செவ்வாய், 15 அக்டோபர், 2013

பெண் அடிமைத்தனம் ஊறியகாலத்தில் வந்த தமிழ் சினிமாவின் முதல் பேசும் பட நாயகி, இயக்குனர், தயாரிப்பாளர் , நாவலாசிரியர் டி.பி.ராஜலட்சுமி

இன்றைக்கு இங்கே எல்லாமே அவசரம்தான்.
அரசு சார்பில் அவசரமாக ஒரு விழா நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முதல் பேசும் பட நாயகியும், இயக்குனரும், தயாரிப்பாளரும், நாவலாசிரியருமான டி.பி.ராஜலட்சுமியின் நூற்றாண்டு விழாவும் அவற்றில் ஒன்று.
அவரை ஒரு சினிமாக்காரராக பார்க்கப்பட்ட விழா அது. ஆனால் அதிகம் சினிமாக்காரர்கள் வராத விழாவும் அதுவே.
உண்மையில் அவரைப்பற்றிய தேடலை துவங்கியபோதுதான் சினிமாக்காரர் என்ற பார்வையுடன் அவரை கடந்துவிட முடியாது, கடந்துவிடவும் கூடாது என்பது தெரியவந்தது.
பால்யவிவாகமும், கொஞ்சமும் பெண் சுதந்திரம் இல்லாத காலகட்டத்தில் இவரது வருகையும், வளர்ச்சியும் முக்கியமாகப்படுகிறது.
வறுமையில் வாழ்வைத் துவங்கி வளத்தின் உச்சத்தில் வலம் வந்து மீண்டும் வறுமையில் வாடி மடிந்து போன சோககதைக்கு சொந்தக்காரர் இவர்.
1911ம் வருடம் தஞ்சாவூர் சாலியமங்கலம் என்ற ஊரில் பிறந்த ராஜலட்சுமியை அவரது எட்டு வயதிலேயே அந்தக்கால பால்யவிவாக முறைப்படி திருமணம் செய்து கொடுத்து விட்டனர். கொஞ்ச நாளில் கணவர் இறந்துவிட, விவரம் தெரிவதற்குள்ளாகவே விதவை பட்டம்.
மகளின் நிலைகண்டு மனம் வருந்தியே தந்தை இறந்து போனார், வருமானம் இல்லாமல் வறுமையோடு வாழமுடியாமல் தாய் மீனாட்சி தன் மகளுடன் திருச்சிக்கு நடந்தே போயிருக்கிறார்.
அப்போது திருச்சிதான் நாடகக்காரர்களின் முக்கிய கேந்திரம். பிரபலமாக இருந்த சாமண்ணா நாடககுழுவை அணுகி என் பொண்ணு நன்றாக பாடுவாள், நான் நன்றாக சமைப்பேன், உழைச்சு பிழைக்க வழிகாட்டுங்க என்று கண்ணீர்மல்க கதறிய தாய் மீனாட்சியின் கண்ணீருக்காகவும், ராஜலட்சுமியின் குரல் வளத்திற்காகவும் நாடக சபாவில் வேலைபோட்டு கொடுக்கப்பட்டது. மகளுக்கு மாதம் 30 ரூபாய் சம்பளம், அம்மாவிற்க 20 ரூபாய் சம்பளம்.
அப்போது பெண் வேடத்தையும் ஆண் நடிகர்களே போட்ட காலம். பெண் வேடமிட்டு நடிகர்களுக்காக பேசுவது, பின்னணியில் இருந்து பாட்டுப்பாடுவது என்றுதான் தனது கலைவாழ்க்கையை துவங்கினார்.
பிறகு சின்ன சின்ன வேஷங்களில் தோன்றியவர் தனது திறமையால் வெகு சீக்கிரமாகவே நாடக நாயகியானார். அந்தக்கால பிரபலங்கள் கிட்டப்பா, பாகவதர், டி.வி.சுந்தரம் போன்றவர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தபிறகு புகழும், பொருளும் தேடிவந்தது.
முதன் முதலாக தமிழில் வெளியான காளிதாஸ் என்ற பேசும்படத்தில் கதாநாயகியாக நடித்தார். படம் நன்றாக ஓடியதை அடுத்து தொடர்ந்து ஓய்வு எடுக்கவே முடியாத அளவிற்கு வரிசையாக படங்கள் வந்தன.
தனது புகழையும், குரலையும் தேசத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்று நாடக மேடைகளில் தேசபக்தி பாடல்களையும் பாடஆரம்பித்தார். இதன்காரணமாக கைதாகி சிறைக்கு சென்றார். சிறை வாழ்க்கையால் வாடிப்போகாமல் விடுதலையான போதும் மீண்டும் மீண்டும் தேசபக்தி பாடல்களை பாடி மீண்டும், மீண்டும் சிறைக்கு போனவர்.
ராஜம் டாக்கீஸ் என்ற பெயரில் சினிமா நிறுவனம் துவங்கி சொந்தமாக மிஸ் கமலா என்று படம் எடுத்தார். அந்த படத்தில் நடித்ததுடன் கதை, தயாரிப்பு, எடிட்டிங் மற்றும் இயக்குனர் வேலையும் அவரே பார்த்துக்கொண்டார்.
இப்படி நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என்று வருடங்கள் உருண்டோடின, படங்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது, செல்வாக்கும் கூடியது. உலகம் இவரை சினிமா ராணி என்று கொண்டாடியது. ரங்கூன் போன்ற இடங்களுக்கு எல்லாம் போய் நடித்துக் கொடுத்துவிட்டு வந்தார். நடுவில் திருமணம், குழந்தைபிறப்பு என்று கொஞ்சகாலம் ஓய்வு எடுத்தார். அந்த ஓய்வையும் வீணாக்காமல் சில நாவல்கள் எழுதினார்.
எந்த சினிமா இவரை உச்சத்திற்கு கொண்டு போனதோ அதே சினிமா இவரை அதலபாதாளத்திற்கும் கொண்டு சென்றது. தயாரிப்பு நிர்வாகம் தந்த தோல்வி குடியிருந்த வீட்டைக்கூட விற்கவேண்டிய நிலைக்கு தள்ளியது.
கலைமாமணி விருது கொடுத்து கவுரவித்த எம்ஜிஆர் ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்டபோது, சுயமரியாதை தடுக்க எதையும் கேட்காமல் திரும்பியவர்.
தமிழ் சினிமாவில் பல "முதல்' பட்டத்திற்கு சொந்தக்காரரான இவர் தனது 55 வயதில் நோயில் விழுந்து வருத்தத்துடனும், மீளாத சேசாகத்துடனும் இறந்துபோனார்.
கடந்த சில நாட்களுக்கு முன் இவரது நூற்றாண்டை கொண்டாட அரசு அவசரமாக முடிவு செய்து தேடியபோது கிடைத்தது ஒரு சில பழைய படங்களும், சினிமாவின் நிழலே படியாமல் வளர்க்கப்பட்ட அவரது மகள் கமலாவின் மூலமாக கிடைத்த சில நினைவுகளும்தான்.
ராஜலட்சுமியின் பழைய படங்களை பற்றி பெருமை பேசலாமே தவிர இன்றைய காலகட்டத்தில் உட்கார்ந்து பார்க்க முடியாது என்பதுதான் யதார்த்தம். ஆகவே அந்த படங்களை யாரும் ரீரிலீஸ் செய்யவேண்டியது இல்லை, ஆனால் அவரது எண்ணங்களை எதிரொலிக்கும் நாவல்களை படிக்க விரும்புவர்களுக்கு அதை பதிப்பத்தும், புதுப்பித்தும் தரும் முயற்சியில் யாரேனும் இறங்கினால் நூற்றாண்டு விழா கண்டதற்கு அர்த்தம் இருக்கும்.
- எல்.முருகராஜ்  tprajalakshmi.blogspot.com/

கருத்துகள் இல்லை: