செவ்வாய், 18 மார்ச், 2025

ஜாஹீர் உசேன் கொலை - ஓய்வுபெற்ற காவல் அதிகாரி - ஸ்டாலினுக்கு எதிராக குவியும் கண்டனம்!

 மின்னம்பலம் - christopher :  ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாஹீர் உசேன் கொலையில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட அரசியல் தலைவர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.
முன்னாள் முதல்வர் கலைஞரின் தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் எஸ்.ஐ ஜாஹீர் உசேன். நெல்லை டவுன் தடிவீரன் கோயில் தெருவில் வசித்து வந்தார்.
ரம்ஜான் நோன்பு இருந்து வரும் அவர், இன்று (மார்ச் 18) அதிகாலை அப்பகுதியில் உள்ள தர்காவுக்கு தொழுகை நடத்தச் சென்றார். தொழுகை முடித்து தெற்கு மவுண்ட் ரோடு பகுதி வழியாக வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும்போது, அவரை வழிமறித்த கும்பல், ஜாஹீர் உசேனை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.



இந்த கொலை வழக்கில் குற்றவாளிகள் தேடப்பட்டு வந்த நிலையில், நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த அக்பர் ஷா மற்றும் தச்சநல்லூர் பால் கட்டளை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ஆகிய இருவர் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு முன்னதாக, தனது உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக ஜாகீர் உசேன் வீடியோ வெளியிட்டிருந்தார். இதுதொடர்பாக தான் அளித்த புகாருக்கு, நடவடிக்கை இல்லை எனவும், தனக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் அவர் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று காலையில் நடந்த இந்த கொலை சம்பவத்திற்கு எதிர்க்கட்சி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலியில் அதிகாலை தொழுகை முடித்துவந்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாஹீர் உசேன், மர்மநபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

அதே போல், நேற்று கோட்டூர்புரத்தில் ரவுடிகளுக்கு இடையிலான தகராறில் இரட்டைக் கொலை நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன.

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் அவல நிலை குறித்து நான் விளக்க வேண்டிய அவசியமே இல்லை. ஊடகங்கள் மைக்கை நீட்டினால் மக்களே “உரிய மரியாதையுடன்” அதனை சொல்வார்கள்.

ரமலான் மாதத்தில் அதிகாலை தொழுகை முடித்து ஒரு ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி, அதுவும் உங்கள் தந்தையின் தனிப்பிரிவு அதிகாரியாக பணியாற்றியவர், வீட்டிற்கு பாதுகாப்புடன் செல்ல முடியவில்லை. தன் உயிருக்கு ஆபத்து இருப்பது குறித்து அவரே ஒரு காணொளியை வெளியிட்டும் இருந்திருக்கிறார். இதற்கெல்லாம் என்ன தான் பதில் வைத்திருக்கிறீர்கள் ஸ்டாலின்?

வழக்கம் போல உங்கள் அமைச்சர்களை விட்டு, “அது தனிப்பட்ட பிரச்சனை” என்று கடந்துவிடப் பார்ப்பீர்கள். அவ்வளவு தானே? இந்த பதிலை சொல்ல உங்கள் திமுக அரசுக்கு அவமானமாக இருக்காதா?

உங்கள் வழிக்கே வருகிறேன்- தனிப்பட்ட பிரச்சனை என்றாலும் கொலை செய்வதற்கான துணிச்சல் எங்கிருந்து வருகிறது? உங்கள் ஆட்சியில் சட்டத்தின் மீதான அச்சம் துளி கூட இல்லாமல் போனதால் தானே? இதனை நீங்கள் எப்படி மறுப்பீர்கள்?

“கோட்டூர்புரத்தில் ரவுடிகள் இடையிலான தகராறில் நாங்கள் என்ன செய்ய முடியும்?” என்று நீங்கள் நிச்சயம் கேட்கக் கூடும். ஏனெனில், பொறுப்பற்ற பதில்களை அளிப்பது மட்டும் தானே உங்கள் அரசு செய்து வருவது? ஆனால், அந்த கேள்வியைக் கேட்பதற்கு முன், “தமிழ்நாட்டில் தலைதூக்கும் ரவுடியிஸத்தைத் தடுக்கத் தவறியதற்கு யார் பொறுப்பு?” என்று மக்கள் கேட்பார்கள் என்பதை நினைவிற்கொள்ளுங்கள்.

ஜாஹீர் உசேன் கொலையில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தன் நேரடி கட்டுப்பாட்டில் சட்டம் ஒழுங்கு இருப்பதாக போட்டோஷூட் வசனம் பேசியதை நினைவிற்கொண்டு, அந்த இரும்புக்கரத்தின் துரு நீக்கி இனியேனும் செயல்படுத்த வேண்டுமென வெற்று விளம்பர திமுக மாடல் அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்” என எடப்பாடி தெரிவித்துள்ளார்.
சட்டம் – ஒழுங்கு எங்கே இருக்கிறது? eps strong voice against mkstalin on ex si murder

அதேபோன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “நெல்லையில் முதலமைச்சரின் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வெட்டிக் கொலை: தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு எங்கே இருக்கிறது? இந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முந்தைய திமுக ஆட்சியில் கலைஞர் முதலமைச்சராக பணியாற்றிய போது, அவரது பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றியவர் ஜாகிர் உசேன். அதன்பின் விருப்ப ஓய்வு பெற்று நெல்லையில் வாழ்ந்து வந்தார். முதலமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவராக பணியாற்றியவரையே வெட்டிக் கொலை செய்யும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது என்றால், தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமாகியிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஜாகிர் உசேனின் வீட்டிற்கு அருகில் உள்ள நிலத்தை ஆக்கிரமிக்க சிலர் முயற்சி செய்து வந்ததாகவும், அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததால் சிலருடன் ஏற்பட்ட பகை காரணமாகவே அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனால் தாம் எந்த நேரமும் படுகொலை செய்யப்படலாம் என்றும் காணொலி மூலம் அச்சம் தெரிவித்திருந்த ஜாகிர் உசேன் இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், அவரது புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் தான் அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அவரது புகார் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல் அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களிலாவது தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அன்புமணி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: