வெள்ளி, 22 ஏப்ரல், 2011

விக்கி லீக்ஸின்' மறுபக்கம்: இன்று டிஸ்கவரி சேனலில் வெளியீடு

அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விக்கி லீக்ஸ் இணையதளம் தொடர்பான ஆவணப் படம் வெள்ளிக்கிழமை (ஏப்.22) வெளியாகிறது.  விக்கி லீக்ஸ் நிறுவனத்தில் பணி புரிவோரிடையே நிலவும் மனக் கச ப்பு, சச்சரவு உள்ளிட்டவை அனைத்தும் இதில் இடம்பெற்றுள்ளன.  பெரும்பாலான உலக நாடுகள் குறித்த தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய விக்கி லீக்ஸ் பற்றிய ஆவணப்படத்தை டிஸ்கவரி சேனல் வெளியிடுகிறது. ஏப்ரல் 22-ம் தேதியும் அதன் மறு ஒளிபரப்பு ஏப்ரல் 24-ம் தேதியும் வெளியாகும் என தெரிவித்துள்ளது. இந்த ஆவணப்படத்தை புலனாய்வு பத்திரிகையாளர் பால்மொரைரா மற்றும் பிரான்ஸ் பிரஸ் ஏஜென்ஸியைச் சேர்ந்த லக் ஹெர்மான் ஆகியோர் தயாரித்துள்ளனர்.  உலகம் முழுவதும் கதாநாயகர்களாகக் கருதப்பட்ட விக்கி லீக்ஸ் நாயகர்கள் தனிப்பட்ட முறையில் எப்படி இருக்கிறார்கள் என்பதை இந்தப் படம் விளக்குகிறது. உண்மையிலேயே அவர்கள் மற்றவர்களுக்கு உதவும் தன்மை கொண்டவர்களாக இருக்கிறார்களா? அல்லது வெறுமனே தகவலைப் பெற்று அதை ஒளிபரப்பும் ஒரு சக ஊழியர்களாக அவர்கள் பணியாற்றுகின்றனரா என்பதை இந்தப் படம் விளக்குகிறது. இந்த ஆவணப்படத்தில் விக்கி லீக்ஸின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் டேனியல் டாம்ஷிட்-பெர்க்கின் கருத்துகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. செய்திகளை ஊடுருவி பெற்று அதை வெளியிடும் அதே நேரத்தில் இந்த சமுதாயத்தில் மாற்றம் வர வேண்டும் என்ற நோக்கில் அதைச் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.  விக்கி லீக்ஸ் குறித்த அபிப்ராயம், அதன் பலம், பலவீனம், அது எதிர்கொள்ளும் சவால்கள், நிதி பிரச்னைகள் உள்ளிட்ட அனைத்தும் இதில் ஆராயப்பட்டுள்ளன.  இந்த ஆவணப் படத்தில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே பேசுகையில், இராக்கில் அமெரிக்க ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பான ஆதாரங்கள், புலனாய்வு பத்திரிகை செய்தி வெளியீட்டுக்கு அடிப்படை ஆதாரமானது என்று குறிப்பிட்டுள்ளார்.  மிகவும் ரகசியம் என கருதப்பட்ட இடங்களில் இருந்து கூட தகவல்களைப் பெற்று வெளியிட்டதன் மூலம் பல்வேறு விரோதிகளையும் இந்நிறுவனம் பெற்றுள்ளது. அமெரிக்க ராணுவம் தொடர்பாக ஆயிரக்கணக்கான தகவல்களை வெளியிட்டுள்ளது. ஆனால் தகவல் அளித்தவர்கள் பற்றிய ரகசியத்தை தொடர்ந்து இந்நிறுவனம் காப்பாற்றி வருகிறது.  விக்கி லீக்ஸ் வெளியிட்ட தகவல்கள் நியூயார்க் டைம்ஸ், தி கார்டியன், லே மோன்டே செய்தித்தாள்களில் வெளியாகியுள்ளன. கிடைத்த ஆவணங்களிலிருந்து உண்மை தகவல்களை வெளியிட்ட விதம் குறித்து இந்த நிறுவனங்களின் செய்தியாளர்கள், உதவி ஆசிரியர்கள் தங்களது அனுபவங்களை இந்த ஆவணப் படத்தில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.  புலனாய்வு தகவல்களை வெளியிட்டதன் மூலம் ஜூலியன் அசாஞ்சே கதாநாயகனாகக் கருதப்பட்டார். ஆனால் அவர் தனது நிறுவன ஊழியர்களுடன் சுமுகமாக பழகவில்லை என்று டேனியல் குறிப்பிட்டுள்ளார். இதற்காகத்தான் தம்மை வேலையிலிருந்து சஸ்பெண்ட் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இப்போது மற்றொரு புலனாய்வு இணையதளத்தை நடத்தி வரும் இவர், தாம் ஏமாற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இப்போது விக்கி லீக்ஸ் இணையதளத்துக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிதி திரட்டுவது பிரச்னையாக உள்ளதாகத் தெரிகிறது. இராக் போர் தொடர்பான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஆவணப்படம் ஏப்ரல் 22-லும் ஏப்ரல் 24-ல் மறு ஒளிபரப்பவும் டிஸ்கவரி சேனல் திட்டமிட்டுள்ளது.  புலனாய்வு இணையதளத்தின் செயல்பாடுகளை வரிசையாகக் குறிப்பிடும் இந்த ஆவணப் படத்தில் இப்போது பென்டகனின் முதலாவது எதிரியாக மாறியுள்ள ஜூலியன் அசாஞ்சே பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. அசாஞ்சேயின் பிரத்யேக பேட்டியும், நிறுவனத்தை உயர்த்த அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

கருத்துகள் இல்லை: