லண்டன், ஆக.7: பொலிசார் சுட்டதில் ஒருவர் இறந்ததால் லண்டனில் பெரும் வன்முறை ஏற்பட்டது, பஸ்கள், கடைகள் தீவைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டன.
இங்கிலாந்து தலைநகர் லண்டனின் வடக்குப் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. லண்டன் தொட்டென்ஹாம் பகுதியைச் சேர்ந்தவர் மார்க் துக்கன் (29). நான்கு குழந்தைகளின் தந்தையான இவர் ஆப்ரிக்க-கரிபீயன் சமூகத்தைச் சேர்ந்தவர். இச்சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மார்க் துக்கன் கள்ளத் துப்பாக்கியை விற்பனை செய்து வந்ததாக அவர் மீது புகார் உள்ளது. கடந்த வியாழக்கிழமை இரவு மினி பஸ்ஸில் சென்றபோது அவரை பொலிசார் சுற்றி வளைத்தனர். பொலிசாருக்கு சவால் விட்டு அவர்களிடமிந்து தப்பிக்க அவர் முயன்றுள்ளார். அப்போது அவரை நோக்கி பொலிசார் சரமாரியாக சுட்டுள்ளனர். மார்க்துக்கனும் பொலிசாரை நோக்கி சுட்டுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் மார்க்துக்கன் இறந்தார்.
இதையறிந்த மார்க் துக்கனின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் தொட்டென்ஹாம் காவல் நிலையம் முன் கூடினர். முதலில் சிறிய அளவிலேயே கூட்டமிருந்தது. நீதிகேட்டு அவர்கள் குரல் எழுப்பினர். அமைதியாக இந்தப் போராட்டம் நடந்தது. சனிக்கிழமை போராட்டத்தில் மேலும் பலர் கலந்து கொண்டனர். இதனால் போராட்டம் தீவிரமடைந்தது. ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை பொலிசார் சுற்றி வளைத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள், பொலிசாரை தாக்கத்தொடங்கினர். அந்தப் பகுதியில் இருந்த கடைகளை அடித்து நொறுக்கி தீவைத்தனர். அதுபோல் அந்தப் பகுதிக்குவந்த வாகனங்களுக்கும் தீவைத்து எரித்தனர். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சிலர் கடைகளில் புகுந்து கொள்ளையடித்தனர்.
வன்முறையில் ஈடுபட்ட கும்பலை பொலிசார் விரட்டியடித்தனர். விடிய-விடிய இந்த வன்முறை நீடித்தது. ஞாயிற்றுக்கிழமை காலைதான் அங்கு வன்முறை கட்டுப்படுத்தப்பட்டது.
8 பொலிசார் காயம்: இச்சம்பவத்தில் 8 பொலிசார் காயம் அடைந்துள்ளதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் பொதுமக்களில் 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அப்பகுதியில் அமைதி திரும்ப கூடுதல் பொலிசார் ரோந்து சுற்றி வருகிறார்கள். தற்போது அங்கு அமைதி நிலவி வருவதாக மெட்ரோபாலிட்டன் போலீஸ் கமாண்டர் ஸ்டீபன் வாட்சன் தெரிவித்தார்.
லண்டனில் அண்மையில் இதுபோல் பெரிய அளவில் வன்முறைச்சம்பவங்கள் நிகழவில்லை என்றும் இப்போதுதான் இவ்வளவு பெரிய அளவில் வன்முறை நடந்துள்ளது என்றும் பொலிசார் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக