அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரிக் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:<
அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பாரக் ஒபாமா இந்திய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நவம்பர் 8ம் தேதியன்று, நாடு முழுவதும் இடதுசாரிக் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகச் செய்துள்ள அறிவிப்பு அதிர்ச்சியையும், மிக்க வேதனையையும் தருகிறது.
பலநூறு ஆண்டுகளாக ஆப்பிரிக்கக் கண்டத்துக் கருப்பு இன மக்கள் மிருகங்களைவிடக் கேவலமாக நடத்தப்பட்டு, அமெரிக்க நாட்டிலும், உலகின் வேறு சில பகுதிகளிலும் கொடூரமாக வதைக்கப்பட்டதை ஆய்வு செய்தால் ரத்தக்கண்ணீர் வடிக்காமல் இருக்க முடியாது.
அமெரிக்க நாட்டில் கொடும் இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு, மனிதர்கள் என்ற பட்டியலிலேயே இடம் பெறாமல் இருநத கருப்பர்கள், போராடிப்போராடி, சிறுகச்சிறுக உரிமைகள் பெற்று, 1863 ஜனவரி 1ல் ஆப்ரகாம் லிங்கன் கருப்பர்களுக்கு வெளிச்சத்தைக் காட்டி, அதைத்தொடர்ந்தும் அவர்கள் போராடி, மகத்தான தியாகங்களைச் செய்து, 1963ல் பல லட்சம் மக்களிடையே மார்ட்டின் லூதர் கிங் ‘நான் கனவு காணும் உலகம்’ என அறிவித்து, அவரும் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டு, கருப்பர்கள் நடத்திய போராட்டப் பயணத்தில் உலகம் போற்றும் திருப்புமுனையாக ஒரு கருப்பு இனத்துத் தந்தையின் மகனாகப் பிறந்த ஒபாமா அமெரிக்க நாட்டின் குடியரசுத் தலைவர் ஆகி உள்ளார்.
இந்திய தேசப்பிதா என்று போற்றப்படும் அண்ணல் காந்தியாரை மனிதகுலத்தின் ஒளிவிளக்காகப் போற்றுகின்ற ஒபாமா, தன் அலுவலக அறையில் காந்தியாரின் படத்தையும் வைத்து உள்ளார்.
அமெரிக்க அதிபருக்கு ஆவேசமான எதிர்ப்பைக் காட்டும் இடதுசாரிகளுக்கு ஒரு கேள்வி. போபால் விஷவாயுக் கசிவால் எண்ணற்ற மக்கள் உயிர் இழந்தபின், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சிறப்பு விமானம் மூலம் போபாலில் இருந்து டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அமெரிக்காவுக்கே பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்ட உண்மை அண்மையில் வெளியானதே, அதற்குக் காரணமான காங்கிரஸ் அரசைக் கண்டித்து, இடதுசாரிகள் நாடு தழுவிய போராட்டம் நடத்தினார்களா? இல்லை.
ஆப்கானிஸ்தானத்தில் அங்கிருந்த அரசுகளைக் கவிழ்த்து, ஒரு பொம்மை அரசாங்கத்தை உருவாக்கி, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சோவியத் படைகளை ஆப்கானிஸ்தானத்தில் கொண்டு போய் சோவியத் ரஷ்யா நிறுத்தியதற்கு, இடதுசாரிகள் கண்டனம் தெரிவித்தது உண்டா?
இந்தியாவின் ஒரு பகுதியான அருணாசலப் பிரதேசத்தை, இந்தியப் பகுதியாக ஏற்றுக் கொள்ளாமல், தங்கள் பகுதி என்று வரைபடம் வெளியிடுகின்ற சீன அரசைக் கண்டித்துப் போராட்டம் நடத்தியது உண்டா?
ஜம்மு காஷ்மீரில் இருந்து சீனாவுக்கு வருகின்றவர்களுக்கு, கடவுச்சீட்டில் முத்திரை இடாமல், தனித்தாளில் விசா கொடுப்பதும், பாகிஸ்தான் ஆக்கிரமித்து உள்ள இந்தியப் பகுதியை, பாகிஸ்தானுக்கு உரியது என்றும் சீனா அதிகாரபூர்வமாகச் சொல்லி வருவது குறித்து சீனாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க, சீனப் பிரதமர் வென்ஜியாபோ, அடுத்து இந்தியா வருகின்றபோது, அவரை எதிர்த்து இடதுசாரிகள் நாடெங்கும் கண்டனப் போராட்டம் நடத்த முன்வருவார்களா?
இலங்கைத் தீவில் லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவிக்க இந்திய அரசு செய்ததைப் போல, சீன அரசும் ஆயுதங்கள் வழங்கியதே, அதை இடதுசாரிகள் கண்டித்தார்களா?
இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்கள் கொடூரப் படுகொலைக்கு ஆளானபோது, தனது நாடு விடுதலைப்புலிகளைத் தடை செய்து இருந்தபோதிலும் போரை நிறுத்தச் சொல்லி ஒபாமா மூன்று முறை குரல் கொடுத்தார்.
கருப்பு இனத்தில் இருந்து, வெள்ளை மாளிகை அதிபராகி உள்ள ஒபாமாவை இந்திய நாட்டின் கோடானுகோடி மக்களும் கட்சி, மத எல்லைகளைக் கடந்து வாழ்த்தி வரவேற்க வேண்டும் என வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக