jaffnamuslim.com : வட மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்த கருத்துக்கள்
கடந்த 21 ஆம் திகதி நாட்டின் அரசியலில் தீர்மானமிக்க போட்டி காணப்பட்டது. அப்போது முன்னாள் ஜனாபதிபதி வவுனியாவிற்கு வந்தார். வன்னி மக்களும் அவருக்கு வாக்களித்தனர்.
இம்முறை அவர் வருவாரா? எதிர்கட்சித் தலைவர் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பிரசாரத்துக்காக வந்தார்.
இம்முறை வருவாரா?
அவர்களின் வெற்றிக்காக மாத்திரமே அவர்கள் வாக்கு கோருவர். கடந்த ஜனாதிபதி தேர்தலில் வன்னி மாவட்ட மக்கள் 21 ஆயிரம் வாக்குகளை எமக்கு வழங்கினர். தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு அது உதவியது. வன்னி மாவட்டத்தில் தோற்றோம். வன்னி மாட்டத்தில் எதற்காக இனக்குழுக்கள் அடிப்படையில் வாக்குகள் பிரிந்துள்ளன?
முஸ்லிம்களுக்கு முஸ்லிம் கட்சிகள், தமிழர்களுக்கு தமிழ் கட்சிகள் என்ற அடிப்படையில் கட்சிகள் பிரிந்துள்ளன. தமிழ், முஸ்லிம் கட்சிகள் எதிர்கட்சித் தலைவரின் மேடையில் ஏறின. சிலர் முன்னாள் ஜனாதிபதியின் மேடையில் ஏறினர். ஆனால் எந்தவித பேதமும் இன்றி தேசிய மக்கள் சக்தி 21 ஆயிரம் வாக்குகளை பெற்றது. அதுவும் எமது வெற்றியாகும்.
எமது நாடு எல்லா வகையிலும் பிரிந்துள்ளது. இனங்கள் அடிப்படையில் மதங்கள் அடிப்படையில் சாதி பிளவுகளுடன் முன்னோக்கி செல்ல முடியாது. அனைத்து பிரிவினைகளையும் ஒழிக்க வேண்டும். கலாசாரம் மற்றும் இன அடிப்படையில் மக்கள் பிரிந்து செயலாற்றும் நிலைமை மாற வேண்டும்.
அதன் ஆரம்ப கட்டமாக அனைத்து மக்களும் ஒரு கொடியின் கீழ் வர வேண்டும். அரசியல் கட்சி அடிப்படையில். ஒவ்வொரு இனக் கட்சிகளாக பிரிந்து அரசியல் செய்ய முடியாது ஒன்றுபட வேண்டுமாயின் அனைத்து கட்சி உறுப்பினர்களையும் ஒன்றிணைக்க வேண்டும். அதற்கான அமைப்பாகவே தேசிய மக்கள் சக்தி இருக்கிறது. வன்னியில் சில உறுப்பினர்களை நீங்கள் பாராளுமன்றம் அனுப்பினால் அனைத்து மக்களையும் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துவர். இல்லாவிட்டால் முஸ்லிம்கள் முஸ்லிம் கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் கட்சிகளுக்கும் வாக்களிக்கும் போக்கை மாற்ற வேண்டும். அதனை மக்கள் செய்வர் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாம் வெல்வோம் என்ற நம்பிக்கை வடக்கு மக்களுக்கு இருக்கவில்லை.
எமது கட்சி சிங்கள மக்கள் வாழும் பகுதிகளை அடிப்படையாக கொண்டிருந்தமையால் எமது விடயங்கள் மக்களை வந்து சேரவில்லை. தமிழ் மக்கள் பார்க்கும் ஊடகங்களில் எமது கருத்துக்கள் வரவில்லை. அதனால் ஜனாதிபதி தேர்தலில் நாம் வெல்லப்போகும் அமைப்பு என்பது வடக்கு மக்களுக்கு தெரிந்திருக்கவில்லை. எனவே வடக்கு மக்களிடம் புதிய எதிர்ப்பார்ப்புக்கள் வரவில்லை. அதனால் பழையவர்களை தெரிவு செய்தனர்.
தெற்கில் எமது வெற்றி உறுதியாகியிருந்தது. ஆனால் செப்டம்பர் 21 தேசிய மக்கள் சக்தி வென்று நாட்டு மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியது. தேசிய சக்தி என்ற புதிய இயக்கம் வந்தது. ஆனால் இந்த வெற்றியால் வடக்கு மக்களே அதிகமான சந்தோஷப்பட்டனர். மக்கள் விழித்துள்ளனர். தேசிய மக்கள் சக்தி நாட்டை கட்டியெழுப்பக் கூடிய கட்சி என்ற நம்பிக்கை மக்களுக்கு வந்துள்ளது.
ஏனைய கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களும் தாம் வென்ற பின்னர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு செல்வோம் என்றும் கூறும் அளவில் நிலை இருக்கிறது. தேசிய மக்கள் சக்தி மக்கள் நம்பிக்கை வென்ற இயக்கம் என்பதற்கு இதுவே ஆதாரமாகும். ஆட்சியிலிருக்கும் ஜனாதிபதியை வெல்லச் செய்வோம். எதிர்கட்சித் தலைவரை வெல்லச் செய்வோம் என்றே கடந்த தேர்தலில் வாக்கு கோரினர். தேசிய மக்கள் சக்தியில் இணைவோம் என்று சொல்வோருக்கு நாம் ஒன்றை சொல்கிறோம். பஸ் போய்விட்டது! இனி அவர்களுக்கு வாய்ப்பில்லை. இப்போது அனைத்துப் பிரதேசங்களையும் இன மக்களையும் ஒரே இடத்திற்கு கொண்டு வருவதே எமது பொறுப்பாகும்.
திசைக்காட்சியின் வெற்றி என்பது எனது வெற்றியல்ல. இந்நாட்டின் அனைத்து இன மக்களினதும் வெற்றியாகும். மக்களின் வெற்றிக்காக வன்னி மக்கள் எடுக்க வேண்டிய தீர்மானம் தேசிய மக்கள் சக்தியை வெல்லச் செய்வதாகும். நாட்டை அபிவிருத்தி செய்ய தேசிய ஒற்றுமை அவசியம். நாட்டில் எல்லா பகுதி மக்களையும் வென்ற கட்சியின் வெற்றி தேசிய பிரச்சினையில் அரைவாசித் தீர்வை உறுதி செய்வதாக அமையும். ஒவ்வொரு இன மக்களும் ஒவ்வொரு இனக் கட்சிக்கு வாக்களிக்கும் நிலையே முன்பு காணப்பட்டது. ஒவ்வொரு பகுதிகளுக்கும் செல்லும் வேளையில் அப்பகுதியில் வாழும் இன மக்களின் பிரதிநிதிகளை மாத்திரமே கட்சிகள் அனுப்பி வைக்கும்.
ஆனால், தேசிய மக்கள் சக்தி அனைத்து இன மக்களினதும் ஆதரவை பெற்ற கட்சியாக உருவெடுத்துள்ளது. இலங்கை மக்கள் ஒரு குடையின் கீழ் வந்துள்ளனர். அப்படியொரு அரசாங்கத்தில் மற்றைய பிரச்சினைகளை இலகுவாக தீர்க்க முடியும். தெற்கு மக்களுக்கு காணி வழங்கும்போது வடக்கில் எதிர்ப்பு வரும். வடக்கில் எதிர்ப்பு வரும்போது தெற்கில் எதிர்ப்பு வரும். அதனால் பாதுகாப்பின் பேரில் பாதுகாப்பு படையினரால் பெறப்பட்ட வடக்கு மக்களின் காணிகளை மக்களுக்கு வழங்குவோம். யுத்தத்தினால் பெரும் சேதங்கள் ஏற்பட்டன. பலர் அரசியல் கைதிகள் ஆகினர். அவர்களை விடுதலை செய்வோம். அதற்கும் தெற்கில் எதிர்ப்பு வராது. தெற்கில் நடப்பவைக்கு வடக்கிலும் எதிர்ப்பு வராது. அதுவே ஒற்றுமையான நாட்டின் நிலைமையாகும்.
மன்னார் பேசாலையில் பாரிய மீன்பிடித் தொழில் துறை உள்ளது. மற்றைய நாடுகளிருந்து வருவோர் அந்த மீன் வளத்தை சூறையாடுகின்றனர். மீன் வளம் அழிகிறது. எனவே எமது மக்களின் மீன்பிடி உரிமையை பாதுகாக்க வடக்கு மீனவர்களின் பாதுகாப்புக்கான சகல நடவடிக்கைகளையும் எடுப்போம். அதனை நாம் செய்யாவிட்டால் தெற்கு அரசாங்கம் வடக்கு மக்களை கண்டுகொள்வதில்லை என்ற நிலைப்பாடு உருவாகும். முன்னைய ஆட்சிகளில் பல்வேறு நிறுவனங்களுடன் அழிவுமிக்க ஒப்பந்தங்கள் கைசாத்திடப்பட்டுள்ளன. சூரிய சக்தி எமக்கிருக்கும் மிகப்பெரிய வலுவாகும். சூரிய கதிர்கள் அனைத்து பொருட்களுக்கும் மூலமாகும். அதனால் இன்று மின்சாரம் உற்பத்தி செய்ய முடிகிறது. அந்த வளத்தை சொற்ப விலைக்கு விற்க மாட்டோம். அதனை மக்கள் எதிர்காலத்துக்காக பயன்படுத்துவோம். ஒப்பந்தங்களும் மீளாய்வு செய்ய முடியும்.
வடக்கில் அரசியல் பிரச்சினைகள் உள்ளன. மக்களுக்கு குடிநீர் பிரச்சினைகளும் உள்ளன. அதனை நிவர்த்திக்க நீர்வழங்கல் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இரணைமடு குளத்தை தண்ணீரால் நிரப்ப முடியும். அங்குள்ள அரசியல்வாதிகள் அதனை விரும்பவில்லை. தெற்கிலும் அதற்கு எதிர்ப்பு உள்ளது. அது நியாயமானது அல்ல. எமது மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நாம் நடவடிக்கை எடுப்போம். எமது மக்களின் விவசாய தேவைகளை நாமே பூர்த்தி செய்ய வேண்டும். தற்போதும் அதற்காக உர மானியம் வழங்குகிறோம்.
ஓய்வூதிய கொடுப்பனவை 3000 ரூபாவால் அதிகரித்திருக்கிறோம். அரச ஊழியர்களுக்கு முதல் பட்ஜட்டில் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும். அநீதியாக அஸ்வெசும நிவாரணத்தை இழந்தவர்களுக்கு அதனை பெற்றுக்கொடுப்போம். கல்வி வசதியின்றி இருக்கும் பிள்ளைகளுக்கு கல்வி தேவைக்கான பொருட்களை கொள்வனவு செய்ய அடுத்த வருடம் ஜனவரி 27 ஆம் திகதிக்கு முன்னர் விசேட கொடுப்பனவு வழங்கப்படும். ஆனால் மக்கள் தொடர்ந்தும் நிவாரணங்களில் தங்கியிருக்க கூடாது. அவர்களுக்கு பொருளாதார வழிமுறைகளை உருவாக்க வேண்டும். கிராமிய மக்களின் வறுமையை போக்க வேண்டும். தனிப்பட்ட வகையில் வறுமையின் கஷ்டத்தை நானும் அறிவேன்.
முகத்தில் சிரிப்பு இல்லாமல் மக்கள் வாழும் வாழ்க்கையின் அர்த்தம் என்ன? ஆனால் முன்னைய ஆட்சியாளர்களுக்கு வறுமை நீடிக்க வேண்டும் என்ற தேவையே இருந்தது. தேர்தல் வரும்போது அரிசி வழங்கி வாக்கு சேகரித்தனர். மலசலகூட பொருட்களை வழங்கி வாக்கு சேகரித்தனர். கூரைத்தகடு வழங்கி வாக்கு கேட்டனர். அவர்களது அதிகாரத்தின் இரகசியமாக வறுமையே காணப்பட்டது. அதனால் வறுமையை ஒழிக்கும் தேவை அவர்களுக்கு இருக்கவில்லை. தேசிய மக்கள் சக்தி மக்களின் வறுமையை ஒழிக்கும். நாம் வறுமையின் கஷ்டத்தை அறிந்தவர்கள் என்ற வகையில் அதனை நாம் செய்யாவிட்டால் யார் செய்வார்கள்?
கிராமிய வறுமை மற்றும் தரமான கல்வி கிடைக்காமை போன்ற கஷ்டங்களினால் மக்கள் பெரும் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கிறார்கள். சட்டவிரோத போதைப்பொருள் பரவலுக்கும் அதுவே காரணமாகும். போதைக்கு அடிமையான பிள்ளைகள் வீட்டடிலிருந்தால் அந்த சமூகமே அழிவை சந்திக்கும். போதைப்பொருள் இல்லாத இலங்கையை நாம் உருவாக்குவோம். போதைப்பொருட்கள் வெளிநாடுகளில் இருந்தே வருகின்றன. மன்னார் - வெலிகம பகுதிகளூடாக நாட்டுக்குள் வருகிறது. அவை அனைத்தும் முடக்கப்படும். பிள்ளைகள் பற்றி பெற்றோருக்கு சந்தேகம் இல்லாத நாட்டை உருவாக்குவோம். பெற்றோரின் வறுமை பிள்ளைகளின் கல்வியை பாதிக்கும். அதலிருந்து மீட்க கல்வியை சிறப்பாக வழங்க வேண்டும். கிராமங்களுக்குள் கல்வி பெற்றவர்கள் வறுமையிலிருந்து மீண்டு வந்திருப்பதை காண முடியும். எனவே வறுமை ஒழிப்புக்கு கல்வியே ஆதாரமாகும்.
வறுமையான பெற்றோரை கஷ்டத்திலிருந்து மீட்கும் சவாலை வெல்வோம். அரச சேவையை பாதுகாப்போம். கோப்புகள் நிறைந்த அலுவலகங்கள் பழைய யுகத்துக்கானவையாகும். இன்று அனைத்து சேவைகளையும் வீட்டிலிருந்து பெறக்கூடிய வகையில் உலக நடைமுறை மாறியுள்ளது. நாம் இன்றும் 5000 ரூபாவைப் பெற்றுக்கொள்ள வரிசையில் நிற்கிறோம். புதிய அரச சேவையை உருவாக்கி நாட்டின் அபிவிருத்தியை உயர்த்தி வைப்போம்.
இதுவரையில் இலங்கையில் சேனாநாயக்க, பண்டாரநாயக்க, பிரேமதாச, விஜேவர்தன, விக்ரமசிங்க, ராஜபக்ஷ குடும்பத்தார் கைகளிலேயே ஆட்சிகள் இருந்தன. கடந்த காலங்களில் தந்தை, மகன், மாமா, மருமகன், சித்தப்பாக்களின் கைகளுக்கே ஆட்சி அதிகாரம் கைமாறியது. செப்டம்பர் 21 ஆம் திகதி குடும்ப கூட்டுத்தாபனத்திலிருந்து ஆட்சி கைமாறியது. அவர்களால் அதனை தாங்கிக்கொள்ள முடியவில்லை. வேதனையில் மூன்று கிழமையில், மூன்று மாதத்தில் அல்லது ஒரு வருடத்தில் ஆட்சியை கவிழ்ப்போம் என்று கூறுகிறார்கள். ஆனால் நாங்கள் நாட்டை மீட்ட பின்பே திரும்பிப் பார்ப்போம்.
ஆட்சியை வீழ்த்த நினைப்பவர்கள் ஜனாதிபதி தேர்தலில் பெற்றதை விடவும் ஒரு வாக்கு அதிமாக பெற்றுக் காட்டுங்கள். நாம் ஜனாதிபதி தேர்தலை விடவும் அதிக வாக்குகளை பெறுவோம். ஜனாதிபதி தேர்தலில் 21 ஆயிரம் வாக்குகளை மட்டுமே வன்னியிலிருந்து பெற்றோம். பாராளுமன்ற தேர்தலில் எம்மை வீழ்த்த முடியுமா? தோல்வி மனவேதனையில் அவர்கள் ஆட்சி சரியும் என்று சொல்கிறார்கள். பல தசாப்தங்களாக அதனை சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய நிலைமை அவர்களுக்கு வரும். வீண் விரயத்தால் நிரம்பியிருந்த பாராளுமன்றத்தை, சபைக்குள் சண்டைப்போடுவோர் இருந்த பாராளுமன்றத்தை, அங்கும் இங்கும் தாவும் அநாகரிகமான பாராளுமன்ற கலாசாரத்தை நவம்பர் 14 ஆம் திகதி தூய்மைப்படுத்துவோம். சிரமதானம் செய்து, புதியவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புங்கள். புதிய நாட்டை அமைப்போம். அதற்காக பாடுபடுவோம். இம்முறை நாம் பெறப்போகும் வெற்றி மற்றைவர்கள் கண் கலங்கும் வகையில் அமைய வேண்டும். வன்னியில் ஆயிரக்கணக்கான மக்கள் எம்மை நம்புகிறார்கள். மோசடி, போதைப்பொருள், வறுமை, விரயமற்ற நாடாகவும் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் நாடாகவும் இலங்கையை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுபடுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக