ஞாயிறு, 10 நவம்பர், 2024

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்.. அனுர முன்பிருக்கும் மிகப்பெரிய சவால்! மேஜிக் நம்பர் கிடைக்காவிட்டால்?

May be an image of one or more people and text

tamil.oneindia.com - Vignesh Selvaraj : கொழும்பு: வரும் நவம்பர் 14 ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தின் 225 இடங்களுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்கவுக்கு இருக்கும் சவால் என்ன?
மெஜாரிட்டி இடங்களை வெல்ல முடியாவிட்டால் என்ன நடக்கும்? இலங்கையில் ஒன் இந்தியா நடத்திய நேர்காணல் இங்கே!
கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி இலங்கையில் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.
அந்தத் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கட்சியின் (JVP) தலைவர் அனுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று இலங்கையின் ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் எண்ணப்பட்ட வாக்குகளில் எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறாத நிலையில்,


இரண்டாவது விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டன. அதன் அடிப்படையில் அனுர குமார திசநாயக்க வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
Exclusive Sri Lanka parliament election What happens if Anura gets an absolute majority

இடதுசாரி கொள்கையை அடிப்படையாகக் கொண்ட கட்சி ஒன்று இலங்கையில் ஆட்சி பீடம் ஏறியுள்ளது இதுவே முதல் முறை. அதைத் தொடர்ந்து, தேசிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹரிணி அமரசூரியவை இடைக்கால பிரதமராக பதவியில் அமர்த்தினார்.

இலங்கை தேர்தல்: இலங்கையின் நாடாளுமன்ற பதவிக் காலம் முடிய 10 மாதங்கள் உள்ள நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்து இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க உத்தரவிட்டார். அனுரவின் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு 4 எம்.பிக்கள் மட்டுமே உள்ள நிலையில், புதிய சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு பெரும்பான்மை பலம் வேண்டும் என்பதால் நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் நடத்த உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் வரும் நவம்பர் 14-ம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தின் 225 இடங்களுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. அனுர குமார திசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி, சஜித பிரேமதாச, முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோரின் கட்சிகளும் களத்தில் உள்ளன.

இலங்கை நாடாளுமன்றம்: இலங்கை, ஜனாதிபதி ஆட்சி முறை கொண்ட நாடு. என்றாலும், நாடாளுமன்றத்திற்கு என முக்கியமான அதிகாரம் உள்ளது. ஜனாதிபதிக்கு, நாடாளுமன்றத்திலும் பெரும்பான்மை இருந்தால் தான் திட்டங்களைச் செயல்படுத்த முடியும். இலங்கை நாடாளுமன்றத்தின் 225 இடங்களில் 196 இடங்களுக்கான உறுப்பினர்களை மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்வு செய்வார்கள். மீதமுள்ள 29 இடங்கள், கட்சிகள் தேசிய அளவில் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் விகிதாச்சார அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

இலங்கை நாடாளுமன்றத்தில் மெஜாரிட்டி பெற 113 இடங்களுக்கு மேல் வெல்ல வேண்டும். 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் சிறப்பு மெஜாரிட்டி கிடைக்கும். அதன் மூலம் அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவருவது போன்ற பெரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும். எனவே, அனுர குமார திசாநாயக்கவின் ஜேவிபி கட்சிக்கு சிறப்பு மெஜாரிட்டி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் என்ன நடக்கும்?: இலங்கை பாராளுமன்றத்தின் 225 இடங்களுக்கான தேர்தலில் மெஜாரிட்டிக்கான 113 என்ற எண்ணிக்கையில் சீட் கிடைக்காவிட்டால் என்ன நடக்கும்? என இலங்கையில் உள்ள மூத்த ஊடகவியலாளரிடம் நமது ஒன் இந்தியா செய்தியாளர் நேர்காணல் நடத்தினார். அதன் விவரம் இங்கே..

இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் கூறுகையில், "ஒருவேளை, அனுர குமார திசாநாயக்கவின் ஜேவிபி கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற முடியாவிட்டால், மற்ற கட்சிகளின் ஆதரவை நாட வேண்டியிருக்கும். ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாசா, ராஜபக்சேக்களின் கட்சிகளை அநுர நாடக்கூடிய வாய்ப்பில்லை. இவர்கள் யாரையும் சேர்த்துக்கொள்ளப்போவதில்லை என்றுதான் ஜேவிபி கட்சியினர் கூறுகின்றனர்.

ஆட்சியை நடத்த முடியாத அளவுக்கு: ஆனால், ஆட்சி என்று வந்தபிறகு, நடைமுறைச் சாத்தியமுள்ள சில நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டிய தேவைகள் இருக்கும். நாடாளுமன்றத்தில் 113க்கும் குறைவான இடங்களை வென்று வந்தால், அதிபர் அனுர குமாரவுக்கு எதிராக கட்சிகள் களமிறங்கும், அவரது ஆட்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்கமாட்டார்கள், இந்த ஆட்சியை நடத்த முடியாத அளவுக்கு சிக்கல் ஏற்படலாம்" எனக் கூறியுள்ளார்.

அதாவது, இலங்கையில், ஜனாதிபதியும் பிரதமரும் வெவ்வேறு கட்சிகள் - மற்றும் சித்தாந்தங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தால், அடிப்படைக் கொள்கைகளில் ஒருமித்த கருத்து ஏற்படாது, நிர்வாகச் சிக்கல்கள் எழும். முரண்கள் அதிகரிக்கும் பட்சத்தில், அதிபர் அனுர குமார திசநாயக்க, இலங்கை பிரதமரை பதவி நீக்கம் செய்து மீண்டும் தேர்தலைச் சந்திக்கும் நிலை ஏற்படலாம்

கருத்துகள் இல்லை: