சனி, 30 ஏப்ரல், 2011

இளங்கோவன்: தி.மு.க.,வினர் வாசன் ஆதரவாளர்களை வைத்து மட்டுமே தேர்தல் பணிகளை

""தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் 63 தொகுதிகளிலும் வெற்றி பெறுவர்,'' என, அவிநாசிக்கு வந்த, முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் தெரிவித்தார்.

அவிநாசியில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தலில், காங்., கட்சி போட்டியிட்ட 63 தொகுதிகளிலும் கண்டிப்பாக வெற்றி பெறும். அதேபோல், மேற்கு வங்கம், அசாம், கேரளாவிலும் காங்., கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். தமிழக காங்., தலைவர் தங்கபாலுவை மாற்ற வேண்டுமென்று புகார் சென்றுள்ளது. அதுகுறித்து கட்சி தலைமை ஆய்வு செய்து வருகிறது. அடுத்த தலைவர் யார் என்பதை, சோனியா முடிவு செய்து அறிவிப்பார். இவ்வாறு இளங்கோவன் கூறினார்.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து கேள்வி கேட்டதற்கு, "அது குறித்து தற்போது கருத்து கூற விரும்பவில்லை' என்றார். இளங்கோவனிடம், காங்., தொண்டர்கள், சட்டசபை தேர்தல் குறித்து சரமாரியாக புகார் கூறினர். அவர்கள் கூறுகையில், "அவிநாசி தொகுதியில், தி.மு.க.,வினர் வாசன் ஆதரவாளர்களை வைத்து மட்டுமே தேர்தல் பணிகளை செய்தனர்; எங்களை எதற்கும் கூப்பிடவில்லை. தேர்தல் பணியில் ஈடுபட்ட பிற அணியை சேர்ந்தவர்கள், ஒழுங்காக பணியாற்றவில்லை. எங்களை தொடர்ந்து புறக்கணித்தால், கட்சி பணிகளில் நாங்கள் எதற்கு ஈடுபட வேண்டும்' என்றனர். அதற்கு இளங்கோவன், "தேர்தல் முடிவுக்கு பின், அனைத்தையும் பேசி தீர்த்து கொள்ளலாம். பொறுமையாக இருங்கள்' என்றார். இதனால், தொண்டர்கள் சமாதானம் அடைந்தனர்.

கருத்துகள் இல்லை: