செவ்வாய், 19 ஏப்ரல், 2011

Obama 2nd innings ஒபாமா ஒரு தரம்.. ரெண்டு தரம்..

- மருதன்
barack-obama2012ல் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாகப் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார் பராக் ஒபாமா. வேட்பு மனுதாக்கல் செய்த முதல் நபரும் இவரே. இணையத்தில் முறைப்படி பிரசாரத்தையும் தொடங்கிவிட்டார்.

‘ஆடம்பரமான தொலைக்காட்சி விளம்பரங்களையோ பிரம்மாண்ட மான நிகழ்ச்சிகளையோ அல்ல; உங்களைத்தான் நாங்கள் நம்புகிறோம்’ என்கிற அதே ஒபாமாதான் ‘இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை தேர்தல் பிரசாரத்துக்காக 4,500 கோடி திரட்டப் போகிறோம் என்றும் சொல்கிறார்.

முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ்ஷின் மதிப்பும் அமெரிக்காவின் சந்தை மதிப்பும் உலக அரங்கில் படு பாதாளத்தில் விழுந்து கிடந்த சமயத்தில், ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக பராக் ஒபாமா 2008 தேர்தல் களத்தில் முன்னிறுத்தப்பட்டார். புஷ்ஷுக்குக் கிடைத்ததைக் காட்டிலும் இரு மடங்கு அதிக தேர்தல் நிதி (34,650 லட்சம் ரூபாய்) ஒபாமாவுக்குக் கிடைத்தது. இராக் யுத்தத்தை முடித்து வைப்பேன்; பங்குச்சந்தை வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்துவேன்; வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவேன்; உலக அரங்கில் அமெரிக்காவுக்குக் கம்பீரமான ஓரிடத்தைப் பெற்றுத் தருவேன் என்ற வாக்குறுதிகளோடு ஆட்சியைப் பிடித்தார் ஒபாமா.

அவர் வெற்றியின் ரகசியம், மாற்றம் என்னும் மந்திரச்சோல். அமெரிக்கா எதை விரும்பியதோ அதையே தன் முழக்கமாக முன்வைத்தார் ஒபாமா. அமெரிக்கா மட்டுமல்ல முழு உலகமும் அவரை உயர்த்திப் பிடித்துக் கொண்டாடியது. வெள்ளை மாளிகையில் முதல் முறையாக கறுப்பு அதிபர் என்று ஊடகங்கள் சிலிர்த்தன.

கனவு முடிந்து கண் விழித்துப் பார்த்தபோது, அமெரிக்காவிடம் மட்டுமல்ல ஒபாமாவிடமும் மாற்றம் எதுவும் இல்லை. புஷ்ஷுக்குப் பதில் ஒபாமா. வெள்ளையருக்குப் பதில் ஒரு கறுப்பர்.

அமெரிக்க நிதிச் சந்தை ஆட்டம் கண்டு மக்கள் தள்ளாடிக் கொண்டிருந்தபோது, ஒபாமா முதலில் கைகொடுத்துத் தூக்கிவிட்டது, மக்களை அல்ல; கார்ப்பரேட் கம்பெனிகளை. வால்ஸ்ட் ரீட்டையும் தனியார் வங்கிகளையும் பிணை கொடுத்து மீட்டெடுத்துப் பங்குச் சந்தைக்கு உயிரூட்டினார். 2010ல் பங்குச் சந்தை முன்பிருந்த நிலையை அடைந்தது. பெரிய இடைவேளைக்குப் பிறகு தலைமை நிர்வாகிகளுக்குப் பளபளக்கும் சம்பளம் வர ஆரம்பித்தது. அமெரிக்கா மீண்டும் ஒளிர ஆரம்பித்தது. அதேசமயம் சராசரி தொழிலாளர்களின் ஊதியம் தேக்கம் அடைந்தது. பொதுப் பணிகளும் சமூக நலத் திட்டங்களும் பின்னுக்குத் தள்ளப்பட்டன.

2009 தொடங்கி இன்றுவரையிலான வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 6 மில்லியன் (60 லட்சம்). இவர்களுக்கு ஒபாமாவின் அருள் கிடைக்கவில்லை. ஆனால் செல்வந்தர்களுக்கு இன்றுவரை வரிக் குறைப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. புஷ்ஷும் இதையேதான் செய்தார்.

இன்றைய தேதி வரை இராக் போர் முடிவடையவில்லை; ஆப்கனிஸ்தானில் அமெரிக்கக் குண்டுகள் விழுந்துகொண்டு இருக்கின்றன; குவந்தனாமோ சிறைச்சாலை மூடப்படவில்லை. புஷ் முன்னெடுத்துச் சென்ற போரைக் கைவிடும் எண்ணம் ஒபாமாவுக்கு இல்லை. போர் என்றால் வர்த்தகம்; வாப்புகள்; லாபம். அதனால்தான் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பராக் ஒபாமா, தன் பங்குக்கு லிபியா மீது போர் தொடுத்திருக்கிறார்.

எனவே, அமெரிக்கர்கள் சலிப்படைந்து விட்டனர். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒபாமாவின் மதிப்பும் ஜனநாயகக் கட்சியின் மதிப்பும் விழுந்து விட்டன! ஒபாமாவின் இரண்டாவது பதவிக் காலத்துக்கு 42 சதவிகிதத்தினரே ஆதரவு அளித்திருக்கிறார்கள். போதாததற்கு, விஸ்கான்சின் போன்ற பகுதிகளில் ஒபாமா ஆட்சிக்கு எதிரான போராட்ட உணர்வு பெருகிக் கொண்டிருக்கிறது.

தன்னம்பிக்கையின் அடையாளமாகக் கருதப்படும் ஒபாமா தன் பதற்றத்தை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அதே புன்னகை. அதே கையசைப்பு. சென்ற முறை வெளிப்படுத்திய அதே திடம், நம்பிக்கை, மனஉறுதி. கிட்டத்தட்ட அதே தேர்தல் உத்திகள். தேர்தல் வாக்குறுதிகளும், பிரசார உரைகளும், நுணுக்கமான செயல்திட்டங்களும் அநேகமாகத் தயாராகியிருக்கும். மக்கள் மனது வைப்பார்களா என்பது மட்டும் தெரியாது
!

கருத்துகள் இல்லை: