செவ்வாய், 13 ஏப்ரல், 2010

் சாதிக்க முடியாததை அழகிரி மிக சுலபமாக சாதித்துவிடுவார்



அரசியலில் பெரிதாக வளர நினைக்கும் தலைவர்கள், இனி மேல் அரசாங்க அதிகாரத்தில் இருந்துகொண்டு மற்றவர்களுக்குப் போதிக்கும் குடும்பக் கட்டுப்பாட்டைத் தங்கள் குடும்பத்தில் முதலில் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. மூன்று மனைவிகள், நான்கு மகன்கள், இரண்டு மகள்கள் கொண்ட தி.மு.க. தலைவர், அரசியல் பாகப் பிரிவினைக்காகப் படும் பாட்டைப் பார்க்கும்போது ஒரே ஒரு மகன் அல்லது மகள் கொண்ட அரசியல் தலைவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்பது புரிகிறது. நேருவின் குடும்பத்தைப் போல ஒரு வாரிசுக்குப் பிறகு ரிசர்வ் ஆட்டக்காரர்களாக இருக்கும் மற்றொரு வாரிசு களத்தில் இறங்கும் கட்டுப்பாடு இங்கு இல்லை. மகன், இன்னொரு மகன், மகள், பேரன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரைக் கருணாநிதி அரசியல் களத்தில் இறக்கியது, வரலாற்றைத் திரும்பிப் பார்க்கையில் பெரிய தவறாகத் தெரிகிறது. தி.மு.க/வை தோற்றுவித்தபோது தலைவர்களின் தர வரிசையில் வெகு கீழே இருந்ததாகச் சொல்லப்படும் மு.க., அதன் தலைமைப் பொறுப்பிற்கு வந்து, 13 வருட அரசியல் வனவாசத்திலும் கட்டிக் காத்த இயக்கம் இன்று சொந்த மகன்களால் சிதறும் அச்சுறுத்தல் உருவாகி உள்ளது.

உண்மையில் கருணாநிதி தனது குடும்பத்திலிருந்து அரசியலுக்குக் கொண்டு வர நினைத்தது ஒரே ஒரு வாரிசைத்தான். மு.க.ஸ்டாலின் மட்டுமே அவரது 54 வருட தீவிர அரசியல் வாழ்வின் கணிசமான காலகட்டங்களில் அவரது அரசியல் வாரிசாகத் திகழ்ந்தார். மற்றவர்கள் போல் அல்லாது தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்து, அடி உதை வாங்கிய போதுகூட தீவிர அரசியலில் இருந்தவர் ஸ்டாலின். அதற்கு மாறாக, மூன்று வருடங்களுக்கு முன்பு வரை கனிமொழி வெறும் கவிஞர் மட்டுமே. அரசியல் வாய்ப்பென்ன, கருணாநிதியின் மகள் என்ற அங்கீகாரமே குடும்பத்திற்குள் கொடுக்கப்படாத காலம் ஒன்று உண்டு. அழகிரி விஷயத்திலும் வெறொரு விதத்தில் அது பொருந்தும். கட்சித் தலைவர் பதவிக்கே சவால் விடக்கூடிய அளவுக்கு அவரின் செல்வாக்கு வளர்ந்தது கடந்த இரு வருடங்களில்தான். 2000ஆம் ஆண்டில் அவர் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டார். கட்சியினர் யாரும் அவருடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என அறிவிப்பு வெளியிடப்பட்டது. 1970களில் மதுரைக்கு "விரட்டப்பட்ட" பிறகு 1990கள் வரை கருணாநிதியின் மகன் என்ற அடையாளமே இல்லாமல்தான் அவர் மதுரையில் வாழ்ந்திருக்கிறார். அவருக்குக் கட்சிக்குள் முறையான பொறுப்பு கொடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள்கூட ஆகவில்லை. தயாநிதி மாறனை கருணாநிதியின் வாரிசு என்று அல்லாமல் முரசொலி மாறனின் வாரிசு என்றே வகைப்படுத்த வேண்டியிருக்கிறது. அப்படிப் பார்க்கையில் கருணாநிதி விரும்பியது இரண்டே வாரிசுகள்தான். தனது வாரிசாக ஸ்டாலின், முரசொலி மாறன் வாரிசாக தயாநிதி. தனது மகன்கள் மீது அரசியல் காற்றுகூடப் படக்கூடாது என்று நினைத்த முரசொலி மாறன், அவர்களைத் தான் சாகும்வரை பிசினஸ்மேன்களாக மட்டுமே வைத்திருந்தார் (பிசினஸ் வளர்ச்சிக்காக அரசியல் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது வேறு கதை). முரசொலி மாறன் இறந்த பிறகு கருணாநிதிதான் தயாநிதியை அரசியலுக்கு வரவழைத்தார். தான் விரும்பி அழைத்தவர்களுக்கு மாறாக, மற்றவர்கள் நிர்ப்பந்தம் ஏற்படுத்தி உள்ளே நுழைந்தார்கள்.

அழகிரியைச் சுற்றி உருவான கோஷ்டியை உதாசீனப்படுத்தும் தொடர்ச்சியான முயற்சிகள் தோற்றதால் அவருக்கு ஒரு இடம் கொடுக்க வேண்டியதானது. 2000ஆம் ஆண்டில் அழகிரி கட்சியிலிருந்து நீக்கப்படுகிறார். 2001 பொதுத் தேர்தலில் தி.மு.க தோற்கிறது. அழகிரி கோஷ்டியின் ஒத்துழையாமை ஒரு சில தொகுதிகளில் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தியது என்றாலும் அதற்கும் இதற்கும் நேரடியாக முடிச்சுப் போடப்பட்டது. அதனால் கட்சி விசுவாசியும் மூத்த தலைவரும் கலைஞரின் மனசாட்சி என்று அழைக்கப்பட்டவருமான தா.கிருட்டிணன் கொலையில் அழகிரியின் ஆட்களுக்குத் தொடர்பிருக்கிறது என்ற குற்றச்சாட்டாலும் அவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கவில்லை (பிற்பாடு ஆந்திராவைச் சேர்ந்த ஒரு மாஜிஸ்திரேட் அழகிரியின் குற்றத்தை நிரூபிக்கப் போதிய ஆதாரமில்லை என்று விடுவித்தது வேறு கதை). கனிமொழி விஷயத்தில் அவரின் தாயார் ஏற்படுத்திய நிர்ப்பந்தம் பலன் கொடுத்தது. இந்த இரண்டுமே கருணாநிதியின் முதுமையில் நிகழ்ந்த, அவர் விரும்பாத மாற்றமா? அவர் திடகாத்திரமாக இருந்தபோது இவர்களுக்கு அரசியலில் இடமே கொடுக்காததைப் பார்க்கும்போது இவ்வாறு தோன்றுகிறது: ஒன்று, அவரின் முதுமையைப் பயன்படுத்திக்கொண்டு அவரை அவர்கள் தங்களுக்குச் சாதகமாக வளைத்திருக்க வேண்டும் அல்லது தனது அந்திமக் காலத்தில் தனது அரசியல் பாத்தியதையைத் தனது பிள்ளைகளுக்குப் பிரித்துக் கொடுக்க நினைத்திருக்க வேண்டும். தற்போது அழகிரி எவ்வளவோ குடைச்சலைக் கொடுத்தாலும் கருணாநிதி தொடர்ந்து ஸ்டாலின் ஆதரவு கருத்தையே கூறி வருவது அந்த முதல் கருத்தே உண்மையாக இருந்திருக்கக்கூடும் என உணர்த்துகிறது.

1957ல் முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆகிறார் கருணாநிதி. 1969ல் முதல்வராகி விடுகிறார். அதற்குப் பிறகு 2007 வரை அழகிரிக்கும் கனிமொழிக்கும் அரசியலில் எந்தப் பெரிய முக்கியத்துவமும் தரப்படவில்லை. ஆனால் அதற்குப் பிறகான குறுகிய காலத்தில் மாற்றம் வேகமாக நடக்கிறது; அழகிரியின் மகள் கயல்விழிகூட அடுத்த மாநிலங்கள் அவை எம்.பி. ஆகிவிடுவாரோ என்ற அச்சம் ஏற்படும் அளவுக்கு. இந்தியாவில் வேறு எந்த வாரிசு அரசியல் குடும்பத்திலும் இப்படிப்பட்ட காட்சியைக் காணமுடியாது. காஷ்மீரில் முஃப்தி முகமது சயீத்திற்குப் பல மகள்கள் இருந்தாலும் ஒரே ஒரு மகள் மட்டுமே அரசியலுக்கு வந்திருக்கிறார். பால் தாக்கரேவுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் இருந்தாலும் உத்தவ் தாக்கரே மட்டுமே தீவிர அரசியலில் இருக்கிறார். லாலூ தான் இல்லாத இடத்தில்தான் ராப்ரியை அமர்த்தினார். பிறகு மீண்டும் அடுப்படிக்கே திருப்பி அனுப்பினார். தனது மனைவியின் தம்பி சாது யாதவ் இப்போது அழகிரி செய்வது போல பிரச்சினை கொடுத்தபோது, வாலை ஒட்ட நறுக்கினார் (அய்யா காங்கிரசுக்குத் தாவி தேர்தலில் மண்ணைக் கவ்வினார்). அப்போது லாலூ சொன்ன கருத்து சுவாரசியமானது: "நான்தான் இங்கு மின்சார உற்பத்தி மையம். அவன் வெறும் டிரான்ஸ்பார்மர். நான் powerஐ நிறுத்தினால், அவன் powerless ஆகிவிடுவான்." கருணாநிதி மனது வைத்தாலும் அழகிரிக்கு அதே கதி நேரக்கூடும். ஆனால் கடந்த பத்தாண்டுகளில் அவர் கொடுத்த இடத்தால் அழகிரி தனது கோஷ்டியை சற்று வலுப்படுத்திக் கொண்டுவிட்டதால் ஆணிவேரோடு பிடுங்க கூடுதல் மனஉறுதி தேவை.


நன்றி: உயிர்மை
         

கருத்துகள் இல்லை: