புதன், 16 அக்டோபர், 2013

முதல்வருக்கு கீழ் பணியாற்றும் அதிகாரி சம்பந்தம் முதல்வருக்கு ஆதரவாக சாட்சியம் சொல்லும் அதிசயம்

சென்னை : 'முதல்வர் ஜெயலலிதாவின் கீழ் பணியாற்றும் அதிகாரி சம்பந்தம் தான், சிறப்பு கோர்ட்டில் குற்றம் சாட்டப்பட்ட முதல்வருக்கு ஆதரவாக சாட்சியம் அளித்த அதிசயம் நடந்துள்ளது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை: பெங்களூரு கோர்ட்டில் நடக்கும், சொத்துக் குவிப்பு வழக்கை தொடுத்து நடத்துவது தமிழக அரசின் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புத் துறை.அத்துறையை சார்ந்த துணை கண்காணிப்பாளரான சம்பந்தம் புலன் விசாரணை பொறுப்பு அதிகாரியென்றும், அவ்வழக்கில் மேலும் கூடுதலான விசாரணையைத் தான் மேற்கொள்ள வேண்டும் என்ற மனுவை பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்தார். "அவரது வேண்டுகோளை ஏற்கக் கூடாது' என, தி.மு.க., சார்பில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்து, விசாரணைக்கு பின் சம்பந்தத்தின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டு அவரும் கண்டனத்திற்குள்ளானார்.


இந்நிலையில் அதே சம்பந்தம், குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்காக சாட்சியம் அளித்து, அவர்களுக்கு சாதகமான ஆவணங்களையும், தாக்கல் செய்துள்ளார். எதிர்தரப்பினருக்குச் சாட்சியாக, ஒரு போலீஸ் அதிகாரி, அவர் சார்ந்துள்ள துறையினாலேயே தொடரப்பட்டும், நடத்தப்பட்டும் வரும், ஒரு வழக்கில் யார் உத்தரவின் பேரில் சாட்சி சொல்லியுள்ளார்? அவர் சார்ந்துள்ள விழிப்புணர்வு மற்றும் ஊழல் தடுப்பு காவல் துறை அவரை, எதிர்தரப்பிற்குச் சாட்சி சொல்ல உத்தரவிட்டதா?

காவல் துறைத் தலைவர் முன் அனுமதி கொடுத்துள்ளாரா? அல்லது உள்துறை செயலரோ அல்லது தலைமைச் செயலரோ உத்தரவிட்டுள்ளார்களா..? இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் முதல்வர் ஜெயலலிதா. அவரது கீழ் பணியாற்றும் அதிகாரி சம்பந்தம் தான், சிறப்பு கோர்ட்டில் குற்றம் சாட்டப்பட்ட முதல்வருக்கு ஆதரவாக சாட்சியம் அளித்த அதிசயம் நடந்துள்ளது. இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: