வியாழன், 21 ஏப்ரல், 2011

யுத்தத்தின் கடைசி நாட்களில் 600 சிவிலியன்களை புலிகள் கொன்றனர்!

முன்னாள் எம்.பி கனகரத்தினம் ஏசியன் ட்ரிபியூன் இணையத்திற்கு பேட்டி ஒக்டோபர் முதலாம் திகதிக்கும் 2009 மே 18ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் வன்னிப் பகுதியில் வைத்து 600 அப்பாவி தமிழ் மக்கள் கட்டாக்காலி நாய்கள் போன்று சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இருந்த போதும் புலிகளுக்கு எதிரான போரின் போது இலங்கைப் படையினரால் ஒரு சிவிலியன் கூட கொலைசெய்யப்படவில்லை என முன்னாள் வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. எஸ். கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.


ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை குறித்து ‘ஏசியன் டிரிபியூன்’ இணையத்தளத்திற்கு அளித்துள்ள பேட்டியிலே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.


இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பொதுமக்களை புலிகள் மனிதக் கேடயமாக பயன்படுத்தி தடுத்து வைத்திருந்த போது இவரும் (கனகரத்தினமும்) பொதுமக்களுடன் புதுமாத்தளத்தில் தங்கியிருந்தார். அங்கு நடந்த சம்பவங்களை ஐ.நா. செயலாளரின் நிபுணர்கள் குழு திரிபுபடுத்தி கூறியிருப்பதை மறுத்துள்ள அவர், நிபுணர் குழுவின் அறிக்கை தவறானதென்றும் திரிபுபடுத்தி தயாரிக்கப்பட்ட அறிக்கை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.


ஐ. நா. செயலாளரின் பழிவாங்கும் மனப்பான்மையையே இந்த அறிக்கை சித்தரிப்பதாகவும் மேற்கு நாடுகளில் உள்ள மனித உரிமை அமைப்புகள் மற்றும் மேற்கு நாட்டு தலைவர்களின் கருத்தை பிரதிபலிப்பதையே வெளிப்படுகிறது எனவும் அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.


இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வன்னியில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து விளக்கியுள்ள அவர் பொதுமக்களுடன் தங்கியிருந்து தான் நேரில் கண்டவற்றை முதற் தடவையாக பகிரங்கப்படுத்தியுள்ளார்.


வன்னி மக்களின் பிரதிநிதி என்ற வகையில் அந்த மக்களுடன் தங்கியிருந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கியதாக குறிப்பிட்டுள்ள அவர் உக்கிர யுத்தத்தின் போது அப்பாவி தமிழ் மக்கள் துப்பாக்கி ஏந்திய புலிகளினால் கட்டாக்காலி நாய்கள் போன்று ஈவிரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவித்தார்.


உச்சக்கட்ட யுத்தத்தின் போது அரசாங்க உத்தரவையும் மீறி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் தங்கியிருந்ததாக முன்னாள் எம்.பி. கனகரத்தினத்திற்கு எதிராக அரசாங்கம் குற்றஞ்சாட்டியிருந்தது.


இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள், பாரதூரமான கொலைகள் பற்றிய நேரடி தகவல்களை ஐ. நா.வோ மேற்கு நாடுகளோ அறிந்திருக்கவில்லை என்று தெரிவித்துள்ள அவர், ஐ. நா. செயலாளரின் நிபுணர் குழுவின் அறிக்கையை முற்றாக நிராகரித்துள்ளார்.


மூன்றாவது அல்லது நான்காவது நபருக்கூடாக வெளியான அறிக்கைகள் மற்றும் புலி ஆதரவாளர்கள் மற்றும் அவர்கள் தொடர்பில் அக்கறையுள்ள அமைப்புகள் மூலம் கிடைத்த முறையற்ற தகவல்கள் என்பவற்றின் அடிப்படையிலே நிபுணர் குழு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தனது பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார்.


நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மையை உறுதிபடக் கூற முடியுமா என அவர் ஐ. நா. நிபுணர்கள் குழுவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.


இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வன்னிப் பகுதியில் இருந்த மக்கள் பங்கர்களில் இருந்து வெளியே வர முடியாதிருந்தனர். வெளியில் வந்த மக்கள் புலி துப்பாக்கிதாரிகளின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டனர். இந்த நிலையில் அந்த மக்கள் பற்றிய நேரடி தகவல் எதுவும் வெளிவந்திருக்க முடியாது எனவும் முன்னாள் எம்.பி. கனகரத்தினம் கூறியுள்ளார்.


வெள்ளைக்கொடி ஏந்தி வந்த புலித் தலைவர்கள் படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்தும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.


முக்கிய புலி தளபதிகள் எவரும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்வதை பிரபாகரன் விரும்பவில்லை. அவர்கள் எப்பொழுதும் பிரபாகரனின் ஆயுதக் குழுவினால் சுற்றிவளைக்கப்பட்டே இருந்தனர். யாராவது புலித் தலைவர் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு செல்ல முயன்றால் அவரை சுடுமாறு பிரபாகரன் உத்தரவிட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.


புலி உறுப்பினர்களுக்கு பிரபாகரன் சயனைட் கலாசாரத்தை அறிமுகப்படுத்தியிருந்தார். படையினரைத் தோற்கடிக்க முடியாத நிலையில் சயனைட் வில்லைகளை கடித்து தற்கொலை செய்யுமாறு பணிக்கப்பட்டிருந்தனர். இதனை எவரும் மீறுவதை பிரபாகரனால் சகிக்க முடியாதிருந்தது.


நடேசனும் மற்றும் தலைவர்களும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு செல்லும் நம்பிக்கைத் துரோகத்தை பிரபாகரன் ஒருபோதும் ஏற்றிருக்க மாட்டார். அவ்வாறான சந்தர்ப்பத்தில் பிரபாகரன் அவர்களை சுட்டுக்கொன்றிருக்கக் கூடும் என்றும் அவர் கருத்துக் கூறியுள்ளார்.


1983 ஆம் ஆண்டு தின்னவேலியில் (திருநெல்வேலி) வைத்து இராணுவ படையணி மீது நடத்திய தாக்குதலையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். அந்தத் தாக்குதலில் பிரபாகரன், கிட்டு, ஐயர், புலேந்திரன், சந்தோசம், செல்லக்கிளி, அப்பையா ஆகியோர் தொடர்புபட்டிருந்தனர்.


செல்லக்கிளி தனது இளைய சகோதரன் என்று கூறியுள்ள கனகரத்னம், இந்த தாக்குதலின் போது அவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டதாக கூறினார். இந்த சம்பவத்தையடுத்து தமது குடும்பத்தினர் புலிகளுடன் எந்த வகையிலும் தொடர்பு வைத்திருக்கவில்லை என்றும் கனகரத்தினம் கூறியுள்ளார்.


தமிழ் செல்வனே தன்னை 2004 பொதுத் தேர்தலின் போது வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளராக நிறுத்தியதாக தெரிவித்துள்ள அவர் தனது பெயர் வேட்பாளர் பட்டியலில் இருப்பதை கண்டு வியப்படைந்ததாகவும் கூறியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானது முதல் தான் வன்னி மக்களுடன் தங்கியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: