வெள்ளி, 22 ஏப்ரல், 2011

வடிவேலுக்கு தி.மு.க., கொடுத்த "சன்மானம்' எவ்வளவு?

தி.மு.க., கூட்டணியின், "ஸ்டார்' பேச்சாளராக தமிழகத்தை வலம்வந்த நடிகர் வடிவேலுவின் பிரசாரம் குறித்த சுவையான தொகுப்பு:
* வடிவேலுவுடன் வேனில் பயணம் செய்த இணை இயக்குனர்கள் இருவரும், எந்தத் தொகுதியில், யாரை பற்றி என்ன பேச வேண்டும் என்று, அந்த ஏரியா கட்சிக்காரர்களிடம் முன்னதாகவே எழுதி வாங்கி விடுவர். இத்துடன், அங்கு அரசு செயல்படுத்திய திட்டங்கள், மேலும் செய்யவேண்டியவைகளையும் குறித்து, வடிவேலுவிடம் படித்து காட்டுவர். அதை, வடிவேலு காதில் வாங்கி, மனசிற்குள் ஒரு முறை பேசிப்பார்ப்பார். தேவையென்றால் வேனுக்குள் மற்றவர்களிடம் பேசி, ஒத்திகையும் பார்த்துக்கொள்வார். எம்.ஜி.ஆர்.,படப் பாடல்களை பேச்சுக்கு இடையே பொருத்தமாக சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து பாடி, பேசுவதையும் வழக்கமாக வைத்திருந்தார். ஓரிடத்தில் பேசிவிட்டு, அடுத்த கூட்டத்திற்கு செல்லும் இடைவெளியில், வேனுக்குள் இந்த ஒத்திகை நடந்துள்ளது. இப்படிதான் பத்து நாட்களும் பிரசாரம் நடந்துள்ளது.

* வடிவேலு படங்களில் நடித்த கேரக்டர்களின் பெயர்களான, "வண்டு முருகன், ஸ்நேக் பாபு, அசால்ட் ஆறுமுகம், தீப்பொறி திருமுகம், நாய் சேகர், டெலக்ஸ் பாண்டியன், கைப்புள்ள' போன்ற பெயர்களை குழந்தைகளும்,பெரியவர்களும் பிரசாரத்தின் போது சொல்லி, வடிவேலுவை அழைத்துள்ளனர். இதனால், உற்சாகமான வடிவேலு, "கண்ணுங்களா... நீங்க இல்லாம நானில்லை. என்னை எப்பவும் நீங்க மறந்துடக்கூடாது' என்று உருக்கத்தோடு பேசினார்.

* தேர்தல் பிரசார பயணத்தில், சில இடங்களில் ஓட்டல்களிலும், சில இடங்களில், தி.மு.க., பிரமுகர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளார். கட்சி நிர்வாகிகள் வீடுகளில் தங்கும் போது, அங்குள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, வடிவேலுடன் குரூப் போட்டோ எடுத்துக்கொள்ள அதிக ஆர்வம் காட்டினர்.

* கடைசி ஒரு நாள் முழுவதும் ரிஷிவந்தியத்தில் பிரசாரம் செய்ய வேண்டும் என்று விரும்பிய வடிவேலு, முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து அனுமதி கேட்டார். முதல் நாள் திருக்கோவிலூரில் நடந்த பிரசாரத்தில், கல் வீச்சு நடந்து, வேட்பாளர் மண்டை உடைந்ததால், சென்னையிலிருந்து பிரபல தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தை சேர்ந்த, 30 பேர் மறுநாள் அவசர, அவசரமாக ரிஷிவந்தியத்திற்கு அழைத்து வரப்பட்டனர். ஆனாலும், முன் கூட்டியே ரிஷிவந்தியத்தில் நேரம் குறிப்பிட்டு விஜயகாந்த் பிரசாரம் செய்ய அனுமதி வாங்கியிருந்ததால், வடிவேலுவுக்கு அங்கு பிரசாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜ் போலீஸ் அதிகாரிகளிடம் கெஞ்சியும்,போராடியும் யாரும் மசியாததால் ரிஷிவந்தியத்தை தவிர, தொகுதியில் உள்ள மற்ற கிராமங்களில் வடிவேலு பிரசாரம் செய்துவிட்டு திரும்பினார்.

* ரிஷிவந்தியத்தில் கடைசி நாள் பிரசாரம் என்பதால், ஜெயலலிதாவையும், விஜயகாந்தையும் காரசாரமாக வடிவேலு பேசுவார் என்று ஆளுங்கட்சியினர் எதிர்ப்பார்த்திருந்தனர். ஆனால், மற்ற நாட்களைவிட அன்று வடிவேலு வேகம் காட்டாமல், அடக்கியே வாசித்தார். அவரது பிரசாரத்தில் ஜெயலலிதா பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை. தன் பேச்சு, "ஸ்கிரிப்ட்' இப்படித்தான் இருக்க வேண்டுமென, வடிவேலு சொன்னதால் அதற்கேற்ப உதவியாளர் கள் ஜெ.,வை தவிர்த்து தயாரித்துள்ளனர்.

* ரிஷிவந்தியத்தில் கடைசி நாள் பிரசாரம் முடித்து வடிவேலு சென்னை திரும்பும் நேரத்தில், "பிரசாரம் மூலம் இரண்டுகோடிக்கு மேல மக்களை நேரில் சந்திருப்பேன். எல்லாரையும் சிரிக்க வச்சிருக்கேன்; சிந்திக்க வச்சுருக்கேன். அதோட, "டிவி' மூலம் தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் என் பேச்சு சென்றடைந்திருக்கும். எப்படியோ, தி.மு.க.,வுக்கு நல்லது நடக்கணும்'என்று சொல்லி பெருமிதப்பட்டுள்ளார் வடிவேலு.

* வடிவேலுவுக்கும், 18 பேர் கொண்ட குழுவினருக்கும், 10 நாட்களுக்கு சாப்பாட்டு செலவு, 1 லட்சத்து, 12 ஆயிரம் ரூபாய் ஆகியுள்ளது. இத்துடன் வடிவேலுவுக்கு, அந்தந்த மாவட்ட செயலர்கள் மூலம், "போதும், போதும்' என்று வடிவேலு மகிழும் வகையில், பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இவைகளுடன் தி.மு.க., தலைமை கழகத்தின் மூலம், பெரும் தொகை ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. கூட்டிக்கழித்து பார்த்தால், "சன்மானம்' சில கோடிகளைத் தொடும் என்கிறது தகவலறிந்த வட்டாரம்.

- நமது நிருபர் -

Thennavan - Chennai,இந்தியா
2011-04-22 04:10:14 IST Report Abuse
அ.தி.மு.க., நண்பர்கள் கோபத்தை பார்த்தாலே தெரிகிறது வடிவேலு எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கார்னு......அவரு என்ன உள்ளதைதானே சொன்னாரு.... இவ்வளவு ஏன் ஜெயலலிதா அவர்கள் விஜயகாந்த் பற்றி சொன்னதைத்தானே சொன்னார்....சும்மாவே அரசியல்வாதிங்க யாரும் சுத்தமானவர் கிடையாது....அதிலும் விஜயகாந்த் பொது இடத்தில் தன் கட்சிகாரரை கை வைப்பதுதும், தான் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் உளறுவது.....இதை சொன்னால் நீங்கள் கோபப்படுகிறீர்கள்.....ஒருவேளை விஜயகாந்த் அ.தி.மு.க.,கூட்டணி இல்லாவிட்டால் நிங்களும் சேர்ந்து வடிவேலு சொன்னதை ரசிச்சு இருப்பீங்க....விஜயகாந்த் ‌செய்த செயல்கள் பொது மக்களிடை‌யே ஒரு அவைபெயரை பெற்று தந்து இருப்பதுதான் உண்மை...இந்த உண்மை தேர்தல் முடிவு வரும்போது தெரியும்...
Pugal - covai,இந்தியா
2011-04-22 04:03:48 IST Report Abuse
ஒரு கட்சி அதன் பேச்சாளருக்கு தரும் சன்மானம் அந்த கட்சியின் இஷ்டம். அது பற்றி பேச நமக்கு என்ன உரிமையும் இல்லை; என்ன பேசவேண்டும் என்று பேசிப்பார்த்து, ஒத்திகை செய்து தயாரெடுத்து பேசினார் என்பது பாராட்டப் பட வேண்டிய ஒன்று; "நான் தப்பு தப்பா பேசுறேனா?" என்று உளறாமல் பேசுவது நல்லது தானே! ஏன் பொறாமையில் வயிற்றெரிச்சல் படுகிறீர்கள்?? செந்தில் / சிங்கமுத்து கோஷ்டிகள் காசு வாங்காமல் பேசியிருக்கலாம் அல்லது காசு வாங்கியும் இருக்கலாம். அது அவர்கள் இஷ்டம்.வடிவேலுவின் பேச்சு பாராட்டப்படும் வகையில் இருந்தது என்பது மறுக்கமுடியாத உண்மை! பாவம் பொறாமைக்காரர்களால் தாங்க முடியவில்லை. (விந்தியா என்று ஒரு நடிகை அ.தி.மு.க.,விற்கு பேசினாரே, அவரை விட குஷ்பூ சீனியர் / திறமையும் கூடுதல் புகழும் உடையவர்). விஜயகாந்த் என்ற நடிகர் பேசலாம் - வடிவேலு என்ற நடிகர் பேசக்கூடாதா? ரெண்டு பேரும் நடிகர்கள் தானே!! ஏன் வடிவேலுவிற்கு மட்டும் இப்படி ஒரு கட்டுரை?

சரியாக சொன்னீர்கள் நடராஜன்... தந்தை பெரியார், மூதறிஞர் ராஜாஜி, பேரறிஞர் அண்ணா, பட்டுகோட்டை அழகிரி, நாவலர் நெடுஞ்செழியன் என்று பெரியவர்களும் தன்மானமிக்க திராவிட தலைவர்களும் பேசிய தமிழக அரசியல் மேடைகளில் இன்று கற்பு முக்கியம் அல்ல என்று பேசும் குஷ்புவும் அரசியல் என்றால் என்னவென்று தெரியாத வடிவேலுவும் பேசுகிறார்கள்... அதிலும் குஷ்புவின் தமிழ் காது கொடுத்து கேட்க முடியவில்லை... அவ்வளவு பிழை... திமுக வின் நிலை இவ்வளவு தரம் தாழ்ந்து பொய் விட்டது... இதற்கு பேசாமல் முக கட்சியை கலைத்து விடலாம்.

கருத்துகள் இல்லை: