாழ்க்கை நடைமுறை. 2002-ல் நடந்த கலவரத்தில் முசுலீம்களைக் கொலை செய்ததும், கொள்ளையில் ஈடுபட்டதும் பக்கத்து வீட்டு இந்துக்கள் தான். நெருக்கமாக பழகியவர்களே அவர்களை அழித்தார்கள் என்பதை முசுலீம்களே சொல்லியிருக்கிறார்கள். காரணம் தொடர்ச்சியாகப் பல ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மதவெறிப் போதைக்கு மக்களைத் தயார்ப் படுத்தி இருக்கிறது. அதனால் தான் மோடி மீண்டும் மீண்டும் வெற்றி பெற்றார். குஜராத் படுகொலை பற்றி பல ஆதாரங்கள் வெளி வந்தாலும் மோடி மீண்டும் வென்றார்.
அதேதான் தமிழகமும்.  கடந்த காலத்தில் தி.மு.க எம்.ஜி.ஆரை அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்டது. எம்.ஜி.ஆர் பாமரர்களை வாக்கு வங்கியாக மாற்றினார். 80-களின் இறுதியில் தான் ஜெயா அரசியலுக்கு வந்தார். பல்வேறு நாடகங்களை நடத்தினார். ராஜீவ் காந்தி கொலைக்குப் பின் அவரது இறப்பை வைத்து அரசியல் செய்து ஆட்சிக்கு வந்தார்.
மறுகாலனியாக்கத்தில் ஊழல்படுத்தப்படும் மக்கள்
எல்லாக் கட்சிகளும் உருமாற்றம் அடைந்துவிட்டன. தனியார்மயம் தாராளமயக் கொள்கைக்கான ஆதரவு எந்தக் கட்சியில் இல்லை? கட்சிகளுக்கு இடையில் எதை வைத்து வேறுபடுத்திக் காட்டுவது. சாதி, மற்றும் பணம் கொடுப்பதன் மூலம் தான் அதைக் காட்ட முடியும்.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பு.ஜ.தொ.மு தான் பல்வேறு உரிமைகளை தொழிலாளர்களுக்குப் பெற்றுத் தந்துள்ளது. ஆனால் 1 சீட் தான் கிடைத்தது.
ஓட்டுக்குப் பணம் கொடுக்காமல் மக்களைக் கவர முடியாது. மக்களை எந்த வகையிலாவது ஊழல்படுத்தினால் மட்டும் தான் இந்த ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும்.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சங்கம் தேசிய பஞ்சாலை கழக ஆலை தேர்தலில் மீண்டும் போட்டியிட்டபோது ஒரு இடம்தான் கிடைத்துள்ளது. பு.ஜ.தொ.மு தான் பல்வேறு உரிமைகளை தொழிலாளர்களுக்குப் பெற்றுத் தந்துள்ளது. ஆனால் 1 சீட் தான் கிடைத்தது. காரணம் ஓட்டுக் கட்சி தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் வீட்டுக்குப் போய் அரிசி மூடை, 500 ரூபாய் பணம் தந்துள்ளார்கள்.
பழைய காலனியாதிக்கத்தின் போது மக்கள் முட்டாளாக, தற்குறியாக இருந்தார்கள். ஆனால் மறுகாலனியாக்கச் சூழலில் மக்களை ஊழல்படுத்தி நேர்மையற்றவர்களாக மாற்றிவிட்டார்கள்.
பழைய காலனியாதிக்கத்தில் கொலை செய்வது, தூக்கிலிடுவது, ஆயுதங்கள் மூலம் ஆக்கிரமிப்பு செய்வது என்றால், மறு காலனியாக்கத்தில் நமது ஒப்புதலோடு பகல் கொள்ளை நடக்கிறது. இதை பல சினிமாக்களிலும் காணலாம். மங்காத்தா, சூதுகவ்வும், சதுரங்க வேட்டை போன்ற படங்கள் சமூகத்தின் மனோபாவத்தை எடுத்துக் காட்டுகின்றன.
கத்தி படத்தில் விஜய் கோக்குக்கு எதிராக நடித்தது பற்றி ட்விட்டரில், “கோக் விளம்பரப் படத்திலும் நடிக்கிறீர்கள், எதிர்க்கிற படத்திலும் நடிக்கிறீர்களே?” என்று கேள்வி கேட்டபோது “இதை அரசியல் கட்சிக்காரங்களிடம் கேட்பீர்களா?” என்று கேட்கிறார் விஜய்.
கூட்டுத்துவமும் தனிநபர் வாதமும்
தோழர் மருதையன்
தோழர் மருதையன் உரை
இந்நிலைக்கு மிக முக்கிய காரணம் நுகர் பொருள் மோகம். இது கூட்டுத்துவத்திற்கு எதிரான தனிநபர் வாதம். அனைவருக்கும் கல்வி, மருத்துவம், போக்குவரத்து என்று கேட்பதற்குப் பதில் எனக்கு என்ன என்று கேட்கத் தூண்டுகிறது. நுகர்வு மோகத்தைத் தூண்டக் காரணம் முதலாளிகளின் சந்தை மற்றும் லாபம் தான். “எல்லோரும் கூட்டாகச் சேர்ந்து அடைய முடியாது. தனி நபர் என்றால் அடைந்து விடமுடியும்” என்கிறார்கள்.
விவசாயம் அழிந்து பெரும் கூட்டம் உதிரிகளாக மாற்றப்பட்டுள்ளார்கள். நகர்மயமாக்கத்தால் வேரற்றவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். இவர்களை எளிதில் விலைக்கு வாங்க முடியும்.
குற்றங்கள் பெருகி வருவதைப் பார்க்கிறோம். இக்குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மாணவர்கள், முன்னாள் தகவல்துறை ஊழியர்கள் எனப் பலதரப்பினரும் இருக்கிறார்கள். எல்லைக் கோடுகள் அழிந்து வருகின்றன.
வியட்நாமை அமெரிக்கா ஆக்கிரமித்து இருக்கும் போது அமெரிக்க சிப்பாய்களுக்கு ஊழியம் செய்யும் ஒரு கூட்டம் உருவாயிற்று. அமெரிக்க ஆக்கிரமிப்பை உலகமே எதிர்த்துப் போராடிய போது அமெரிக்க சிப்பாய்களை அண்டிப் பிழைத்தவர்கள், “அமெரிக்காவே போகாதே” என்றார்கள். அவர்களை விலைமாதர்களின் பிள்ளைகள் என்றார்கள் அந்த நாட்டுப் போராளி மக்கள்.
நாட்டின் எதிர்காலம் மட்டுமல்ல சொந்த எதிர் காலத்தைப் பற்றிக் கூட கலலைப்படாத கூட்டத்தை உருவாக்கி வருகிறார்கள். டாடா கஞ்சா கடத்தி சீனாவை போதைக்கு அடிமையாக்கியதைப் போல டாஸ்மாக் மூலம் தமிழக மக்களை அடிமையாக்கி வருகிறார்கள். கலாச்சாரச் சீரழிவின் மூலம் மக்களை விலங்குகளாக ஆக்குவது தான் இவர்களது நோக்கம். ஜெயா தண்டிக்கப்பட்ட போது தனக்குக் கிடைக்க வேண்டிய இலவசப் பொருட்கள் கிடைக்குமா? கிடைக்காதா? என்று கேட்டனர் பலர்.
மனித உரிமைகளை மட்டுமல்ல மனிதத்தை நாம் மீட்க வேண்டியதிருக்கிறது. அதற்காக வினையாற்ற வேண்டும். ஜெயா தனது விடுதலைக்கு அப்பீல் செய்கிறார். நான்  இந்த உரையின் மூலமாக மனிதத்தை மீட்க உங்களிடம் அப்பீல் செய்கிறேன்.” vinavu.com

கருத்துகள் இல்லை: