புதன், 27 ஏப்ரல், 2011

கனிமொழி: 'சட்டரீதியில் சந்திப்போம்'-திமுக உயர் நிலைக் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: 2ஜி விவகாரத்தில் உண்மையை நிலைநாட்ட சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், 2ஜி விவகாரத்தில் உண்மையை நிலைநாட்ட முடியும் என திமுக நம்புகிறது. ஊடகங்களின் பிரசார மாயைக்கு திமுக இரையாகாது என்று திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக 2வது குற்றப்பத்திரிக்கையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. அதில் கனிமொழியின் பெயர் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல கலைஞர் டிவியின் நிர்வாகி சரத்குமார் ரெட்டியின் பெயரையும் சேர்த்துள்ளனர். இதனால் திமுக அதிர்ச்சியும், கடும் அதிருப்தியும் அடைந்துள்ளது.

ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதால், நீதிமன்ற உத்தரவுப்படி வரும் மே 6ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமனறத்தில் ஆஜராகும்போது, கைது செய்யப்படக் கூடும் என்றும் பரவலாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந் நிலையில் திமுக இன்று தனது உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தைக் கூட்டியது. இக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது.

இக் கூட்டத்தில் முதல்வரும் கட்சித் தலைவருமான கருணாநிதி, நிதியமைச்சரும் பொதுச் செயலாளருமான க.அன்பழகன், துணை முதல்வரும் பொருளாளருமான மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சரும் திமுக தென் மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரி, மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், கனிமொழி, அமைச்சர்கள் உள்ளிட்ட 27 பேர் பங்கேற்றனர்.

அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்,

பூதத்தை பூனைக்குட்டி விழுங்கி விட்டது போல

பூதத்தை பூனைக்குட்டி விழுங்கிவிட்டது என்று கூறுவதைப்போல, அனுமானமாக பலபல கோடி ரூபாய் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி விட்டதாக தலைமைக் கணக்காயர் தெரிவித்தது முதல் இந்தப் பிரச்சனையில் அரசியல் சதுரங்கம் ஆடுவதற்கு ஓர் ஆதிக்க வட்டாரம் தொடர்ந்து முயன்று வருவதை நாடறியும்.

2ஜி பிரச்சனையில் சிபிஐ விசாரணை தொடங்கப்பட்டு, அதன் தொடர்பாக தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவை கைது செய்து திகார் சிறையில் வைத்துள்ளனர்.

கலைஞர் தொலைக்காட்சிக்காக 200 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டு வட்டியுடன் திருப்பிச் செலுத்தியுள்ள விவரம் ஆவணங்களுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தின் பங்குதாரரான கனிமொழி, இயக்குநர் சரத் ஆகியோரை சிபிஐ 2வது குற்றப்பத்திரிகையில் சேர்த்திருக்கும் செய்தி வியப்பில் ஆழ்த்துகிறது.

2ஜி வழக்கை திமுக தலைமை மீது பழி சுமத்துவதற்கு கிடைத்த அரிய வாய்ப்பாக கருதி, பல ஏடுகளும் ஊடகங்களும் செய்தி பரப்பி வருவதோடு, ஐக்கிய முற்போக்கு கூட்டணியினரிடையே அவ நம்பிக்கையை உருவாக்கவும், கூட்டணியை உடைக்கவும், ஊழலையே கலாச்சாரமாகவும், வாழ்க்கை முறையாகவும் கொண்ட சில அரசியல் கட்சித் தலைவர்கள் உள்நோக்கத்துடன் செயல்படுகின்றனர். அப்படிப்பட்ட பிரச்சார மாயைக்கு திமுக இரையாகாது.

முறை அறிந்து செயல்பட்டு உண்மையை நிலைநாட்டும் சிறப்படைய திமுக. இந்த வழக்கிலும் உண்மையை நிலைநாட்டிட சட்டப்படியான நடவடிக்கையை திமுக மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் கனிமொழி ஆஜராவாரா?-ஜெ. ஆஜரானாரா?:

அப்போது வரும் 6ம் தேதி 2ஜி வழக்கில் கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதே, அவர் ஆஜராவாரா என்று நிருபர்கள் கேட்டதற்கு, சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா ஆஜரானாரா?. 2ஜி விவகாரம் தொடர்பாக சட்ட நிபுணர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றார்.

கூட்டத்துக்குப் பின்னர் திமுக வெளியிட்ட அறிக்கையில், குற்றம் நிரூபிக்கப்படாதவரை யாரும் குற்றவாளி இல்லை. தவறான பிரசாரத்தின்மூலம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக இக் கூட்டம் குறித்து தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், 2 ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் நீதிமன்றம் அறிவிப்பின் கீழ் சி.பி.ஐ. கனிமொழி பெயரை குற்றப்பத்திரிகையில் சேர்த்துள்ளது. சி.பி.ஐ. ஒரு தனி அமைப்பு. அவர்களின் நடவடிக்கை குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை.

குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்க்கப்பட்டதால் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியில் பாதிப்பு இல்லை. எங்கள் கட்சியின் நிலை குறித்தும், மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்தும் இன்று முடிவு செய்வோம் என்றார்.

அத்வானியை காட்டி சமாதானப்படுத்தும் காங்கிரஸ்:

இந் நிலையில் பெயர் குறிப்பிட விரும்பாத காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், இந்தப் பிரச்சனையை அரசியல்ரீதியாகவும், சட்டரீதியாகவும் சந்திக்க வேண்டும் என்பதை திமுக புரிந்து கொள்ளும் என்று நம்புகிறோம். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாலேயே குற்றவாளி என்று அர்த்தமில்லை.

அத்வானி மீது கூட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் அவர் அரசியலில் நீடித்துக் கொண்டுதானே இருக்கிறார் என்றார்.

3வது குற்றப்பத்திரிகை-அவகாசம் கோரும் சிபிஐ:

ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் இதுவரை 2 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. முதல் குற்றப்பத்திரிகை கடந்த 2ம் தேதியும், 2ம் குற்றப்பத்திரிகை நேற்று முன்தினமும் தாக்கல் செய்யப்பட்டன. 3வதாக ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்தப் பணிகளில் சிபிஐ தீவிரமாக உள்ளது. ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் தொடர்புடைய மேலும் பலரிடம் விசாரணை நடத்துவதுடன் மேலும் பல ஆதாரங்களையும் திரட்ட வேண்டியுள்ளதால் இதை தாக்கல் செய்ய அதிக காலம் தேவைப்படுகிறது.

ஆனால் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையை மே 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதற்குள் 3வது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய முடியாது என்பதால் கூடுதல் கால அவகாசம் கேட்க சிபிஐ முடிவு செய்துள்ளது.

இதற்காக சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்ய உள்ளதாகத் தெரிகிறது. அதில், ஸ்பெக்ட்ரம் முறைகேடு பணம் மொரீசியஸ், சைப்ரஸ், செசல்ஸ் போன்ற வெளி நாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அது குறித்து விசாரணை நடத்த அதிக காலம் தேவை என்றும் சிபிஐ கூறும் என்று தெரிகிறது.
English summary
DMK has convened its high level committee meeting today. The meeting will discuss the issue of inclusion of Kanimozhi's name in spectrum case chargesheet.

கருத்துகள் இல்லை: