செவ்வாய், 13 ஏப்ரல், 2010

வடிவேலு தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டால் மன்னிக்க தயாராக இருக்கிறேன், நடிகர் சிங்கமுத்து


என் மீது பொய் புகார் கொடுத்து என்னை ஜெயிலில் தள்ள முயற்சிக்கும் நடிகர் வடிவேலு தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டால் மன்னிக்க தயாராக இருக்கிறேன், என்று நடிகர் சிங்கமுத்து கூறியுள்ளார். ஒரு காலத்தில் உயிருக்கு உயிரான நண்பர்களாக இருந்த காமெடி நடிகர்கள் வடிவேலுவும், சிங்கமுத்துவும் நிலமோசடி புகார் காரணமாக பரம எதிரிகளாகி ஒருவரை ஒருவர் திட்டித் தீர்த்துக் கொள்வதுடன், மாறி மாறி புகார்களையும் கொடுத்து வருகிறார்கள். வடிவேலு கொடுத்த நிலமோசடி புகாரில் சிங்கமுத்து முன்ஜாமீன் பெற்றிருக்கும் நிலையில், சினிமா தயாரிப்பாளர் கண்ணன் என்பவர் ஒரு புகார் கொடுத்தார். அதில், தனது வீட்டில் 10 பேர் கொண்ட கும்பல் புகுந்து தனது மாமனார் உள்பட வீட்டில் இருந்தவர்களை தாக்கி விட்டு ஓடி விட்டனர். சிங்கமுத்துவை வைத்து படம் எடுப்பதால், வடிவேலுவின் ஆட்கள் அடிக்கடி கொலை மிரட்டல் விடுக்கிறார்கள் என்று புகார் மனுவில் கூறி இருந்தார். இது தொடர்பாக 9 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் வடிவேலுவின் உதவி மானேஜர் சங்கர் என்பவரும் அதிரடியாக ஒரு புகார் மனுவை விருகம்பாக்கம் போலீசில் கொடுத்தார். அந்த புகார் மனுவில், சிங்கமுத்து தூண்டுதலின் பேரில் சினிமா தயாரிப்பாளர் கண்ணன் தனது ஆட்களுடன் வந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார் என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் சிங்கமுத்து, தயாரிப்பாளர் கண்ணன் உள்ளிட்ட 10‌ பேர் மீது ‌கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் சிங்கமுத்து கைது செய்யப்படுவார் என கூறப்பட்ட நிலையில் சிங்கமுத்து அதிரடி பேட்டியளித்து மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளார். அவர் கூறுகையில், வடிவேலு என் மீது பொய் புகார் கொடுத்து இருக்கிறார். என் மீது அவர் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறவைப்பதற்காக நான் மிரட்டுவதாக அவர் பொய் சொல்கிறார். அவர் என் மீது அடிக்கடி பொய் புகார் கொடுப்பதால் என் மனைவி, மகன் ஆகியோருக்கு மிகுந்த மன உளைச்சளை ஏற்படுத்துகிறார். என்னை ஒரு மோசடி பேர்வழி மாதிரி சித்தரிக்கிறார். வடிவேலுவை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்தவன், நான். ஆனால், அவர் என் தொழிலை கெடுக்க முயற்சிக்கிறார். என் மீது நில மோசடி செய்ததாக பொய் புகார் கொடுத்து, என் நிம்மதியை கெடுத்து விட்டார். அவருக்கு ஆதரவாக பல பெரிய ஆட்கள் இருப்பதாக கூறுகிறார். அந்த பெரிய ஆட்கள் யார் என்று எனக்கு தெரியாது. அந்த பெரிய ஆட்கள் எங்கள் விவகாரத்தில் தலையிட்டு பிரச்சினைகளை தீர்த்துவைக்க முன்வந்தால், நான் சமாதானமாக போக தயார். ஆனால், வடிவேல் வருத்தம் தெரிவிக்க வேண்டும். சிங்கமுத்துவை தவறாக புரிந்துகொண்டு புகார் கொடுத்து விட்டேன் என்று அவர் வருத்தம் தெரிவித்தால், அவரை நான் மன்னிக்க தயார். நான் தேவாரம், திருவாசகம் சொற்பொழிவு ஆற்றுகிற ஆன்மிகவாதி. அடுத்தவர்களை கெடுக்க தெரியாது. பொய் புகார் கொடுப்பது, என் ரத்தத்தில் இல்லை. வடிவேலுவின் பொய் புகாரால் ஒருவேளை எனக்கு தண்டனை கிடைத்தால், அந்த பாவம் அவரையும், அவருடைய பரம்பரையையும் சும்மா விடாது, என்றார்.

கருத்துகள் இல்லை: