வெள்ளி, 30 ஏப்ரல், 2010

மகேஸ்வரி நிதியத்தை முடக்கும் முயற்சிகளை முறியடிப்போம் !

மகேஸ்வரி நிதியமானது, இலங்கை பாராளுமன்றத்தினால் அங்கீகாரமளிக்கப்பட்டு, அங்கவீனமுறற்ற ஆட்களுக்கான தேசிய சபையினாலும் சட்டபூர்வ நிறுவனமாக அங்கீகாரம் பெற்ற, அபிவிருத்தி முயற்சிகளுக்கு உதவி செய்யும் உன்னத நோக்கத்துடன் தொடங்கப்பட்ட ஒரு தொண்டு நிறுவனமாகும். இது, ஏழை எழிய மக்கள் சிறிது சிறிதாக சேமித்த பணத்தையும், ஓய்வூதியர்கள் தமது இறுதிகாலத்திற்கென ஒதுக்கிவைத்த தொகையையும், எம்மிடம் சேமிப்பில் இடுங்கள் என ஏமாற்றிப்பெற்று, முழுத்தொகையையும் ஏப்பமிடும் எண்ணத்துடன் தொடங்கப்பட்ட ஒரு தனியார் மோசடி நிதி நிறுவனம் அல்ல. மகேஸ்வரி நிதியம் நேர்மையான ஒரு தொண்டு நிறுவனம் என்பதை அது செய்யும் பொது தொண்டுகள் நிரூபித்து வருகின்றன்.
இந்நிலையில், மகேஸ்வரி நிதியத்தை முடக்கும் முயற்சியொன்றை ‘உதயன்’, ‘சுடரொளி’ பத்திரிகை நிறுவன இயக்குனரும், தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான திரு சரவணபவான் அவர்கள் தொடங்கியுள்ளதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
கேள்விக்குரிய நடத்தையுள்ள, சப்றா நிதி நிறுவனத்தின் இந்த முன்னாள் முகாமையாளரின் சேறடிக்கும் இம் முயற்சிகளாலும், இவரின் ஆதாரமற்ற அவதூறுகளாலும் எமது நிறுவனத்திற்கு ஏற்பட்ட மானநட்டத்திற்கு நாம் முறைப்படி நீதிமன்றில் முறையிட உள்ளோம். எனினும், பொதுமக்கள் நலனில் அக்கறையுள்ளவன் என்ற பொய்யான தோற்றமொன்றை ஏற்படுத்துவதற்காக பொறுப்பற்ற முறையில் வெளிவிடப்படும் இன்னாரின் பத்திரிகை அறிக்கைகளால்  பொதுமக்கள் மத்தியில் எமது நிறுவனத்திற்குள்ள நற்பெயருக்கு ஏற்படவிருக்கும் களங்கத்தை களைவதற்காக நாம் சில விடயங்களை பொதுமக்களுக்கு தெளிவாக்க விரும்கிறோம்.
மகேஸ்வரி நிதியமானது, சட்டபூர்வமான, சுதந்திரமான ஓரு தொண்டு நிறுவனமாகும். அத்துடன் அது ஆயுதத்தடன் அரசியல் செய்யும் ஒரு குழுவுமல்ல. இது இதுவரையில் செய்த அபிவிருத்தி முயற்சிகளுக்கான உதவிகள் அனைத்தும் பத்திரிகை வாயிலாகவும் பொதுமக்களின் பார்வைக்கு பகிரங்கப்படுத்தப்பட்டவை. இந் நிறுவனமானது தனது தொண்டுகளை புரிவதற்கு உரிய நிதியினை நன்கொடைகள் மூலமும், நிதியீட்டும் வழிமுறைகள் வழியிலும் சட்டபூர்வமாகவே பெற்றுக்கொள்கிறது. மணல் விற்பனை செய்யும் உரிமமும், அதன் மூலம் வரும் வருவாயும் இச் சட்டபூர்வ வகையிலேயே பெறப்பட்டது. மணல் விற்பனை செயற்பாடுகள் மகேஸ்வரி நிதியத்தினால் சுதந்திரமாகவே செயற்படுத்தப்படுகிறது என்பதுடன் உதயன் பத்திரிகையில் வெளிவந்த அவதூறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டதைப்போல எந்தவொரு அரசியற் கட்சியும் எமது நிறுவனத்தின் பெயரில் ஒழிந்துகொண்டு மணல் விநியோகத்தை தமது கட்டுப்பாட்டில் கொண்டிருக்கவில்லை. இத்துடன் மணல் விநியோகம் மூலம் மகேஸ்வரி நிதியத்திற்குவரும் பணம், அதில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியத்தைத் தவிர்த்து, பொது வேலைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
மணல் விநியோகத்தில் தற்போது ஏற்பட்டுவரும் கால தாமதமும், இதனால் பொது மக்களுக்கு ஏற்படும் கஸ்டங்களும் எமக்கும் மிகுந்த கவலையளிப்பனவாகும். இதற்கு, கட்டிட நிர்மாணப் பணிகள் வட பகுதியில் பெருகிவருவது பிரதானமான ஒரு காரணமாகும். முன்னர்  யாழ். செயலகத்தினால் மணல் அனுமதி வழங்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தபோது, யாழ்ப்பாணத்தில் கட்டிட நிர்மாணப்பணிகள் இதுபோல பெருமளவில் முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கவில்லை. 
யுத்தம் முடிவடைந்து, யாழ்ப்பாணம் இயல்புநிலைக்குத் திரும்பி, கட்டிட நிர்மாண வேலைகள் அதிகளவில் அதிகரிக்கத்தொடங்கியபொழுது, புவிச் சரிதவியல் அளவைகள் சுரங்கங்கள் பணியகமானது யாழ்பபாணத்தில் தமது அலுவலகமொன்றை திறந்து சுற்றுச் சூழலினை ஆராய்ச்சி செய்து, எப் பிரதேசத்தில் மணல் அகழ முடியும் எனவும் எவ்வாறான ஒழுங்கமைப்பில் மண் அகழப்பட வேண்டுமெனவும் கணிப்பீடு செய்து மணலினை அகழ்வதற்கு அனுமதி வழங்கும் பொறுப்பினை எடுத்துக்கொண்டது. இதனால் கிராம அலுவலர்இ பிரதேச செயலர் என்பவர்களின் அனுமதியுடன் புவிச்சரிதவியல் அளவைகள் சுரங்கங்கள் பணியகத்திலும் அனுமதி பெற்றபின்னரே பாரவூர்திகளிடம் அனுமதி பத்திரத்தினை வழங்குவதன் மூலம் பயனாளிகள் மணலினை பெற்றுக்கொள்ளும் நிலை நடைமுறையிலிருந்து வருகிறது. இந் நீண்ட நடைமுறை சட்டப்படியாக அமுலில் இருப்பதும், இலங்கை ராணுவத்தினர் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையான பாரவூர்திகளையே தினமும் மணல் ஏற்ற அனுமதிப்பதும், மணல் பெற்றுக்கொள்வதில் தற்போது பொது மக்கள் எதிர்நோக்கும் கால தாமதத்திற்கான இதர கராணங்களாகும்.
பயனாளியொருவர் பிரதேச செயலகத்தில் மணல்கொள்ள அனுமதி பெறும் பொழுது, எமது நிலையத்திற்குச் செல்லும் திகதியும் தொடரிலக்கமும் பிரதேச செயலகத்தினராலேயே குறிப்பிடப்படுகின்றது. இதற்கமைவாக தினமும் 100 பயனாளிகள் எமது நிதியத்திற்கு வருகை தரும் வகையில் பிரதேச செயலர்களினால் தொடரிலக்கம் வழங்கப்படுகிறது. இவர்களுடன் கட்டட ஒப்பந்ததாரர்கள் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பவற்றிற்கென தினமும் 20 பேருடன் சேர்த்து நாள் ஒன்றிற்கு 120 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகின்றது.
தற்போது, மணலின் தேவைகள் அதிகரித்துள்ள நிலைமையை கவனத்திலெடுத்து, நாம் கடந்த மாதம் சுமார் 150 பயனாளிகளுக்கு தினமும் அனுமதியினை அளித்திருந்தோம். ஆ+னால் புவிச் சரிதவியல் அளவைகள் சுரங்கங்கள் பணியகம் ஆளணி பற்றாக்குறைவால் இவற்றுள் 85 அனுமதிகளுக்கே ஒப்புதல் வழங்கியிருந்தனர். இதனால், கடந்த மாதம் - தினமும் 65 அனுமதிப்பத்திரங்கள் என்றவகையில் - சுமார் 1500 அனுமதிப்பத்திரங்கள் எமது அலுவலகத்தில் தேங்கியிருக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது.
இதன் பின்னர் எமது தொடர்ந்த கோரிக்கைகளின் விளைவாக புவிச் சரிதவியல் அளவைகள் சுரங்கங்கள் பணியகம் ஆளணியினை அதிகரித்து தினமும் சராசரியாக 130 பயனாளிகளுக்கு அனுமதியினை வழங்கத்தொடங்கியிருந்தது. ஆனால், தற்போது, தினமும் 175 பாரவூர்திகளே குடத்தனையிலிருந்து மணல் ஏற்றிவருவதற்காக இராணுவத்தினரால் அனுமதிக்கப்பட்டுவருவதால் பயனாளிகள் காலக்கிரமத்தில் மணல் பெற்றுக்கொள்வதில் தொடர்ந்து சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது.  ஒரு அனுமதிப்பத்திரத்தில் சராசரியாக 3 தடவைகள் மணல் ஏற்ற வேண்டி இருப்பதால், தினமும் பாரவூர்தி சங்கத்திற்கு நாம் வழங்கும் 130 பத்திரத்தின் மூலம் 390 தடவைகள் குடத்தனைக்கு வாகனங்கள் சென்று வர வேண்டியுள்ளது. ஆனால் 175 தடவைகளே பாரவூர்திகள் சென்று வர அனுமதி உள்ளதால், எம்மால் மணல்கொள்ள அனுமதி வழங்கப்பட்ட மிகுதிப் பத்திரங்கள் பாரவூர்தி சங்கத்தில் தேங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்படி தற்போது 700 இற்கு மேற்பட்ட அனுமதி வழங்கப்பட்ட பத்திரங்கள் பாரவூர்திகள் சங்கத்தில் தேங்கி கிடப்பதாக நாம் அறிகிறோம்.
இதனுடன், பாரவூர்திகள் உரிமையாளர்களின் ஒழு;கீனங்களாலும் பல இடையூறுகள் ஏற்படுகின்றன. மணல் ஏற்றும் சேவையில் ஈடுபடுவதற்கென பாரவூர்திகள் சங்கத்தினால் அனுமதி அளிக்கப்பட்ட சில வாகனங்கள், அனுமதிப்பத்திரங்கள் கிடைத்த பின்னர் வெளிமாவட்டங்களுக்கு வேறு வேலைகளுக்கேன சென்று நேரகாலத்தில் மணல்கொள்வனவு செய்ய தவறுவதாகவும், தமக்கு தேவையானவர்களுக்கு மணலினை வழங்குவதில் முன்னுரிமை அளிப்பதாகவும் எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அத்துடன், இவற்றினை சீர் செய்ய வேண்டிய பாரவூர்திகள் சங்க நிர்வாகிகள் சிலர், சில அரசியல் பின்னணிகள் மற்றும் வியாபார போட்டிகள் காரணமாக பல்வேறு குழப்பங்களை உண்டுபண்ணி மணல் ஏற்றுவதில் காலதாமதம் ஏற்படுத்துவதாகவும் நாம் அறிகிறோம்.
மண் விநியோகத்தில் பொறுப்புடையவர்களாக மகேஸ்வரி நிதியம், புவிச் சரிதவியல் அளவைகள் சுரங்கங்கள் பணியகம், யாழ், மாவட்ட பாரவூர்திகள் சங்கம், வடமராட்சி மணல் ஏற்றும் பாரவூர்தி உரிமையாளர் சங்கம், வடமராட்சி கிழக்கு மணல் ஏற்றும் உழவு இயந்திர சங்கம், மணல் ஏற்றும் ஊழியர் சங்கம் மற்றும் இலங்கை இராணுவம் போன்ற பல தரப்புகள் பங்காளிகளாக உள்ள நிலைமையை அனைவரும் புரிந்து கொள்வது அவசியம். மேலே கோடிட்டுக்காட்டப்பட்டுள்ள பல்வேறு காரணங்களால் பயனாளிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளை நாம் இலகுவாக எடுத்துக்கொள்ளவில்லை. குறுகிய அரசியல் லாபங்களுக்காக, பொறுப்பற்ற விதத்தில் கோமாளித்தனமான பத்திரிகை அறிக்கைளை பிரசுரிக்காமல், பொதுமக்கள் நலனை முன்னிறுத்தி பொறுப்புடன் செயலாற்ற வேண்டியதே இவ்விடயத்தில் ஏற்படும் காலவிரயத்தை சீர்செய்யும் நடவடிக்கையாக அமையும்.
- மகேஸ்வரி நிதியம், யாழ்ப்பாணம

கருத்துகள் இல்லை: