சென்னை, ஆக.13: சட்டப் பேரவையில் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி ஆகியோரை விமர்சனம் செய்வது கண்டனத்துக்குரியது என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வீ.தங்கபாலு தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்திபவனில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: சட்டப் பேரவையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரைச் சம்பந்தமில்லாமல் விமர்சனம் செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியதாகும். சட்டப் பேரவை மரபுகளுக்கு எதிராக சபையில் இல்லாதவர்களைப் பற்றி விமர்சனங்கள் எழுப்புவது நல்ல பண்புகள் ஆகாது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த காங்கிரஸ் கட்சியின் பேரவை உறுப்பினர்களுக்கு எனது பாராட்டுகள். மோதல் போக்கு: மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் எவ்விதப் பாகுபாடும் இல்லாமல் தேவையான நிதியை வழங்கி வருகிறது. இதைப்போல தமிழ்நாட்டுக்கும் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. மத்திய திட்டக்குழுத் தலைவரை தில்லியில் முதல்வர் ஜெயலலிதா சந்தித்தபோது, கேட்கப்பட்டதைவிட தமிழக அரசுக்கு கூடுதலாக 3 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா அளித்த பேட்டியில் நிதி ஒதுக்கீடு பற்றி திருப்தியும், மகிழ்ச்சியும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் மத்திய அரசு தேவையான நிதி உதவிகளை செய்யவில்லை என்று அவர் கூறுவது சரியில்லை. எத்தனை திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்ற பட்டியலை ஜெயலலிதாவால் வெளியிட முடியுமா? மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்பட்டால்தான் வளர்ச்சித் திட்டங்களுக்கு உகந்ததாக இருக்கும். தமிழகத்தின் தேவைகளை முறைப்படி எடுத்து வைத்தால் மத்திய அரசு நிச்சயம் நிறைவேற்றும். இதற்கு தமிழக காங்கிரஸ் கட்சியும் உறுதுணையாக இருக்கும். எனவே மத்திய அரசுடன் மோதல் போக்கு வேண்டாம். மூவருக்குத் தூக்குத்தண்டனை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று பேரின் கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டிருப்பதை வரவேற்கிறோம். தமிழக சட்டப் பேரவைத் தீர்மானத்துக்கு எதிரான இலங்கை பாதுகாப்புத் துறை செயலாளர் கோத்தபய ராஜபட்சவின் கருத்து கண்டனத்துக்குரியது. இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசை தமிழக காங்கிரஸ் கட்சி வலியுறுத்தும். இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு ஒரே தீர்வு தமிழீழம்தான் என்பது என் தனிப்பட்ட கருத்து. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோதே இதை நான் வலியுறுத்தியிருக்கிறேன். இந்தியா எல்லா காலத்திலும் தமிழர்கள் பக்கம்தான் இருந்திருக்கிறது. இலங்கைக்கு உதவ சீனா முன்வந்துள்ளதால் முதலில் இந்திய தமிழர்களையும், அடுத்து இலங்கைத் தமிழர்களையும் காக்க வேண்டிய நிலையில் மத்திய அரசு இருக்கிறது என்று அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக